பொது செய்தி

இந்தியா

புத்தக அறிமுகம்: வரதா வரம்தா

Updated : நவ 22, 2020 | Added : நவ 22, 2020
Share
Advertisement
சென்னை: வாசகர்களே, தமிழில் எத்தனையோ நல்ல புத்தகங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அவை பற்றி பெரும்பாலான வாசகர்களுக்கு தெரிவதில்லை. அதற்காகவே தமிழில் வெளிவரும் சிறந்த புத்தகங்களை தினமலர் இணையதள வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறோம். இந்த வாரம் கீழ்க்கண்ட புத்தகங்களை உங்கள் பார்வைக்கு வைக்கிறோம். வாசிக்கும் தாகமுள்ள வாசகர்கள் தேவையான புத்தகங்களை தேர்வு செய்து
book, bookreview, புத்தக அறிமுகம், வரதா வரம்தா

சென்னை: வாசகர்களே, தமிழில் எத்தனையோ நல்ல புத்தகங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அவை பற்றி பெரும்பாலான வாசகர்களுக்கு தெரிவதில்லை. அதற்காகவே தமிழில் வெளிவரும் சிறந்த புத்தகங்களை தினமலர் இணையதள வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறோம். இந்த வாரம் கீழ்க்கண்ட புத்தகங்களை உங்கள் பார்வைக்கு வைக்கிறோம். வாசிக்கும் தாகமுள்ள வாசகர்கள் தேவையான புத்தகங்களை தேர்வு செய்து படிக்கலாம். வாசிக்கும் இன்பத்தை அனுபவிக்கலாம். ஒவ்வொரு ஞாயிறும் தினமலர் இணையதளத்தில் இந்தப் பகுதி வெளிவரும்.


01. வரதா வரம்தாஆசிரியர்: இந்திரா சவுந்தர்ராஜன்
வெளியீடு: தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்,
21, 'லட்சுமி' சத்யசாய் நகர்,
மதுரை - 625 003.
டோல்ப்ரீ: 1800 425 7700
பக்கம்: 384 விலை: ரூ.425

வரதா வரம்தா என கேட்கும் இந்த புத்தகம் கேட்காமலேயே வரம்தரும் அத்திவரதனாம் வரதராஜன் பற்றிய தொகுப்பு.
ஆசிரியர் இந்திரா சவுந்தர்ராஜனின் தெளிந்த எளிமையான இனிமையான நடைக்கு மற்றொமொரு ரத்தினக்கல் பதித்துள்ளது இந்நுால். காஞ்சியின் வரதனை ராமானுஜரும் வேதாந்த தேசிகனும் போற்றி பாடியதைத் தாண்டி மிலேச்சர்கள் காலத்தில் காஞ்சிக்கு ஏற்பட்ட நிலை, திருச்சி ஸ்ரீரங்கத்திற்கு ஏற்பட்ட நிலை, இந்துக்களின் வழிபாடு கேள்விக்குறியானது குறித்து முழுமையாக விளக்கியுள்ளார்.
ஸ்ரீரங்கத்தில் இருந்து மதுரை வந்து திருமலை வரை வரிசையாக அழகிய மணவாளப்பெருமாள் புறப்பாடாகி 60 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஸ்ரீரங்கம் வந்த கதை படிக்க படிக்க மனதை நெகிழச் செய்கிறது. வரம் தரும் வரதராஜன் அத்திவரதனான கதை, அனந்தசரஸ் குளத்தின் ஜென்மாந்திர பெருமைகள் என கட்டியம் கூறுகிறது.
மாசுபடாத பக்தியை, அந்தக்கால நடைமுறைகளை விளக்கியுள்ள ஆசிரியரின் எழுத்துக்கு வரதன், நிச்சயம் வரம்தருவான். படிக்கும் வாசகர்களுக்கு பக்தியும் முக்தியும் நிச்சயம்.
- எம்.எம்.ஜெ.,


02. நை தாலிம் புதுமைக்கல்விஆசிரியர்: மார்ஜோரி சைக்ஸ்
வெளியீடு: இயல்வாகை பதிப்பகம்
சுதித்தமலை அடிவாரம், ஊத்துக்குளி - 638751.
அலைபேசி: 95001 25125
பக்கம்: 128 விலை: ரூ.125


latest tamil news
மஹாத்மா காந்தியின் புதுமைக் கல்வித்திட்டம் பற்றி விளக்கமாக பேசும் நுால். அந்த திட்டத்தில் பணியாற்றியவரே எழுதியுள்ளார். காந்தி வாழ்க்கையின் முக்கிய பகுதிகளும் இடம் பெற்றுள்ளன. இங்கிலாந்து, கேம்பிரிட்ஜ் பல்கலையில் பயின்றவர் மார்ஜொரி. காந்தியின் லட்சியக் கல்வி திட்டத்தால் ஈர்க்கப்பட்டு, முக்கிய பங்காற்றியுள்ளார்.
காந்தியின் கல்வி சிந்தனை, துளிர்த்து, மலர்ந்து, கனிந்த கதையை குழப்பமின்றி பதிவு செய்துள்ளார். அது வெற்றி பெறாததன் காரணத்தையும் தேடியுள்ளார். அரிய வரலாற்று தகவல்கள் நிறைந்துள்ள நுால். நவீன கல்வியை, எளிமையாக புகட்ட விரும்புவோர் கட்டாயம் படிக்க வேண்டியது.
தமிழில் பெயர்த்துள்ளார் டாக்டர் ஜீவானந்தம். எளிய நடை, தடங்கலற்ற வாசிப்பை உறுதி செய்கிறது.
- அமுதன்


03. ஔவைக் குறள் மூலமும் உரையும்ஆசிரியர்: ஈ.சுந்தர மாணிக்க யோகீஸ்வரர்
வெளியீடு: அழகு பதிப்பகம்
வில்லிவாக்கம், சென்னை - 49.
அலைபேசி: 94441 91256
பக்கம்: 212 விலை: ரூ.185


latest tamil news


Advertisementவீட்டு நெறிப்பால், திருவருட்பால், தன்பால் என்னும் மூன்று பிரிவுகளுடன், 31 அதிகாரங்களைக் கொண்டுள்ளது அவ்வைக் குறள். அதிகாரத்துக்கு, 10 வீதம், 310 குறட்பாக்கள் அமைந்துள்ளன.
பதவுரை, கருத்துரை, விசேஷவுரை என்னும் மூன்று பிரிவுகளில் உரை வழங்கியுள்ளார். ஒவ்வொரு அதிகாரத்திற்கும் விளக்கம் வழங்கி உள்ளதோடு, மேற்கோளாகப் பட்டினத்தார், வள்ளலார் பாடல்களையும் வழங்கியுள்ளார்.
இந்தப் பாடல்களிலிருந்து உரையாசிரியரின் புலமை புலப்படுகிறது. திருவள்ளுவர் போல், அவ்வையாரும் குறட்பாக்களைப் படைத்துள்ளார் என்பதை இந்த நுால் உணர்த்துகிறது. இந்த உரை, 1939ல் முதல் பதிப்பாக வெளியிடப்பட்டுள்ளது. அந்தக் காலத்திற்கு ஏற்ப மொழி நடை அமைந்துள்ளது.
- முகிலை ராசபாண்டியன்


04. இல்லறம் நல்லறமாக...ஆசிரியர்: செ.பிரவின் குமார்
வெளியீடு: செல்வராஜு பதிப்பகம்
கோவை.
அலைபேசி: 98944 22704
பக்கம்: 112 விலை: ரூ.75


latest tamil news
காலத்திக்கேற்ற கருத்தியல்களைக் கொண்ட நேர்மறைக் கதைகளை உள்ளடக்கிய குடும்ப நல்லிணக்கச் சிறுகதை நுால். செய்யும் தொழிலே தெய்வம் எனும் கருத்தை வலியுறுத்தும் கதையில் துவங்குகிறது. ஒற்றுமையால் அனைத்து வகையிலும் சிறந்த ஊரைக் கனவு காணும் இளைஞனின் சமூகப் பொறுப்பு, ஒரு கதையில் சொல்லப்பட்டுள்ளது.
இல்லறக் கடமைகளை நிறைவேற்ற வாழ்க்கையை தியாகம் செய்து முதிர்ந்து விடும் இளைஞனின் திருமண ஏக்கம் மற்றொன்றில் வெளிப்படுகிறது. மனநிலை பாதிக்கப்பட்ட இளைஞனுக்குள் சுரக்கும் அன்பின் ஊற்று போன்ற நுட்பமான உணர்வுகளைத் துல்லியமாக வெளிப்படுத்தும் கதைகள்.
ஒவ்வொரு கதையிலும் மாறுபட்ட களத்துடன், சிறந்த இல்லறத்துக்கான நல்லிணக்க உணர்வுகளையும், அணுகுமுறைகளையும் இயல்பான உரையாடல்களோடு வெளிப்படுத்தும் நுால்.
- மெய்ஞானி பிரபாகரபாபு


05. ஒரு மோகினியின் கதைஆசிரியர்: பூவை எஸ்.ஆறுமுகம்
வெளியீடு: வைகுந்த் பதிப்பகம்
நாகர்கோவில் - 629002-.
தொலைபேசி: 04652 - 227268
பக்கம்: 168- விலை: ரூ.110


latest tamil news
பத்து சிறுகதைகளைக் கொண்ட நுால். கதைகள் பெரும்பாலும் பெண்களை மையப்படுத்திச் செல்கின்றன. மரபு வழிக் கதை சொல்வனவாய் அமைந்துள்ளன.
சந்தர்ப்பச் சூழ்நிலையில் பெண்கள் படும் அவலம், ஆணாதிக்கம் அவர்களை அடிமைப்படுத்த முயலுதல், பெண்களின் சமயோசிதம் முதலான போக்குகளில் கதை சொல்லப்படுகிறது.
ஒரு மோகினியின் கதையில், தாசி அழகால் ஈர்க்கப்பட்டு வாழ்வில் குறுக்கிடும் இளைஞர்கள் பற்றியது. காதல் பொல்லாதது என்ற கதையில், மனைவியை மிகவும் நேசிக்கும் ஒருவன், இள வயது தோழியையும் விரும்புவதை சொல்கிறது.
சில கதைகளின் முடிவு நன்றாகச் செதுக்கப்பட்டிருந்தால் நேர்த்தியாக இருந்திருக்கும். புகழ்பெற்ற பழைய கதாசிரியரின் படைப்பு.
- ராம.குருநாதன்


06. நலமாக வாழ அழகான யோகாஆசிரியர்: பி.கிருஷ்ணன் பாலாஜி
வெளியீடு: ஸ்ரீ பதஞ்சலி மகரிஷி யோகப் பயிற்சி மையம்
37, காமாட்சி அம்மன் நகர்
இணைப்பு, சென்னை - 122.
அலைபேசி: 98400 54246
பக்கம்: 104 விலை: ரூ.300


latest tamil news
உடலுக்கு மருந்து, நல்ல உழைப்பும், யோகாவும், முத்திரையும் ஆகும். உள்ளத்திற்கான மருந்து நல்ல நினைப்பும், தியானமும் ஆகும் என்று கூறும் ஆசிரியர், யோகாசனங்கள், கைவிரல் முத்திரைகள், தியானம் பற்றி விளக்கியுள்ளார். 34 ஆண்டு அனுபவங்களை பாடமாகச் சொல்லி வகுப்பு எடுக்கிறார். பதஞ்சலி யோக சூத்திரம், அஷ்டாங்க யோகா பற்றி விளக்குகிறார்.
சின் முத்திரையில் துவங்கி மகாசிரசு முத்திரை வரை, படத்துடன் விளக்குகிறார். 14 வகை ஆசனங்களை விளக்குகிறார். நாடிசுத்தி, சீத்தளி, வயிறு, மார்பு, தோள்பட்டை முறை மூச்சுப் பயிற்சிகள், சக்கரா தியானம், நாற்காலி தியானத்தை படத்துடன் விளக்கியுள்ளார். குருகுலத்தில் கற்பிப்பது போல் எழுதியுள்ளார்.
கண் வலி போன்ற, 13 வகை நோய்கள் தீர, ஆசனங்களைப் பட்டியலில் தந்துள்ளார். உடலையும், மனதையும் நலமாக்கும் விளக்க நுால்.
- முனைவர் மா.கி.ரமணன்


07. ஸ்ரீவிநாயக புராணம்ஆசிரியர்: வேணு சீனிவாசன்
வெளியீடு: சங்கர் பதிப்பகம்
வில்லிவாக்கம், சென்னை - 49.
தொலைபேசி: 044 - 2650 2086
பக்கம்: 152 விலை: ரூ.150


latest tamil news
வியாசர் எழுதிய பதினெட்டு புராணங்களில் விநாயக புராணம் உபபுராணம் ஆகும். பிருகு முனிவர், வேதவியாசரிடம் கேட்ட விநாயக புராணத்தை வடமொழியில் பாடினார். அதைப் பின்பற்றி, கச்சியப்ப முனிவர் தமிழில் பாடினார்.
இந்நுாலில், 38 பகுதிகள் உள்ளன. பிரம்மாவிடம், வியாசர் விநாயகர் சரிதம் கேட்டது, அரக்கர்களை அழித்த ஆனைமுகன் குறித்து எழுதியவை சுவையாக உள்ளன.
- டாக்டர் கலியன் சம்பத்து


08. பள்ளி புதையல்ஆசிரியர்: சிந்தை ஜெயராமன்
வெளியீடு: வினோத் பதிப்பகம்
சென்னை.
அலைபேசி: 98410 16625
பக்கம்: 130 விலை-: ரூ.200


latest tamil news
விருது பெற்ற ஆசிரியர், 41- தலைப்புகளில் தகவல்களைத் தருகிறார். புத்தகமில்லா பள்ளி, பாடம் நடத்தும் முறை, எங்கே தவறிவிட்டோம் குழந்தை விரும்பும் கற்றல், ஆர்வமும் தேவையும் போன்ற தலைப்புகளில் கருத்துக்கள் தொகுக்கப்பட்டுள்ளன.
அதிகமாகப் படிப்பதால் அறிவு வளர்வதில்லை, தேவையானவற்றைப் படிப்பதால் அறிவு வளரும் என குறிப்பிட்டுள்ளார். கற்றல் முறைகளை எளிய நடையில் கூறுகிறது.
- பேராசிரியர் இரா. நாராயணன்


09. வெள்ளித்திரைக்கேற்ற கதைகள்ஆசிரியர்: ஆர்.மகேந்திரகுமார்
வெளியீடு: மணிமேகலை பிரசுரம்
7, தணிகாசலம் தெரு,
தி.நகர், சென்னை - 17.
தொலைபேசி: 044 - 2434 2926
பக்கம்: 296 விலை: ரூ.230


latest tamil news
மூன்று திரைப்படத்திற்கான மூலக்கதை தான் இந்நுால். அதிகார மையம், கூடா நட்பு, குற்றம் என்றும் குற்றமே ஆகிய தலைப்புகள் கொண்ட கதைகள் சுவாரசியமாக உள்ளன.
உடல் உறுப்பு தான மோசடி, அரசியல் நகர்வு, ஏமாற்றுதல், அதிகாரிகளின் சுயநலம், நட்பு, குடும்பம் என, பல அம்சங்களை உணர்த்துகிறது. சினிமா இயக்கும் ஆசையுள்ளோருக்கு உதவும்.
- டி.எஸ்.ராயன்

Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X