புதுடில்லி:''ஜல் ஜீவன்' திட்டத்தால், ஒன்றரை ஆண்டுகளில், 2.6 கோடி குடும்பங்கள் பயன் அடைந்துள்ளன,'' என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
உத்தர பிரதேசத்தில், முதல்வர் ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது.
குடிநீர் இணைப்பு
இங்குள்ள விந்திய பிராந்தியத்தில், சோன்பத்ரா மற்றும் மிர்சாபூர் மாவட்டங்களில், 5,555 கோடி ரூபாய் செலவில், குழாய் மூலம், வீடுகளுக்கு குடிநீர் வழங்கும் திட்டம், நேற்று துவங்கப்பட்டது, 'வீடியோ கான்பரன்சிங்' வழியாக, இத்திட்டத்துக்கு அடிக்கல் நாட்டி, பிரதமர் பேசியதாவது: நாட்டில் உள்ள ஒவ்வொரு கிராமப்புற வீட்டுக்கும், குடிநீர் இணைப்பு வழங்கும், 'ஜல் ஜீவன்' இயக்கம், ஒன்றறை ஆண்டுக்கு முன் துவக்கப்பட்டது.
மாநில அரசுகளுடன் இணைந்து செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தின் வாயிலாக, இதுவரை, 2.6 கோடிக்கும் அதிகமான குடும்பங்களுக்கு, குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. தங்களது வீடுகளிலேயே குடிநீர் கிடைப்பதால், நம் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் வாழ்க்கை, மிகவும் சுலபமாகி உள்ளது.
பிரச்னை
அசுத்தமான தண்ணீரால் ஏழைக் குடும்பங்கள் இடையே நிலவிவந்த, காலரா, டைபாய்டு, மூளை வீக்கம் போன்ற பல்வேறு நோய்கள், ஜல் ஜீவன் திட்டத்தால் குறைந்துள்ளன.விந்திய பிராந்திய பகுதி இயற்கை வளங்களால் நிறைந்தது. ஆனால் சுதந்திரம் பெற்றதில் இருந்து, தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வந்தது. இப்பகுதியில் பல ஆறுகள் இருந்தாலும், குடிநீர் பிரச்னை இருந்து வருகிறது. ஆனால், இப்போது இந்தப் பிரச்னைக்கு, உ.பி., அரசு தீர்வு கண்டுள்ளது. கொரோனா நோய்த் தொற்றின் அபாயம் இன்னும் நீடிப்பதால், மக்கள் விழிப்புடன் இருக்கவேண்டும். இவ்வாறு, பிரதமர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE