நம்மை சுற்றும் மாசு நிறைந்த காற்று
இந்தியா எதிர்கொள்ளும் சவால்களில் மாசிற்கு முக்கிய இடமுண்டு. நீர், நிலம், காற்று என எதையும் விட்டுவைக்காமல் அனைத்தையும் மாசுபடுத்தி வருகிறோம். அதிலும் காற்றினை மாசுபடுத்துவதில் நாம் கில்லாடிகள். காற்று மாசினால் டில்லி அதகளப்பட்டுக் கொண்டிருக்கிறது.
மாசு மரணங்கள்
காற்று மாசு காரணமாகக் கடந்த ஆண்டு உலகில் ஏற்பட்ட உயிரிழப்புகள் பற்றிய "ஸ்டேட் ஆப் குளோபல் ஏர் 2020 அறிக்கை அண்மையில் வெளியானது. உலகம் முழுவதும் 60 லட்சத்து 70 ஆயிரம் பேர் கடந்த ஆண்டு காற்று மாசு காரணமாக இறந்துள்ளனர். இதில் இந்தியாவில் இறந்தவர்கள் 16.7 லட்சம் பேர். உலகம் முழுவதும் காற்று மாசு காரணமாகக் கடந்தாண்டு 4,76,000 குழந்தைகள் பலியாகிஉள்ளனர். இந்தியாவில் பலியான குழந்தைகள் எண்ணிக்கை 1,16,000. காற்று மாசால் அதிக குழந்தைகள் பலியாவது இந்தியாவில்தான் என்பது பதறவைக்கும் செய்தியாகும். "இந்தியாவில் எய்ட்ஸ், மலேரியா, காசநோய் போன்ற நோய் தாக்குதலில் இறப்பவர்கள் எண்ணிக்கையை விட 3 மடங்கு அதிகமானோர் சுற்றுச்சூழல் மாசு பாதிப்பால் இறந்து வருகின்றனர்'' என்று "தி லான்சட்" என்ற சர்வதேச அறிவியல் இதழ் தெரிவிக்கிறது.
காரணங்கள்
வாகனங்கள் வெளியேற்றும் புகை, கட்டடங்கள் இடிப்பு, சுரங்கம் மற்றும் குவாரி தொழில்கள், காய்ந்த பயிர்க் கழிவுகளை எரிப்பது, பட்டாசு வெடிப்பது என மாசு ஏற்படுவதற்குப் பல காரணங்கள் சொல்லலாம். சாலையில் ஓடும் டீசல் வாகனங்களால், சுமார் 20 சதவிகித நைட்ரஜன் ஆக்ஸைடு வெளியேற்றப்படுகிறது என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. இந்த நைட்ரஜன் ஆக்ஸைடுதான் மூச்சுக்கு முடிவுரை எழுதும் பி.எம் 2.5 துகள்கள் உருவாக முக்கிய காரணிகளில் ஒன்றாகும்.
அடுத்து கட்டுமானம். பிரமாண்ட கட்டுமானங்கள் உருவாவதைத் தேசத்தின் வளர்ச்சிக்கான அடையாளமாகப் பார்க்கிறோம். 2022க்குள் கட்டுமான துறையின் மதிப்பு 738.5 பில்லியன் டாலராக இருக்கும் என்று இந்திய அரசு எதிர்பார்க்கிறது. இரும்பு, பெயிண்ட் மற்றும் கண்ணாடி தொழிற்துறையில் முக்கிய பங்களிக்கும் நாடாக இந்தியா விளங்குகிறது. கட்டப்பட்டு வரும் குடியிருப்புகள், அரசு கட்டடங்கள், சாலைகள், வணிக வளாகங்கள் மற்றும் மேம்பாலப் பணிகள் போன்ற பணியிடங்களிலிருந்து துாசிகள் மற்றும் இடிபாடுகளைக் கையாள்வதில் போதிய வழிமுறைகள் இல்லாதது மாசு அதிகரிப்புக்குக் காரணமாகிறது.
இதற்கும் மேலே
காற்று மாசு அடைவதற்கு மேலும் சில காரணிகள் இருக்கின்றன. "மூடப்படாத கழிவுநீர் கால்வாய்கள், திடக் கழிவுகள் மேலாண்மையில் தோல்வி, ஏரிகள் மற்றும் குளங்களின் ஆக்கிரமிப்பு ஆகியவையும் காற்று மாசு ஏற்பட காரணங்கள்" என்கிறது பெங்களூரு பல்கலை. இந்தப் பல்கலை சுற்றுச்சூழல் அறிவியல்துறை ஒரு ஆய்வை மேற்கொண்டது. அதில் காற்றில் பரவும் திட மற்றும் திரவ மாசு தொடர்ந்து அதிகரித்து வருவதாகக் கூறுகிறது.
இதற்குக் காரணங்களாகத் திறந்த நிலையில் இருக்கும் கழிவு நீர் கால்வாய்கள் தான் என்றும் அதிலிருந்து பாக்டீரியா போன்ற நுண்ணுயிர்கள் வேகமாகக் காற்றில் பரவுவதாகவும் தெரிவித்துள்ளது. இந்த நுண்ணுயிரிகள் குளங்கள், ஏரிகள், கழிவுநீர் கால்வாய்கள், செடிகொடிகள், மனித மற்றும் விலங்கு கழிவுகள் என எல்லா இடங்களிலும் வாழக்கூடியது. காற்றில் பரவும் திட மற்றும் திரவ மாசுகளில் 25 சதவிகிதம் இந்த நுண்ணுயிர்களால் தான் ஏற்படுகின்றது" என்கிறது ஆய்வு அறிக்கை.வீடுகளில் கழிவுகளைச் சரியாகக் கையாளாதது, திடக்கழிவுகள் மேலாண்மையில் தோல்வி, மற்றும் கழிவுகளை அகற்றுவதில் பொதுமக்களிடையே சரியான ஒருங்கிணைப்பு இல்லாமை, ஆகியவையே இந்தவகையில் காற்றில் மாசு அதிகம் கலப்பதற்கான காரணங்களாகக் கூறப்படுகிறது. வீட்டிற்குள் ஏற்படும் மாசுபாடுகளால் 5 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
டில்லியில்
டில்லி மற்றும் அதனைச் சுற்றி வாழும் சுமார் மூன்று கோடி பேர் ஆண்டுதோறும் நவம்பர், டிசம்பரில் காற்று மாசுக்கு ஆளாகிறார்கள். இப்போது காற்று மாசால் டில்லி திணறிக்கொண்டிருக்கிறது. நவ.,15 ல் காற்றின் தரக் குறியீடு 468ஆக எகிறியது. சராசரியாக இந்த குறியீட்டு அளவு 100க்கும் கீழ் இருக்க வேண்டும்.2018 கிரீன்பீஸ் அமைப்பு நடத்திய ஆய்வில், உலகில் அதிக மாசுபாடு மிகுந்த நகரங்களில் இந்தியாவில் முப்பது நகரங்கள் உள்ளதாகத் தெரிவித்தது.பஞ்சாப், அரியானா, உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அறுவடைக்குப் பின் அதன் பயிர்க் கழிவுகள் விவசாய நிலங்களில் எரிக்கப்படுகிறது. அதுதான் டில்லியில் நிலவும் கடும் மாசுக்குக் காரணம்.
பாதிப்புகள்
காற்று மாசால் ஆஸ்துமா, புற்று நோய், சுவாசக்கோளாறுகள், பாக்டீரியா, வைரஸ், நுண்ணியிர் மூலம் ஏற்படும் தொற்று நோய்கள் அதிகரிக்கின்றன. இந்தியாவில் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் பாதிக்கப்படுவோரில், புகைபிடிப்பவர்கள் மட்டுமின்றி, புகைப் பழக்கம் இல்லாதவர்களும் சம எண்ணிக்கையில் இருப்பது, நுரையீரல் பாதுகாப்பு அறக்கட்டளை நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்தியாவில் தற்போது, 1000இல் 5 பேர் உயிரிழக்க, நுரையீரல் புற்றுநோய் காரணமாக உள்ளது.
குழந்தைகள் பாதிப்பு
உலகளவில் காற்று மாசு காரணமாக 9 சதவிகித குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். காற்று மாசு காரணமாக ஏற்படும் நுரையீரல் புற்றுநோயால் 25 சதவிகிதம் பேரும், நுரையீரல் நோய்த்தொற்றால் 17 சதவிகிதம் பேரும், பக்கவாதத்தால் 16 சதவிகிதம் பேரும், இதயநோயால் 15 சதவிகிதம் பேரும், நுரையீரல் அடைப்பு நோயால் 8 சதவிகிதம் பேரும் இறக்கின்றனர் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன."நீண்ட காலம் காற்று மாசுக்கு ஆளாகிறபோது அது நிச்சயம் நுரையீரல் தொற்றுநோய்களுக்கு வழிவகுக்கும்" என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலை ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில், "காற்று மாசு பி.எம். 2.5 என்ற அளவில் இருக்கிறபோது, கொரோனா வைரஸ் இறப்பு 8 சதவிகிதம் அதிகரிக்கிறது" எனக் கண்டறிந்துள்ளனர். கொரோனா வைரசுக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்துக்குக் காற்று மாசு ஒரு தடையாக இருக்கும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.
என்ன செய்யலாம்
மின்சாரத்தால் இயங்குகின்ற வாகனங்களை அதிக அளவு பயன்பாட்டுக்குக் கொண்டுவரவேண்டும். வாகனத்தை நல்லமுறையில் பராமரித்தல் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும். கூடுமானவரையில் பொது வாகனங்களில் பயணித்தல் எரிபொருள் தட்டுப்பாட்டையும் துாய்மைக்கேட்டினையும், சாலை நெரிசலையும் மட்டுப்படுத்தும். ஏரி உள்ளிட்ட நீர்நிலைகளைத் துாய்மையாக வைத்திருத்தல் திடக்கழிவு மேலாண்மையைச் சரிவரச் செயல்படுத்துதல் போன்றவை காற்று மாசினைக் குறைக்கும். சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கும் தொழிற்சாலைகளின் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காற்றில் கலந்துள்ள திட மற்றும் திரவ மாசுகளைக் கட்டுப்படுத்த சரியான காற்றோட்டம் இருக்கும் வகையில் கட்டுமானங்கள் அமைக்கப்பட வேண்டும். இதன்மூலம் வீட்டின் உட்புற மாசுகளை கட்டுப்படுத்தலாம். சமையலின் போது புகையினை குறைக்கக் காற்றோட்டமான இடத்தில் மேம்படுத்தப்பட்ட அடுப்புகளை பயன்படுத்தலாம். வீட்டின் அருகில் குப்பைகள் எரிப்பதைத் தவிர்க்கவேண்டும்."குளிரூட்டப்பட்ட அறைகளில் உள்ள இயந்திரங்களைச் சரியாகப் பராமரிக்காததால், அவற்றின் மீது நுண்ணுயிர்கள் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இதனால் காற்று மாசு அதிகரிக்கிறது. இதே நிலைதான் 'ஏசி' வசதியுடைய பேருந்துகள், ஏசி' திரையரங்குகளிலும் ஏற்படுகிறது" என்கிறார் பெங்களூரு பல்கலை பேராசிரியர் நந்தினி.மாசுகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதன் மூலம் சுற்றுச்சூழல் மேம்படும். ஆரோக்கியமான வாழ்வும் சாத்தியமாகும். ப. திருமலைபத்திரிகையாளர், மதுரை84281 15522
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE