காவிரி டெல்டா பகுதியை, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்துள்ள தமிழக அரசு, அந்த பகுதியை, ஹைட்ரோ கார்பன் திட்டத்திலிருந்து பாதுகாக்க, மத்திய அரசுக்கு வலுவான அழுத்தத்தை கொடுக்க தவறிவிட்டது.- ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ
'காவிரி டெல்டா பகுதியை, ஸ்டெர்லைட் போல, முற்றிலும் அழிக்காமல் விட மாட்டீர்கள் போலிருக்கிறது...' என, ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ அறிக்கை.
சென்னை மாநகராட்சிக்கு, 20 ஆயிரம் ரூபாய்க்கு வாங்க வேண்டிய தெருவிளக்குகளைக் கண்காணிக்கும் கருவிகளை, 57 ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கிஉள்ளனர். முறைகேடான டெண்டரை ரத்து செய்து, அதற்கு காரணமான அமைச்சர் மற்றும் அதிகாரிகள் மீது ஊழல் வழக்குப் பதிவு செய்ய, முதல்வர் இ.பி.எஸ்., உத்தரவிட வேண்டும்.- தி.மு.க., - எம்.பி., - டி.ஆர்.பாலு
'ஆதாரங்கள் இருந்தால், வழக்கு தொடரலாமே...' என, போட்டுக் கொடுக்கத் தோன்றும் வகையில், தி.மு.க., - எம்.பி., - டி.ஆர்.பாலு அறிக்கை.
தமிழகத்தின் சில இடங்களில், போலி உரம் விற்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து, இ.பி.எஸ்., அரசு விசாரித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் போலி உர விற்பனையை முற்றிலுமாக தடுக்க, நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.- அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன்
'தமிழகத்தில் வேறு எந்த அரசியல் கட்சித் தலைவரும், 'டச்' பண்ணாத, 'சப்ஜெக்ட்'டா பார்த்து, அறிக்கை வெளியிட்டுள்ளீர்களே...' என, சொல்லத் தோன்றும் வகையில், அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் அறிக்கை.
உண்மையான அ.தி.மு.க., நிர்வாகிகள் மண்புழு மண்ணைப் பதப்படுத்துவது போல, கட்சிக்காக உழைப்பவர்கள். கட்சிக்காக, ஜெ., விசுவாசத்துக்காக, முதல்வரும், துணை முதல்வரும் என்ன சொன்னாலும் அதை செய்யக் கூடியவர்களே உண்மையான தொண்டர்கள்.- அ.தி.மு.க., துணை சபாநாயகர் ஜெயராமன்

'இப்படி, 'ஐஸ்' வைத்தால் தான், கட்சியினர், ஒழுங்காக தேர்தல் பணியாற்றுவர் என்ற எண்ணத்தில், இப்படி கூறுகிறீர்களோ...' என, கேட்கத் தோன்றும் வகையில், அ.தி.மு.க., துணை சபாநாயகர் ஜெயராமன் பேச்சு.
அரசு பள்ளி மாணவர்களுக்கு, மருத்துவ படிப்பில், 7.5 சதவீத இட ஒதுக்கீடு கிடைப்பதற்கு, தி.மு.க., நடத்திய போராட்டங்களே காரணம். தமிழக அரசின் அரசாணையை கவர்னர் மதிக்காமல் இருந்த நிலையில், தி.மு.க.,வின் போராட்டத்திற்கு பிறகே, கவர்னர் ஒப்புதல் அளித்தார்.- தி.மு.க., முதன்மை செயலர் நேரு
'குருவி உட்கார பனம் பழம் விழுந்த கதை தான் உண்மையாக இருக்கும்...' என, கூறத் தோன்றும் வகையில், தி.மு.க., முதன்மை செயலர் நேரு அறிக்கை.
அரசு பள்ளி மாணவர்களுக்கு, 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியதுடன் நிற்காமல், தமிழக அரசு, அந்த மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தையும் வழங்க வேண்டும்.- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலர் பாலகிருஷ்ணன்
'அரசு பள்ளி மாணவர்களை படிக்க வைக்கும், அவர்களின் பெற்றோருக்கு இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும் என்றும் கேளுங்களேன்...' என, கிண்டல் செய்யத் தோன்றும் வகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலர் பாலகிருஷ்ணன் அறிக்கை
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE