தமிழக சட்டசபை பொதுத் தேர்தலில், பா.ஜ.,விற்கு, 35 'சீட்டு'கள் வழங்க, அ.தி.மு.க., முன் வந்துள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.
லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில், பா.ஜ., இடம் பெற்றது. அப்போது, ஐந்து தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. நடக்க உள்ள சட்டசபை பொதுத் தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணி மற்றும் சீட்டுகளை உறுதிப்படுத்த, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நேற்று சென்னை வந்தார்.
அவரை முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள், விமான நிலையம் சென்று வரவேற்றனர். அப்போதே, அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி உறுதியானது.கலைவாணர் அரங்கில் நடந்த அரசு விழாவில், முதல்வரும், துணை முதல்வரும், சட்டசபை பொதுத் தேர்தலில், பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணி தொடரும் என, அறிவித்தனர்.
விழா முடிந்த பின், இருவரும் அமித் ஷா தங்கியிருந்த ஓட்டலுக்கு சென்றனர். அங்கு தேர்தல் குறித்து ஆலோசித்தனர். அப்போது பா.ஜ., விற்கு, 54 சீட்டுகளை ஒதுக்கும்படி, அமித் ஷா வலியுறுத்தியதாகவும், அ.தி.மு.க., தரப்பில், 35 சீட்டுகள் வழங்க சம்மதித்ததாகவும் கூறப்படுகிறது.
முதல்வர், துணை முதல்வர் சென்ற பின், பா.ஜ., உயர்மட்ட குழு ஆலோசனைக் கூட்டம், அமித் ஷா தலைமையில் நடந்தது.அதன்பின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
இக்கூட்டத்தில், சட்டசபை தேர்தலுக்கு, கட்சியினரை தயார் செய்வது, அ.தி.மு.க., கூட்டணி உறுதியாகி இருப்பதால், எதிர் கூட்டணியை தோற்கடிக்க, வியூகம் அமைப்பது, மக்களை சந்தித்து, அரசின் திட்டங்களை எடுத்துரைப்பது போன்றவை குறித்து ஆலோசித்துள்ளனர்.சென்னை வந்த அமித் ஷா, விமான நிலையத்தின் வெளியே, சாலையில் நடந்து சென்று, கட்சியினர் வரவேற்பை ஏற்றது.அ.தி.மு.க., உடன் அதிரடியாக கூட்டணியை உறுதி செய்து, முதல்வர் மற்றும் துணை முதல்வரை அறிவிக்க வைத்தது; 'சீட்' ஒதுக்கீட்டை முடிவு செய்தது என, அவரதுதிட்டங்கள், அரசியல் வட்டாரத்தில், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.- நமது நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE