மதுரை : மதுரை விவசாய கல்லுாரியில் கீரைக்கடை.காம் நிறுவனம் சார்பில் நடந்த கீரை மற்றும் உணவு கண்காட்சியில், உடனடியாக சாப்பிடும் வகையிலான 'கிரீனி மீல்ஸ்' அறிமுகப்படுத்தப்பட்டது.
மதுரை அப்போலோ மருத்துவமனை மூத்த அறுவை சிகிச்சை நிபுணர் சேகர் பசுமை உணவு லோகோவையும், வேளாண் மற்றும் உணவு பதனிடுதல் நிபுணர் நாச்சிமுத்து 'கிரீனி மீல்ஸ்' உணவையும் அறிமுகப் படுத்தினர். விவசாய கல்லுாரி டீன் பால்பாண்டி, சமுதாய கல்லுாரி டீன் அமுதா கலந்து கொண்டனர்.'கிரீனி மீல்ஸ்' குறித்து கீரைக்கடை.காம் நிறுவனர் ஸ்ரீராம் பிரசாத் கூறியதாவது: உலகில் முதல் முறையாக 'கிரீனி மீல்ஸ்' எனப்படும் வாழைப்பூ கூட்டு, கீரைக் கூட்டு மற்றும் வாழைத்தண்டு கூட்டு போன்ற பசுமை உணவுகளை உடனடி பசுமை உணவாக அறிமுகம் செய்துள்ளோம்.
இவை ஆறு மாதம் வரை கெடாத வகையில் நான்கு மடிப்புகளை கொண்ட பாக்கெட்டில் பாதுகாக்கிறோம். உணவை பாதுகாக்கும் ரசாயனம் சேர்க்கவில்லை. இதற்கு முதல் முதலாக காப்புரிமையும் பெற்று ஆஸ்திரேலியா, இலங்கை, ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறோம். 120க்கும் மேற்பட்டகீரை வகைகளை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்து வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்கிறோம் என்றார். கண்காட்சியில் அகத்திக்கீரை, முருங்கை, பாலக்கீரை, வெந்தயக்கீரை உட்பட 50க்கும் மேற்பட்ட கீரை வகைகள் காட்சிக்கு வைக்கப்பட்டன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE