பீஹார் மற்றும் சில மாநிலங்களுக்கு, சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தல்களில் காங்கிரஸ் படு தோல்வி அடைந்துள்ளதை எதிர்த்து, கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும், கட்சி தலைமைக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர். இதையடுத்து, ''காங்கிரசின் தோல்விக்கு, தலைமை மற்றும் கீழ்மட்ட தொண்டர்களை மட்டும் குறை கூறக்கூடாது; கட்சி மேலிடம் உட்பட, ஒட்டுமொத்தமாக காங்கிரசில் உள்ள அனைவரும் இதற்கு பொறுப்பேற்க வேண்டும்,'' என, காங்., தலைவர் தாரிக் அன்வர் கூறியுள்ளார்.
பீஹார் சட்டசபை தேர்தல் மற்றும் சில மாநிலங்களுக்கான இடைத்தேர்தல்கள், சமீபத்தில் நடந்தன. இதில், காங்கிரஸ் படு தோல்வி அடைந்தது. இதையடுத்து, பல மூத்த காங்., தலைவர்கள், கட்சி தலைமை மீது, கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இதனால், கட்சிக்குள், முட்டல், மோதல்கள் அதிகரித்து வருகின்றன.
பதிலடி
சமீபத்தில், முன்னாள் மத்திய அமைச்சர், கபில் சிபல், 'பா.ஜ.,வை திடமாக எதிர்கொள்ளும் வலிமை காங்கிரசுக்கு இல்லை என, மக்கள் நினைப்பதால், அக்கட்சியை ஒரு மாற்று சக்தியாக அவர்கள் பார்க்கவில்லை. 'மேலும், 18 மாதங்களாக, முழுநேரத் தலைவர் இல்லாத கட்சியால், மத்திய அரசுக்கு எதிராக எப்படி, வலிமையான எதிர்க்கட்சியாக இருக்க முடியும்' எனக் கேள்வி எழுப்பினார்.மற்றொரு முன்னாள் அமைச்சர், சிதம்பரம், 'உ.பி., குஜராத், ம.பி., உள்ளிட்ட மாநிலங்களில் நடந்த இடைத்தேர்தல் முடிவுகள், காங்கிரஸ் கட்சியின் அடிப்படை கட்டமைப்பில் பலம் இல்லை என்பதையும், அது தொடர்ந்து பலவீனமாகி வருகிறது என்பதையும் நமக்கு உணர்த்துகிறது' எனக் கூறியிருந்தார்.இவர்களுக்கு எதிராக, காங்., இடைக்கால தலைவர் சோனியா மற்றும் அவரது மகன் ராகுல் ஆதரவாளர்களாக கருதப்படும் லோக்சபா காங்கிரஸ் தலைவர், ஆதிர் ரஞ்சன் சவுத்ரியும், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாடும், 'தேர்தல் பணிகளுக்கே வராதவர்கள், தலைமைக்கு எதிராக, கருத்து கூறுகின்றனர். 'இந்த சரிவில் இருந்து, காங்கிரஸ் விரைவில் மீண்டு எழும்' என, பதிலடி தந்தனர்.
இந்த பரபரப்பு ஓய்வதற்குள், நேற்று முன்தினம் ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவரும், மூத்த காங்கிரஸ் நிர்வாகியுமான குலாம் நபி ஆசாத், 'தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் கட்சிக்குள், ஐந்து நட்சத்திர கலாசாரம் தலைதுாக்கியுள்ளது. 'இதனால் பெரும்பான்மையான நிர்வாகிகள், மக்களுடனான தொடர்பை இழந்துவிட்டனர்' என, சாடியிருந்தார்.இவரது கருத்திற்கு எதிராக, பீஹாரை சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர் தாரிக் அன்வர், நேற்று கூறியிருப்பதாவது: கட்சியின் தோல்விக்கு, குறிப்பிட்ட சிலரை மட்டும் குறைசொல்வது, தவறான நடவடிக்கையாகும். காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு, ஒருவகையில் குலாம் நபி ஆசாத்தும் பொறுப்பேற்க வேண்டும். அதேபோல, இதற்கு நானும் ஒரு காரணம் எனக் கூறலாம்.இதன்படி, கட்சியின் தோல்விக்கு தலைமை மட்டுமின்றி அனைவருமே காரணம் தான். எனவே, கட்சியின் தற்போதைய நிலைக்கு, ஒவ்வொருவரும் பொறுப்பேற்க வேண்டும். தலைவர்கள் அனைவரும் பொறுப்புடன் செயல்பட்டிருந்தால், இவ்வளவு பெரிய தோல்வி வந்திருக்காது.
விரிசல்
எனவே, தேர்தல் தோல்விகளுக்கு, கட்சியின் தலைமை உட்பட, ஒட்டுமொத்த காங்கிரஸ் தலைவர்களும் பொறுப்பேற்க வேண்டும். இதை கட்சித் தலைவரிடம், அனைவரும் சேர்ந்து தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.இப்படி காங்., கட்சியில், பல தரப்பிலிருந்தும் தலைமைக்கு எதிராக கூக்குரல்கள் கிளம்புவதால், கட்சியில் பிளவு அதிகரித்து வருகிறது. ஆனாலும், வழக்கம் போல சோனியாவும், ராகுலும் மவுனமாக இருப்பதால் விரிசல் பெரிதாவதாக, அரசியல் ஆர்வலர்கள் கருதுகின்றனர். - நமது டில்லி நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE