உடுமலை:உடுமலை கல்வி மாவட்டத்தில், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் சார்பில், பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு நடக்கிறது.பொருளாதாரம், குடும்ப சூழல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், 6 முதல் 18 வயது வரை உள்ள, பள்ளி செல்லாமல் இடை நிற்கும் குழந்தைகள் மற்றும் ஒன்று முதல் 18 வயது வரை உள்ள மாற்றுத்திறன் கொண்டவர்களை கண்டறிந்து, அவர்களை மீண்டும் பள்ளிகளில் சேர்க்கும் நடைமுறையை அரசு செயல்படுத்தி வருகிறது.ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் ஒரு பகுதியாக, அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் சார்பில் இதற்கான கணக்கெடுப்பு, கல்வியாண்டுதோறும், ஏப்., மற்றும் மே மாதங்களில் நடக்கிறது.இதில், கண்டறியப்படும் குழந்தைகள், அந்தந்த பகுதிகளில் உள்ள அரசுப்பள்ளிகளில் அவர்களின் வயதுக்கேற்ப வகுப்புகளில் சேர்க்கப்படுகின்றனர். மார்ச், ஏப்., மே மாதங்களில் கொரோனா பரவல் தீவிரமடைந்ததையொட்டி, இந்த கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. தற்போது, வீட்டிலிருந்தே மாணவர்கள் பாடம் படித்து வருகின்றனர்.பணிச்சூழல் காரணமாக, இடம்பெயர்ந்து வந்துள்ள பல குடும்பங்களில், குழந்தைகள் பள்ளியில் சேர்க்கப்படாமல் உள்ளனர். இத்தகைய குழந்தைகளை கண்டறிந்து பள்ளியில் சேர்க்க, டிச., 10ம் தேதி வரை கணக்கெடுப்பு நடக்கிறது.இக்குழுவில், ஆசிரியர் பயிற்றுனர்கள், மண்டல மேற்பார்வையாளர்கள், பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், தன்னார்வலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், மகளிர் திட்டத்தினர் மற்றும் பல்வேறு துறை அலுவலர்களும், உள்ளனர்.உடுமலை கல்வி மாவட்டத்தில், உடுமலை, குடிமங்கலம் மற்றும் மடத்துக்குளம் வட்டாரங்களில், இந்த கணக்கெடுப்பு, நேற்றுமுன்தினம் முதல் துவங்கி, டிச., 10ம் தேதி வரை நடக்கிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE