சிறப்பு பகுதிகள்

சத்குருவின் ஆனந்த அலை

எண்ணங்களால் இதைக்கூடச் செய்யமுடியும்!

Added : நவ 22, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
“எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் திண்ணியர் ஆகப் பெறின்” என்று வள்ளுவர் எண்ணங்களின் வலிமை குறித்து எடுத்துரைக்கிறார். மனதில் நாம் எண்ணிய ஒரு விஷயத்தை செய்துமுடிக்கும் வல்லமை எவ்விதத்தில் கிடைக்கப்பெறுகிறது என்பதை சத்குருவின் இந்த கட்டுரையின்மூலம் அறிந்து கொள்ளமுடிகிறது. மேலும், எண்ணங்களை கையாள்வதில் கவனிக்கவேண்டிய விஷயங்களையும் அறிந்துகொள்ள
எண்ணங்களால் இதைக்கூடச் செய்யமுடியும்!

“எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் திண்ணியர் ஆகப் பெறின்” என்று வள்ளுவர் எண்ணங்களின் வலிமை குறித்து எடுத்துரைக்கிறார். மனதில் நாம் எண்ணிய ஒரு விஷயத்தை செய்துமுடிக்கும் வல்லமை எவ்விதத்தில் கிடைக்கப்பெறுகிறது என்பதை சத்குருவின் இந்த கட்டுரையின்மூலம் அறிந்து கொள்ளமுடிகிறது. மேலும், எண்ணங்களை கையாள்வதில் கவனிக்கவேண்டிய விஷயங்களையும் அறிந்துகொள்ள முடிகிறது.

சத்குரு: வாழ்வில் எது வேண்டும் என்று நினைத்தாலும், அது தொழிலோ, வீடோ அல்லது வேறு எதுவாக இருந்தாலும், முதலில் உங்களுக்குத் தோன்றுவது 'அது எனக்கு வேண்டும்' என்ற எண்ணம்தான். இந்த எண்ணம் தோன்றியவுடன், சக்தியின் ஒரு குறிப்பிட்ட பரிமாணத்தால் அந்த எண்ணத்திற்கு வலிமை சேர்த்து, அதை நிஜமாக்கிக்கொள்ள மக்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் தங்கள் சிந்தனையை ஒன்றுகுவித்து, தாங்கள் விரும்பியதை உருவாக்கிக்கொள்ள தேவையான செயல்களில் ஈடுபட்டு, அந்த எண்ணத்தை நிஜமாக்கிக் கொள்ள முயற்சி செய்வார்கள். அம்முயற்சியில் தேவையான தீவிரம் இருந்துவிட்டால், அந்த எண்ணம் ஈடேறிடும். இப்படித்தான் உலகெங்கிலும் உள்ள மக்கள் செயல்படுகிறார்கள்.
சக்திநிலையில் ஆளுமை
உடல் தாண்டிய நிலையில் செயல்படக் கூடிய அளவிற்கு உங்கள் சக்திநிலை அசைவாற்றல் பெற்றிருந்தால், அந்த அசைவாற்றலை விழிப்புணர்வோடு கையாள உங்களுக்கும் தெரிந்திருந்தால், உங்கள் சக்தியை வேறு இடத்தில் செயல்படச் செய்யலாம். இதில் ஒரு பிரச்சனை என்னவென்றால், ஒருவேளை உங்கள் சக்திநிலை மீது தேவையான அளவிற்கு உங்களுக்கு ஆளுமை இல்லையெனில், நீங்கள் வெளியனுப்பிய சக்தியை மீண்டும் உங்களிடத்தில் இழுத்துக் கொள்ள உங்களுக்குத் தெரியாமல் போகலாம். இப்படி இருந்தால், உங்கள் உயிரையும்கூட நீங்கள் இழக்க நேரிடலாம். உங்கள் வாழ்வில் நீங்களே கூட பார்த்திருப்பீர்கள். ஒருவரது ஆசை, ஏக்கம் மிகத் தீவிரமாக இருந்தால், அவர் இளம் வயதிலேயே இறந்துவிடுவார். பலரது ஆசைகள் தீவிரமாக இருப்பதில்லை, தோன்றியவுடனேயே மறைந்திடும். ஆனால் ஏதோ ஒன்று வேண்டும் என்று ஒருவர் மிகத் தீவிரமாக எண்ணி, அந்த ஒன்றே குறியாக இருந்து, அது நடந்தும் விட்டது என்றால், அவர் இளம் வயதிலேயே இறந்துவிடுவார். காரணம், தன் உயிர்சக்தியை வெளியனுப்பத் தெரிந்த அவருக்கு, அதை மீண்டும் தன்னிடம் வரவழைத்துக் கொள்வதற்கு போதுமான திறம் இருப்பதில்லை.

எண்ணம் எப்படி உருவாகிறது?
முதலில் ஒரு எண்ணம் எப்படி உருவாகிறது என்று பார்ப்போம். உங்களுக்குத் தோன்றுகிற எண்ணம் விழிப்புணர்வோடு தோன்றுகிறதா அல்லது உங்களுக்குள் ஏற்கெனவே நுழைந்திட்ட ஆயிரமாயிரம் விஷயங்களின் ஓயாத சுழற்சியினால் அது உருவாயிற்றா? உங்கள் எண்ணங்கள் விழிப்புணர்வோடு உருவாக்கப்படவில்லை என்றால், அது மனதளவில் நடக்கும் பேதி. குவிந்திருக்கும் பழையவற்றின் ஓய்வில்லா பிதற்றல். உங்கள் கட்டுப்பாட்டில் அது இருக்காது. தேவையற்ற சரியில்லா உணவு வயிற்றில் இருக்கும்வரை, வயிற்றுப்போக்கு நிற்காது. இதுவும் அதுபோலத்தான். 'மனபேதி'யை 'எண்ணம்' என்று நீங்கள் அழைத்தலாகாது. கரும்பலகையில் எழுத வேண்டும் என்றால், முதலில் அதை சுத்தமாக துடைக்க வேண்டும். அப்போதுதான் நீங்கள் எழுதுவது அதில் தெளிவாக பதியும். கரும்பலகையில் ஏற்கெனவே ஆயிரமாயிரம் விஷயங்கள் எழுதப் பட்டிருந்தால், அதன் மீது நீங்கள் என்ன எழுதினாலும் அது யாருக்குமே புரியாது, கொஞ்சம் நேரம் சென்றால், உங்களுக்குமே அதில் என்ன எழுதினீர்கள் என்று தெரியாது. அதனால் அந்த இடத்தை முதலில் சுத்தம் செய்யுங்கள், அதன் பிறகு ஒரு எண்ணத்தை விழிப்புணர்வோடு உருவாக்குங்கள். இப்படி உருவாக்கப்பட்ட எண்ணம் முக்கியத்துவம் வாய்ந்தது, ஏனெனில், அது விழிப்புணர்வோடு உருவாக்கப்பட்டிருக்கிறது. இதுபோல் ஒரு எண்ணத்தை உருவாக்கி, மற்ற எண்ண அடைசல்கள் இல்லாமல், அதை தெளிவாக நிலைநிறுத்தினால், அதற்கு அடுத்தபடியாக அந்த எண்ணத்திற்கு தேவையான சக்தியை ஊட்டலாம். ஆனால் முதலில் பலகையை சுத்தம் செய்து, அதன் பிறகு உங்களுக்கு வேண்டியதை அதில் எழுதுவது அவசியம்.

தேவையற்ற குப்பைகளை அகற்றிவிட்டு, சுத்தமாய் இருக்கும் மனதில் ஒரு எண்ணத்தை உருவாக்கினால், அந்த எண்ணமே ஒரு அதிர்வாக, ஒரு சக்தியாக செயல்படும். சக்தியின் துணையின்றி எந்த ஒரு எண்ணமும் உருவாக முடியாது. ஆனால் தெளிவான முயற்சியின் பலனாய் இல்லாமல், தற்செயலாய் உருவாகும் எண்ணத்திற்கு தன்னை ஈடேற்றிக்கொள்ள தேவையான சக்தி இருக்காது. எண்ணங்களை மிகத் தீவிரமான நிலையில் உருவாக்கினால், அந்த எண்ணங்கள் மிக வலியதாக இருக்கும். ஏன், தீவிரமாய் உருவாக்கப்படும் ஒரு எண்ணத்தால் ஒரு மனிதனின் உயிரைக்கூட பறித்திட முடியும். அந்த அளவிற்கு எண்ணங்கள் சக்தி வாய்ந்தவை.

எண்ணத்துடன் தெளிவும் அவசியம்
எண்ணங்களை மையமாகக் கொண்டு செயல்பட நம் மறைஞானத்தில் ஒரு தனிப் பிரிவே உள்ளது. ஆத்திரமான மனமும், மோகத்தால் எரியும் மனமும் தன் நோக்கில் மிகக் கவனமாக இருக்கும் ஒருநிலையான மனங்கள். மனம் இப்படி ஒருநிலையில், ஒரே குறிக்கோளில் முழு கவனத்துடன் செயல்படும்போது, அது மிக சக்தி வாய்ந்த கருவியாகிடும். பெரும்பான்மையான நேரத்தில் மனிதர்களுக்கு இந்த ஒருநிலையான கவனம் எதிர்மறை நோக்கங்களில்தான் உருவாகிறது. நற்செயல்களுக்கு அல்ல. அதனால்தான் நம் கலாச்சாரத்தில் குழந்தைகளிடம், 'கோபத்தில் யாரையும் சபித்துப் பேசாதே,' என்று எச்சரித்து வளர்த்து வந்தோம். கோபத்தில், உங்கள் மனம் தீவிரமாக ஒருநோக்கில் குவியும்போது, நீங்கள் சொல்லும் வார்த்தைகள், வெகு சுலபமாக நிஜமாகிடலாம்.

எனவே பற்பல திசைகளில் அலைபாயாமல், ஒருநிலையில், ஒரே குறிக்கோளுடன், விழிப்புணர்வோடு ஒரு எண்ணத்தை உருவாக்கினால், அது இவ்வுலகில் தன்னை நிறைவேற்றிக்கொள்ளும். எண்ணங்களின் மீது இன்னும் கொஞ்சம் ஆளுமை பெற்றுவிட்டால், இன்னும் அதிகப்படியான விஷயங்களும் சாத்தியப்படலாம். ஆனால் ஆன்மீகப் பாதையில் செல்ல விரும்புவோர் அதில் கவனம் செலுத்த வேண்டாம் என்றே நான் சொல்லுவேன். காரணம், இதில் கவனம் வந்துவிட்டால், ஆன்மீகத்தை விடுத்து அதிலேயே அமிழ்ந்துவிடுவீர்கள். அதனால் எண்ணங்களை தெளிவோடு உருவாக்கி, அத்தெளிவான எண்ணத்திற்கு இருக்கும் இயற்சக்தியில் அது தானாய் நிஜமாகிட வழி செய்யுங்கள்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
லிங்கம்,சென்னை மிக்க நன்றி சத்குரு...🙏🙏🙏
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X