கோவை:கோவையில், சாலை ஓரத்தில் படுத்துறங்கி, மிச்ச மீதி உணவை உண்டு வாழ்ந்த காலங்களை, கனடா கோடீஸ்வரர், மலரும் நினைவுகளாக பகிர்ந்துள்ளார்.
கனடா நாட்டின், டொரோண்டாவைச் சேர்ந்தவர் ஷாஸ் சிம்சன், 50. கனடாவின் சிறந்த சமையல் நிபுணரான இவர், கடந்தாண்டு ஒரு பெரிய ஓட்டலை துவக்கினார். குப்பை தொட்டிகொரோனா காரணமாக, தொழில் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், தன் சிறுவயது கஷ்டங்கள், இதுபோன்ற பாதிப்புகளை கடந்து செல்ல அனுபவமாக இருப்பதாக தெரிவிக்கிறார்.
இவரது, 8 வயதில், கோவையில் சாலையில் படுத்துறங்கி, குப்பை தொட்டி சாப்பாட்டை உண்டு வாழ்ந்ததை, கனடா, 'ஆன்லைன்' மீடியாவில் வெளிப்படுத்தியுள்ளார்.இது தொடர்பாக, ஷாஸ் சிம்சன் கூறியுள்ளதாவது:
இந்தியாவின் தென் மாநிலமான தமிழகத்தில், ஜவுளி நகரான கோவையில், ரயில்வே டிராக்கை ஒட்டியிருந்த குடிசை பகுதியில் பெற்றோர், சகோதரர்களுடன் வசித்து வந்தேன். தந்தை பீடி சுற்றும் தொழிலாளி. ஒருநாள் பஸ் ஸ்டாண்டில், என்னை சகோதரர்கள் விட்டு சென்றனர். அதன்பின், அவர்களை நான் பார்க்க வில்லை. எங்கு செல்வது, என்ன செய்வது என தெரியாமல், சாலையில் சுற்றி திரிந்தேன். அங்குள்ள ஓட்டல் முன், தினமும் அமர்ந்து கொள்வேன்.
மீதமாகும் ஓட்டல் உணவுகளை, அங்குள்ள குப்பை தொட்டியில் கொட்டுவர்.அதை சாப்பிட்டு, வளர்ந்து வந்தேன். இரவு நேரங்களில், சினிமா தியேட்டர் முன் படுத்து துாங்கினேன். என்னை போல் பலரும் படுத்திருப்பர். நான் தான் அந்த இடத்தை சுத்தம் செய்து வைப்பேன். ஒரு நிமிட மாற்றம்ஒரு நாள் குழந்தை நல அதிகாரிகள் என்னை பார்த்து விசாரித்து, மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
அந்த ஒரு நிமிடம் தான், என் வாழ்க்கையை மாற்றியது. அந்த காப்பகத்தில், 8 வயதாக இருந்த என்னை, 1979ம் ஆண்டு, கனடா நாட்டைச் சேர்ந்த சாம்சன் தம்பதி தத்தெடுத்தனர்.என்னை கனடா அழைத்து வந்து செல்லமாக, பாசத்துடன் வளர்த்தனர். என் விருப்பம்போல் படிக்க வைத்தனர். சிறுவயதில் உணவுக்காக அலைந்ததால், பெரிய சமையல் கலைஞராக வேண்டும் என, விரும்பினேன்.
இதன்படி, என் வளர்ப்பு பெற்றோர், சமையல் கலை படிக்க வைத்து, தற்போது பெரிய ஓட்டல் ஒன்றை நடத்தி வருகிறேன். நான், எப்போதும் நேரத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளேன்.22 குழந்தைகள்அன்று, குழந்தைகள் நல அதிகாரிகள் பார்க்கா விட்டால், என் வாழ்க்கை இப்படி மாறியிருக்காது. தற்போது, என்னை போல் உள்ள, 22 குழந்தைகளை தத்தெடுத்து, அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறேன். இதேபோல் சாம்சன் தம்பதி எனக்கு உதவியதால் தான், என்னால் இப்போது மற்றவர்களுக்கு உதவ முடிகிறது.இவ்வாறு, நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE