சென்னை : ''தமிழகத்தில் இருப்பது எப்போதுமே சிறப்பு'' என பெருமிதத்துடன் தெரிவித்த
மத்திய அமைச்சர் அமித்ஷா 67 ஆயிரத்து 378 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும் 380 கோடி ரூபாயில் உருவாக்கப்பட்ட கண்ணன்கோட்டை - தேர்வாய்
கண்டிகை புதிய நீர்தேக்கத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று மாலை நடந்த விழாவிற்கு முதல்வர் இ.பி.எஸ். தலைமை வகித்தார். துணை முதல்வர் பன்னீர்செல்வம் தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் திருவள்ளூர் மாவட்டத்தில் 380 கோடி ரூபாயில்உருவாக்கப்பட்ட கண்ணன்கோட்டை - தேர்வாய் கண்டிகை புதிய நீர்தேக்கத்தை மத்திய
உள்துறை அமைச்சர் அமித்ஷா நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்தார்.
மேலும் 61 ஆயிரத்து 843 கோடி ரூபாய் மதிப்பிலான சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டம்; கோவை - அவினாசி சாலையில் 1620 கோடி ரூபாயில் உயர்மட்ட சாலை திட்டம்; கரூர் மாவட்டம் நஞ்சை புகலுாரில் 406 கோடி ரூபாயில் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை அமைக்கும் திட்டம்; 309 கோடி ரூபாயில் சென்னை வர்த்தக மையத்தை விரிவுப்படுத்தும் திட்டம்; இந்திய ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு வல்லுாரில் 900 கோடி ரூபாயில் பெட்ரோலிய முனையம்; திருமுல்லைவாயலில் 1400 கோடி ரூபாய் மதிப்பில் 'லுாப் பிளான்ட்' அமைத்தல்; காமராஜர் துறைமுகத்தில் 900 கோடி ரூபாய் மதிப்பில் புதிய இறங்குதளம் அமைக்கும் திட்டம் ஆகியவற்றுக்கு அமித்ஷா அடிக்கல் நாட்டினார்.

விநாயகர், நடராஜர் சிலைகள் பரிசளிப்பு
விழா நடந்த கலைவாணர் அரங்கிற்கு முதலில் வந்த முதல்வர் துணை முதல்வர் ஆகியோர் அமித்ஷா வருகைக்காக காத்திருந்தனர். அவர் வந்ததும் இருவரும் அவரை வரவேற்று விழா மேடைக்கு அழைத்து சென்றனர்.
விழா மேடையில் எம்.ஜி.ஆர். ஜெயலலிதா படங்கள் வைக்கப்பட்டிருந்தன. அவற்றுக்கு அமித்ஷா மலர் துாவி மரியாதை செலுத்தினார். அவரை தொடர்ந்து முதல்வர் துணை முதல்வர் சபாநாயகர் தனபால் அமைச்சர் எம்.சி.சம்பத் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.
மத்திய அமைச்சர் அமித்ஷாவிற்கு முதல்வர் பழனிசாமி விநாயகர் சிலையையும் துணை முதல்வர் பன் னீர்செல்வம் நடராஜர் சிலையையும் நினைவுப் பரிசாக வழங்கினர்.
விழா நடந்த அரங்கில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க இரண்டு இருக்கைகளுக்கு இடையில் ஒரு இருக்கை காலியாக விடப்பட்டிருந்தது.

விழாவில் பா.ம.க. சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி தே.மு.தி.க. சார்பில் இளைஞர் அணி செயலர் சுதீஷ் பா.ஜ. மாநில தலைவர் முருகன் தமிழக பொறுப்பாளர் ரவி முன்னாள் தேசிய செயலர் எச்.ராஜா ஆகியோர் பங்கேற்றனர்.
விழா நடந்த அரங்கின் நுழைவு வாயிலில் வாழை மரங்கள் கரும்பு மற்றும் மலர்களால் அலங்கார வளைவு அமைக்கப்பட்டிருந்தது. நாதஸ்வரம் மற்றும் மேளதாளத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.
அமித்ஷா கார் மீது மலர்கள் துாவப்பட்டன. கடற்கரை சாலை மற்றும் வாலாஜா சாலையில் அ.தி.மு.க. மற்றும் பா.ஜ. தொண்டர்கள் திரண்டு நின்று வரவேற்பு அளித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE