புதுடில்லி : 'கடந்த, 2014 -- 29 வரையிலான, 16, 17 மற்றும் 18வது லோக்சபா காலகட்டம், இந்தியா போன்ற இளம் ஜனநாயக நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது' என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
டில்லியில், டாக்டர் பி.டி.மார்க் என்னும் இடத்தில், பார்லிமென்ட் உறுப்பினர்களுக்கான, 80 ஆண்டுகள் பழமை வாய்ந்த, எட்டு பங்களாக்கள் இடிக்கப்பட்டு, அங்கே, மூன்று அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. அதில், 76 புதிய வீடுகள் அமைந்து உள்ளன. இந்த அடுக்குமாடி குடியிருப்பை, பிரதமர் நரேந்திர மோடி, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, நேற்று திறந்து வைத்தார்.
தீர்மானம்
அப்போது அவர் பேசியதாவது:எம்.பி.,க்களுக்காக கட்டப்பட்டுள்ள, கங்கா, யமுனா, சரஸ்வதி என்ற இந்த மூன்று புதிய அடுக்கு மாடி குடியிருப்பு கோபுரங்கள், பசுமை தொழில்நுட்பத்தின் கீழ் கட்டப்பட்டுள்ளன.இதன் கட்டுமான பணிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை விட, 14 சதவீதம் குறைவாகவே செலவாகி உள்ளது. கொரோனா தொற்று காரணமாக, பணிகள் முடங்காமல், திட்டமிடப்பட்ட காலத்திற்குள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
நாட்டில் உள்ள, 130 கோடி மக்களின் கனவுகளை நிறைவேற்றவும், தற்சார்பு என்ற இலக்கை அடையவும், வலுவான தீர்மானத்தை நாம் கொண்டுள்ளோம்.கடந்த, 2014 -- 19 வரையிலான, 16வது லோக்சபாவில், பல முக்கிய திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. அதற்கு அடுத்த, 17வது லோக்சபாவில், பல வரலாற்று சிறப்புமிக்க முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
முக்கியத்துவம்
அடுத்து, 2024 -- 29ல் அமையவுள்ள, 18வது லோக்சபா மிக முக்கியத்துவம் வாய்ந்தது. அதில் நாம் அடைய வேண்டிய வெற்றிகள் நிறைய உள்ளன. தற்சார்பு பிரசாரம் முதல், பொருளாதார வளர்ச்சி இலக்குகள் வரை, நாம் உறுதி கொண்டுள்ள பல திட்டங்களை, இந்த காலகட்டத்தில் அடைய வேண்டும்.
இளைஞர்களின் வாழ்வில், 16 முதல், 18 வயது வரையிலான காலகட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும். அதை போலவே, இந்தியா போன்ற மிக இளம் ஜனநாயக நாட்டின் வளர்ச்சியில், 16 முதல், 18 வரையிலான லோக்சபா, மிகவும் இன்றியமையாதது.கடந்த, ஆறு ஆண்டுகளில் நாம் சாதித்ததை விட, இன்னும் நாம் அடைய வேண்டிய இலக்குகள், சாதனைகள் நிறைய காத்திருக்கின்றன.இவ்வாறு, அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE