அண்ணா பல்கலை துணைவேந்தர் நியமன சர்ச்சை!

Updated : நவ 23, 2020 | Added : நவ 23, 2020
Share
Advertisement
சென்னை: அண்ணா பல்கலை துணைவேந்தர் சுரப்பாவிற்கு எதிராக, தமிழக அரசு உட்பட அனைத்து கட்சிகளும் செயல்பட்டு வருகின்றன. ஒரு பக்கம் அவருக்கு எதிரான விசாரணை; மற்றொரு பக்கம், அவருக்கு ஆதரவாக போராட்டம். 'சுரப்பா நேர்மையானவர், ஆளும் கட்சியினருக்கு ஒத்துழைக்காத காரணத்தால் பழி வாங்கப்படுகிறார்' என்கின்றனர்.இது தொடர்பாக, இரண்டு ஆண்டுகளுக்கு முன், தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை

சென்னை: அண்ணா பல்கலை துணைவேந்தர் சுரப்பாவிற்கு எதிராக, தமிழக அரசு உட்பட அனைத்து கட்சிகளும் செயல்பட்டு வருகின்றன. ஒரு பக்கம் அவருக்கு எதிரான விசாரணை; மற்றொரு பக்கம், அவருக்கு ஆதரவாக போராட்டம். 'சுரப்பா நேர்மையானவர், ஆளும் கட்சியினருக்கு ஒத்துழைக்காத காரணத்தால் பழி வாங்கப்படுகிறார்' என்கின்றனர்.

இது தொடர்பாக, இரண்டு ஆண்டுகளுக்கு முன், தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை பகிர்ந்து கொண்டார், உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஒருவர். மிகவும் நேர்மையானவர் என அனைவராலும் கூறப்பட்ட இந்த தலைமை நீதிபதி, அரசின் எந்த பதவியையும், தன் பதவி ஓய்விற்கு பின் ஏற்கவில்லை.

'பல்கலை துணை வேந்தர்களை தேர்ந்தெடுக்கும் கமிட்டியின் தலைவராக உங்களை நியமிக்க உள்ளோம். நீங்கள் இந்த குழுவில் இருந்தால், அதற்கு ஒரு மரியாதையும், பெருமையும் கிடைக்கும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் நபர் நேர்மையானவராக இருப்பார்' என, நீதிபதியிடம் கவர்னர் கூறினாராம். ஆனால் இதை ஏற்க மறுத்து விட்டாராம் அந்த நீதிபதி.

சுரப்பா விவகாரம், தற்போது உச்சகட்டத்தை அடைந்துள்ள நிலையில், அந்த தலைமை நீதிபதி சமீபத்தில் கூறுகையில், 'நான் அன்று எடுத்த முடிவு எவ்வளவு சரி என இப்போது புரிகிறது. துணைவேந்தர் நியமன விவகாரத்தில் ஏகப்பட்ட அரசியல் உள்ளது. படிப்பு விவகாரத்தில் ஊழல் புகுந்தால் மாணவர்களின் கதி என்னவாகும்' என, வருத்தப்பட்டார்.


ரஜினியுடன் மோடி பேசுவாரா?



அமித் ஷாவின் தமிழக பயணம் முடிந்த மறுநாள், அதாவது இன்று, டில்லியில் அரசியல் ஆலோசனைக் கூட்டம் நடக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. பிரதமர் மோடி, அமித் ஷா, கட்சி தலைவர் நட்டா, நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் ஆகியோருடன், தமிழக, பா.ஜ., பொறுப்பாளர்களும், இந்த கூட்டத்தில் பங்கேற்கஉள்ளனர். தமிழக சட்டசபை தேர்தல் வியூகம் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட உள்ளது. தன் பயணம் வாயிலாக அறிந்த விஷயங்களையும், இந்த கூட்டத்தில் அமித் ஷா விளக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.இந்த கூட்டத்தின் முடிவில், ஒரு முக்கிய முடிவும் எடுக்க உள்ளனர் என்கின்றனர், பா.ஜ., மூத்த தலைவர்கள். ரஜினியுடன், பிரதமர் மோடி போனில் பேச வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது; இது, தமிழகத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் சொல்கின்றனர்.


ராகுலின் 'டிஜிட்டல்' திட்டம்



பீஹார் சட்டசபை தேர்தல் மற்றும் பல மாநிலங்களில் நடந்த இடைத்தேர்தல்களில் ஏற்பட்ட தோல்வியை அடுத்து, காங்கிரசின் மூத்த தலைவர்கள் சிலர், கட்சி மேலிடத்தை விமர்சிக்க துவங்கியுள்ளனர். இதில் நம்ம ஊர் சிதம்பரமும் சேர்ந்துவிட்டார். இதையெல்லாம் பொருட்படுத்தாமல், வழக்கம் போல் புதிய திட்டத்தில் இறங்கிஉள்ளார் ராகுல். அடுத்த ஆண்டு ஜனவரியில், காங்., மாநாடு நடத்தப்பட உள்ளது. இதில் அடுத்த காங்., தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும். இந்த தேர்தலை, 'டிஜிட்டல்'முறையில் நடத்த ராகுல் திட்டமிட்டுள்ளார்.புதிய தலைவரை, நாடு முழுதும் உள்ள, 1,500 அகில இந்திய காங்., உறுப்பினர்கள் ஓட்டளித்து தேர்வு செய்வர். இந்த, 1,500 பேருக்கும், ஒரு அட்டை வழங்கப்படும். அதில், 'பார் கோடும்' உண்டு. இதன் வாயிலாக, உறுப்பினரின் மொத்த ஜாதகமும் தெரிந்து விடும். டிஜிட்டல் முறையில் தேர்தல் நடந்தால், குளறுபடிகள் குறைந்துவிடும் என்பதால், இந்த திட்டமாம். இதை அமல்படுத்த ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில், தமிழகத்தைச் சேர்ந்த, எம்.பி., ஜோதிமணியும் உறுப்பினராக உள்ளார். ராகுல் தான், மீண்டும் தலைவராக வருவார் என்பது அனைவருக்கும் தெரியும்; இருப்பினும், சட்டப்படி தேர்தல் நடத்த வேண்டும். 'கட்சியின் வீழ்ச்சியை தடுத்து நிறுத்தாமல், டிஜிட்டல் முறையில் உட்கட்சி தேர்தலை நடத்துவதில் என்ன பயன்' என, புலம்புகின்றனர், மூத்த தலைவர்கள்.


இடம் மாறும் சிலை!



பார்லிமென்டில், எப்போது ஆர்ப்பாட்டம் அல்லது தர்ணா நடந்தால், எம்.பி.,க்களின் பின், மஹாத்மா காந்தி, அமைதியாக சிலை வடிவில் அமர்ந்திருப்பார். 'டிவி' க்களில் இதை பார்த்திருக்கலாம்.தற்போது புதிய பார்லிமென்ட் கட்டுவதற்கான வேலைகள் துவங்கியுள்ளன. புதிய பார்லிமென்டின் முன், காந்தி சிலை நிறுவ வேண்டும். எனவே, தற்போதுள்ள காந்தி சிலையை பெயர்த்தெடுத்து, புதிய இடத்தில் வைக்க வேண்டும்.பார்லிமென்ட் வளாகத்தில் உள்ள மற்ற சிலைகளும் இடம் மாற வேண்டும். புதிய கட்டடம் கட்டும் வரை, வேறொரு இடத்தில், இந்த சிலைகள் வைக்கப்படும். எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல், மிகவும் கவனமாக, காந்தி உட்பட மற்ற சிலைகளையும் வேறு இடத்திற்கு மாற்றும்படி உத்தரவிட்டுள்ளாராம், லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லா.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X