புதுடில்லி:ஜம்மு -- காஷ்மீரின் நக்ரோட்டாவில், பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட, நான்கு பயங்கரவாதிகள், அமாவசை இரவில், 30 கி.மீ., நடந்தே வந்தது உட்பட, பல அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளன.
ஜம்மு -- காஷ்மீரின், நக்ரோட்டா பகுதியில் உள்ள பான் சோதனை சாவடி அருகே, லாரியில் வந்த நான்கு பயங்கரவாதிகளை, பாதுகாப்புப் படையினர், சமீபத்தில் சுட்டுக் கொன்றனர்.
தாக்குதல்
அவர்கள், பாகிஸ்தானின் ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்தது.பயங்கரவாதிகள், காஷ்மீர் பகுதிக்குள் எப்படி ஊடுருவினார்கள் என்பது குறித்து, பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இது குறித்து, பாதுகாப்பு படையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் இருந்து, அமெரிக்கப் படையினர் விலக்கி கொள்ளப்பட்டதை அடுத்து, தலிபான் தாக்குதல்கள் அதிகரிக்கத் துவங்கியுள்ளன.இதன் காரணமாக, தலிபான்களுக்கு நெருக்கமான ஜெய்ஷ் அமைப்பினர், ஜம்மு -- காஷ்மீருக்குள் ஊடுருவி தாக்குதல்கள் நடத்த திட்டமிட்டு வருகின்றனர்.
இதற்காக, சிறப்பு பயிற்சி பெற்ற, 14 பயங்கரவாதிகள், காஷ்மீருக்குள் ஊடுருவும் நோக்கத்துடன், பாக்.,கின் குஜாரன்வாலா பகுதியில் காத்திருக்கின்றனர்.மேலும், அல் -- பாதர் என்ற பயங்கரவாத அமைப்பு மற்றும், லஷ்கர் -- இ -- முஸ்தபா என்ற புதிய அமைப்பு உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத குழுக்களை சேர்ந்த, 200க்கும் மேற்பட்டோர், காஷ்மீருக்குள் ஊடுருவ காத்துஉள்ளனர்.
ஊடுருவல்
இவர்களை தவிர, பாக்.,கின் கைபர் பக்துன்துவா மாகாணத்தில் உள்ள ஜங்கல் -- மங்கல் முகாமில், லஷ்கர் -- இ -- தொய்பா பயங்கரவாதிகள், 23 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.கடந்த, 19ம் தேதி, நம் பகுதிக்குள் சுட்டு வீழ்த்தப்பட்ட பயங்கரவாதிகளின், ஜி.பி.எஸ்., மற்றும் வயர்லெஸ் கருவிகளை சோதனையிட்டதில், பல தகவல்கள் தெரியவந்துள்ளன.
சுட்டு வீழ்த்தப்பட்ட பயங்கரவாதிகள் நால்வரும், கமாண்டோ போர் பயிற்சி பெற்றவர்கள். தற்கொலை படையினராக செயல்பட, ஊடுருவிஉள்ளனர்.பாக்.,கின் ஷாகர்காவில் உள்ள, ஜெய்ஷ் -- இ -- முகமது முகாமில் இருந்து, அமாவாசை இரவில், 30 கி.மீ., துாரம் நடந்தே வந்து, நம் எல்லைப்பகுதியான சம்பாவை அடைந்துள்ளனர்.சம்பாவில் உள்ள, மாவா என்ற கிராமம் வழியாக, அவர்கள் காஷ்மீருக்குள் ஊடுருவி உள்ளனர்.
கடந்த, 19ம் தேதி அதிகாலை, 2:30 மணி முதல், 3:00 மணிக்குள், ஜே.கே.01ஏஎல் 1055 என்ற லாரியில் இவர்கள் ஏறியதற்கு சாட்சி உள்ளது. பின், 3:45 மணிக்கு, அந்த லாரி, சரோர் சுங்கசாவடியை கடந்துள்ளது. நர்வால் பைபாஸ் சாலை வழியாக, அந்த லாரி, காஷ்மீர் நோக்கி வருகையில், அதிகாலை, 4:45 மணிக்கு, பான் சுங்க சாவடியில் மடக்கப்பட்டுள்ளது.
இந்த பயங்கரவாதிகள், ஜெய்ஷ் -- இ -- முகமது அமைப்பின் கமாண்டரும், பதான்கோட் விமானப் படை தளத்தில், 2016ல் நடந்த தாக்குதலுக்கு காரணமான, காசிம் ஜான் உதவியுடன், காஷ்மீருக்குள் ஊடுருவியுள்ளனர். இவர்கள் மீது பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலை, பாக்.,கின் பாவல்பூரில் இருந்து, ஜெய்ஷ் அமைப்பின் கமாண்டர், ராவுப் அஸ்கர் கண்காணித்தது தெரியவந்துள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE