கோவை :''தி.மு.க., - காங்., இரு கட்சியினரும் ஒருவரை ஒருவர் நம்புகிறோம்,'' என, தமிழக காங்., பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்தார்.
கோவை, மருதலையில் நேற்று சுவாமி தரிசனம் செய்த பின் அவர் கூறியதாவது:தமிழக அரசு விதிமுறைகளை பின்பற்றுவதில், பாரபட்சம் காட்டுகிறது. அனைவருக்கும் பொதுவாக இல்லாமல், எதிர்க்கட்சிகள் நடத்தும் பேரணி, பொதுக்கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கிறது. பாரபட்சம் காரணமாக, நேற்று முன்தினம் கோவையில் நடந்த, 'ஏர் கலப்பை யாத்திரை'யில் போலீசார் - காங்., தொண்டர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
எங்கள் யாத்திரை மக்களுக்கானது. பா.ஜ., யாத்திரை சுயநலமானது. காங்., எதையும் திணிக்காது. பா.ஜ., பல விஷயங்களை திணிக்கிறது. காங்., கட்சிக்கு இது சவாலான நேரம். கருத்து கூறுவது தவறில்லை. அதே நேரத்தில், கட்சி கட்டுப்பாடுகளை அனைவரும் மதித்து நடக்க வேண்டும்.
மூத்த உறுப்பினர்களாக இருந்தாலும், கட்சியின் கட்டுப்பாடுகளை மீறி, கருத்து தெரிவிப்பது சரியான நடைமுறை அல்ல. தமிழகத்தில், தொகுதி உடன்பாடு குறித்து, இன்னும் முடிவு எடுக்கவில்லை. கடந்த தேர்தலில், காங்., போட்டியிட்ட தொகுதிகளில் மீண்டும் போட்டியிடுமா என்பது குறித்து, தற்போது கூற இயலாது. தி.மு.க., - காங்., கட்சியினர் பரஸ்பரம் நம்புகிறோம். ஒருவருக்கொருவர் உண்மையாக இருக்கிறோம்.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE