புதுடில்லி: பிரபல, 'டைம்' பத்திரிகை, இந்தாண்டின், 100 சிறந்த கண்டுபிடிப்புகளில் ஒன்றாக, டில்லியைச் சேர்ந்த, அர்நவ் கபூர் உருவாக்கியுள்ள, மனமறிந்து கணினியில் தகவல் திரட்டித் தரும், 'ஹெட்செட்' கருவியை தேர்வு செய்துள்ளது.
அமெரிக்காவில், மாசாசூசெட்ஸ் தொழில்நுட்ப பல்கலை ஆய்வாளரான, அர்நவ் கபூர், 25, சரிவர பேச முடியாதோர், மனதுக்குள் கூறும் தகவலை கிரகித்து, அதை கணினியில் தேடித் தரும், 'ஆல்டர் ஈகோ' என்ற 'ஹெட்செட்' கருவியை உருவாக்கியுள்ளார். காதில் பொருத்திக் கொள்ளக்கூடிய இந்த ஹெட்செட், பேசும் திறன் குறைபாடு காரணமாக, மனதில் நினைப்பதை, வார்த்தையில் முழுமையாக வெளிப்படுத்த இயலாமல் போனாலும், அதை புரிந்து, குறிப்பிட்ட தகவலை கணினியில் தேடித் தந்து விடுகிறது.
உதாரணமாக, 'நாளை மழை பெய்யுமா' என்ற கேள்வியை மனதில் நினைத்தபடி, வாயசைத்தால், அப்போது முகம் மற்றும் குரல்வாய் தசைகளில் ஏற்படும் அசைவுகளை, ஹெட்செட்டில் உள்ள 'சென்சார்'கள் புரிந்து கொள்கின்றன. அதை, கணினிக்கு கடத்தி, 'மானிட்டர்' திரையில், மழை தொடர்பான தகவல்களை திரட்டித் தருகின்றன.
இந்த வகையில், ஆல்டர் ஈகோ கருவி, 92 சதவீத துல்லியத்துடன் செயல்படுவது, பரிசோதனையில் தெரியவந்துள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் செயல்படும் இந்த, ஹெட்செட், விற்பனைக்கு வரும்பட்சத்தில், திக்குவாய் பிரச்னை உள்ளோர், பக்கவாதத்தால், சரிவர பேசமுடியாமல் உள்ள பலருக்கு, வரப்பிரசாதமாக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மனதில் நினைப்பதை, சிறிதளவாவது வாயில் பேச முயற்சித்தால் மட்டுமே, ஆல்டர் ஈகோ புரிந்து கொள்ளும். மற்றபடி, மூளை இடும் கட்டளையை செயல்பாட்டுக்கு கொண்டு வரும் திறன் இதற்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE