கவுகாத்தி: அசாம் முன்னாள் முதல்வரும், காங்., மூத்த தலைவருமான, தருண் கோகோய், மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது, 86.தருண் கோகோய், கடந்த, ஆகஸ்ட் மாதம், கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்குப் பின் குணமடைந்தார்.
எனினும், நோயின் பின்விளைவுகளால் பாதிக்கப்பட்ட அவர், சிகிச்சைக்காக,கடந்த, 2ம் தேதி மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இரு தினங்களுக்கு முன் அவரது உடல் நிலை மோசமடைந்தது. உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாக செயலிழக்கத் தொடங்கின.

நேற்று முன்தினம், அவருக்கு ரத்த சுத்திகரிப்பு செய்யப்பட்டது. எனினும், அவர் ஆபத்தான கட்டத்தில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், இன்று மாலை, மாரடைப்பால் அவர் உயிர் பிரிந்தது. இதையடுத்து, தருண் கோகோய் உடல், திஸ்பூரில் உள்ள அவரது இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.இன்று, அவர் உடல், ஸ்ரீமந்தா சங்கர்தேவா கலாஷேத்ராவிற்கு கொண்டு செல்லப்பட்டு, பொதுமக்கள் அஞ்சலிக்குப் பின், அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும்.
தருண் கோகோய், நான்கு முறை எம்.எல்.ஏ., ஆறு முறை எம்.பி., இரு முறை மத்திய அமைச்சர், மூன்று முறை முதல்வர் என, நீண்ட அரசியல் அனுபவம் பெற்றவர். கடந்த, 2001 முதல் தொடர்ந்து, திதாபர் தொகுதி எம்.எல்.ஏ., ஆகவும் இருந்தவர். அவருக்கு மனைவி, மகள் மற்றும் மகன் உள்ளனர். மகன், கவுரவ், எம்.பி., ஆக உள்ளார். தருண் கோகோய் மறைவுக்கு, ஜனாதிபதி, ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE