பேதி மாத்திரையாக மாறியது வேல் யாத்திரை: தொகுதி ஒதுக்கீட்டில் போச்சு நித்திரை| Dinamalar

பேதி மாத்திரையாக மாறியது வேல் யாத்திரை: தொகுதி ஒதுக்கீட்டில் போச்சு நித்திரை

Updated : நவ 24, 2020 | Added : நவ 24, 2020 | கருத்துகள் (1)
வராண்டாவில் அமர்ந்து, நாளிதழ்களை படித்துக் கொண்டிருந்தாள் சித்ரா.டீ கொடுத்து உபசரித்த மித்ரா, ''அக்கா, எங்க பார்த்தாலும், பா.ஜ., நடத்துற வேல் யாத்திரையை பத்தி, பேசிக்கிறாங்க. அந்தளவுக்கு பேமஸ் ஆகிடுச்சா,'' என, பேச்சை ஆரம்பித்தாள்.''ஆமாப்பா, கைது செய்றதை பத்தி கவலைப்படாம, 'பிளான்' செய்தபடி, ஒவ்வொரு ஊரிலும் யாத்திரை நடத்துறாங்க. சிவானந்தா காலனியில் நடந்த
 பேதி மாத்திரையாக மாறியது வேல் யாத்திரை: தொகுதி ஒதுக்கீட்டில் போச்சு நித்திரை

வராண்டாவில் அமர்ந்து, நாளிதழ்களை படித்துக் கொண்டிருந்தாள் சித்ரா.டீ கொடுத்து உபசரித்த மித்ரா, ''அக்கா, எங்க பார்த்தாலும், பா.ஜ., நடத்துற வேல் யாத்திரையை பத்தி, பேசிக்கிறாங்க. அந்தளவுக்கு பேமஸ் ஆகிடுச்சா,'' என, பேச்சை ஆரம்பித்தாள்.

''ஆமாப்பா, கைது செய்றதை பத்தி கவலைப்படாம, 'பிளான்' செய்தபடி, ஒவ்வொரு ஊரிலும் யாத்திரை நடத்துறாங்க. சிவானந்தா காலனியில் நடந்த கூட்டத்துல, 10 ஆயிரம் பேர் கலந்துக்கிட்டாங்களாம். தடையை மீறி, விழா நடத்துறோம்; யாரும் கலைஞ்சு போகக் கூடாது. போலீஸ்காரங்க, கைது செய்வாங்க. ஒருத்தர் விடுபடாம, வேனில் ஏறணும்னு, மைக்கில் அறிவிப்பு வெளியிட்டாங்களாம்,''

''அப்படியா, அப்புறம் என்னாச்சு,''

''கட்சி அறிவிப்புக்கு கட்டுப்பட்டு, தொண்டர்கள் ரோட்டுல உட்கார்ந்துட்டாங்க. போலீஸ்காரங்களுக்கு என்ன செய்றதுன்னே தெரியலை. யாரையுமே கைது செய்யலை. ஆனா, கைது செய்ததா, 'பிரஸ் ரிலீஸ்' பண்ணிட்டாங்க. நிர்வாகிகள் மேல வழக்கு பதிஞ்சு ஜாமினில் விட்டதா, 'கணக்கு' காண்பிச்சிருக்காங்க,''

''இனி, எப்படி, கைது செய்வாங்க. கூட்டணி பைனல் ஆகிடுச்சுல்ல. அது மட்டுமில்லாம இந்த கூட்டத்தை காண்பிச்சு தொகுதிகளை அடிச்சுப்பேசவும், ஒரு சான்ஸ் ஆயிருச்சு,''

''தொகுதி பங்கீடு எப்படியாம்; ஏதாச்சும் கேள்விப்பட்டீயா,''

''அதுவா, நம்ம மாவட்டத்துல, 10 தொகுதி இருக்கு; 3 தொகுதியில், தாமரையை மலர வைக்கணும்னு, அந்த கட்சிக்காரங்க, 'மூவ்' பண்ணிக்கிட்டு இருக்காங்க. வானதி சீனிவாசன், அண்ணாமலை, செல்வக்குமாருக்கு, 'சீட்' கிடைக்கும்னு பேசிக்கிறாங்க,''

''கூட்டணியில் அங்கம் வகிக்கிற, தே.மு.தி.க., சூலுார் தொகுதியில் ஏற்கனவே ஜெயிச்சிருக்கு. அந்த கட்சியும் தொகுதி கேட்க, வாய்ப்பு இருக்கறதுனால, அ.தி.மு.க., நிர்வாகிகள் குழப்பத்தில் இருக்காங்க,''

''ஏம்ப்பா, அப்படிச் சொல்றே; அ.தி.மு.க., கோட்டைன்னு மார்தட்டுறாங்களே,''

''அக்கா, இப்ப, 9 தொகுதிகள் அ.தி.மு.க., வசமிருக்கு. வரப்போற சட்டசபை தேர்தலில், கூட்டணி கட்சிகளுக்கு பங்கு கொடுத்தால், அ.தி.மு.க., எம்.எல்.ஏ., எண்ணிக்கை குறைஞ்சிடும். கூட்டணி கட்சிக்காரங்க ஜெயிக்கலைன்னா, தொகுதியை இழந்த கணக்காயிடும்.அதனால, கோவை, திருப்பூர், நீலகிரின்னு மூணு மாவட்டத்துல இருக்குற தொகுதிகளை ஒண்ணா சேர்த்து, பங்கீடு செய்றதுக்கு, ஆளுங்கட்சியில், 'பிளான்' வச்சிருக்காங்களாம்,''

''எதிர் முகாமில், என்ன நடக்குதுன்னு, கேள்விப்பட்டீயா,''

''அ.தி.மு.க., மறுபடியும் ஆட்சிக்கு வரக்கூடாதுன்னு, அதிகாரிகளில் ஒரு தரப்பு நினைக்குது. தி.மு.க.,வை சேர்ந்தவங்களுக்கு மறைமுகமா உதவி செஞ்சுக்கிட்டு இருக்காங்க. அதனால, வார்த்தைக்கு வார்த்தை, 'வெற்றி கூட்டணி'ன்னு, தி.மு.க.,காரங்க பேச ஆரம்பிச்சிட்டாங்க,''

''கூட்டணியில், காங்கிரஸ் மட்டுமல்ல; இ.கம்யூ., - மா.கம்யூ., - ம.தி.மு.க., - விடுதலை சிறுத்தைகள் உட்பட ஏகப்பட்ட கட்சிகள் இருக்கறதுனால, தொகுதி பங்கீட்டுல, கொடுக்குறதை கொடுக்கட்டும்; வாங்கிக்கலாம்னு, எல்லா கட்சிக்காரங்களும் நெனைக்கிறாங்களாம்,''

''கோவை தெற்கு தொகுதியை வாங்குறதுக்கு, கதர் சட்டைக்காரங்க, 'மூவ்' பண்ணிட்டு இருக்காங்க. அந்த கட்சியில் ஏகப்பட்ட கோஷ்டி இருக்கறதுனால, தொகுதியை இழந்துடக் கூடாதுன்னு, இந்த தடவை, யார் யாரை வேட்பாளரா நிறுத்தணும்னு, தி.மு.க.,வே முடிவு செய்யப் போகுதாம்,''

''அப்ப, வரப்போற தேர்தல் களம் பரபரப்பா இருக்கும்னு சொல்லு,''

''ஆமாக்கா, ரெண்டு திராவிட கட்சிகளும், வாக்காளர் பட்டியலை இப்பவே பிரிச்சு மேய்ஞ்சுக்கிட்டு இருக்காங்க. ரஜினி கட்சி துவங்காட்டியும், கமல் கட்சி, தனித்து போட்டின்னு சொல்லியிருக்கறதுனால, பயத்துல இருக்காங்க,''

''என்னப்பா, இப்படிச் சொல்ற, கமல் கட்சிக்கு அந்தளவுக்கு செல்வாக்கு இருக்கா, என்ன?''

''அக்கா, அப்படி சாதாரணமா நெனைச்சிட கூடாது. நம்ம மாவட்டத்துல, நடுநிலை வாக்காளர்கள் நிறையா இருக்காங்க. கடந்த லோக்சபா தேர்தல்ல, கமல் கட்சி வேட்பாளருக்கு, 1.40 லட்சம் ஓட்டு விழுந்துச்சு. தொகுதிக்கு சராசரியா, 25 ஆயிரம் வாக்காளர்கள் ஓட்டுப் போட்டிருக்காங்க,''

''கமலுக்கான ஓட்டு வங்கி, திராவிட கட்சிகளின் வெற்றியை பாதிக்கும்ங்கிறதுனால, இரு கட்சிக்காரங்களும் ஓட்டு கணக்கு போட ஆரம்பிச்சிட்டாங்க,''

''கதர் சட்டைக்காரங்களும், விவசாயிகள் எழுச்சி மாநாடு நடத்துனாங்களே,''

''ஆமாக்கா, ஆளுங்கட்சிக்கு இணையா, பிரமாண்ட மேடை அமைச்சிருந்தாங்க; ஆட்சியில் இல்லாமலேயே, இவ்ளோ செலவு செஞ்சிருக்காங்களேன்னு, கட்சி நிர்வாகிகளே அசந்துட்டாங்களாம்,''

''நிர்வாகிகள் ஒவ்வொருத்தரும் பேசிய பேச்சு, பா.ஜ., நடத்தும் வேல் யாத்திரையால், பீதியாகி இருக்குறது, வெளிப்படையா தெரிஞ்சுச்சு. கட்சி தலைவர் அழகிரி பேசும்போது, 'இந்து மதத்துக்கு காங்கிரஸ் எதிரானது கிடையாது'ன்னு, சொல்லியிருக்காரு. அவரது பேச்சில், ஆன்மிக உதாரணங்களே அதிகமா இருந்துச்சாம்,''

''வரப்போற தேர்தல்ல, இந்துக்கள் ஓட்டு, வெற்றியை பாதிக்கும்னு நெனைக்கிறாங்க போலிருக்கு,'' என்ற சித்ரா, ''விமான நிலைய விரிவாக்கத்தை பத்தி, ஏதும் பேச வேண்டாம்னு, வாய்ப்பூட்டு போட்டிருக்காங்களாமே,'' என, 'ரூட்' மாறினாள்.

''ஆமாக்கா, உண்மைதான்! அந்த திட்டத்துக்கு, நிலம் கையகப்படுத்தணும்னா, 2,000 கோடி ரூபா தேவையாம். இப்ப இருக்குற நிதி நெருக்கடியில், அவ்ளோ தொகை செலவழிக்கிறதுக்கு வாய்ப்பில்லையாம். அதனால, விமான நிலைய விரிவாக்கத்தை பத்தி, யாரும் பேசாதீங்கன்னு, அதிகாரிகளுக்கு சொல்லியிருக்காங்களாம்,''

''ஓ... அப்படியா...,'' என்ற சித்ரா, துடியலுார் ஸ்டேஷன் லிமிட்டுல மாமூல் மழை கொட்டுதாம். இது போதாதுன்னு, கள்ளு, கஞ்சா, லாட்டரிச்சீட்டு விற்பனை அமோகமா நடக்குதாம். அப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள பேரின்ப நகரில், பொதுமக்களுக்கும், சட்ட விரோத கும்பலுக்கும் பிரச்னை வந்திருக்கு,''

''லைசென்ஸ் வாங்கி நடத்துறோம்னு, 'தில்'லா சொல்லியிருக்காங்க. மாமூல் கொடுக்குறதை லைசென்ஸ் வாங்கிட்டோம்னு சொல்றாங்க போலிருக்கு. ஸ்டேஷன் லிமிட்டுல என்ன நடக்குதுன்னு கண்காணிச்சு, எஸ்.பி.,க்கு ரகசியமா தகவல் சொல்றதுக்கு தனிப்பிரிவு செயல்படுது. அந்த பிரிவை சேர்ந்தவங்க, ஸ்டேஷனோடு ஐக்கியமாயிட்டாங்க,''

''இவங்களை களையெடுத்தால் மட்டுமே, ஸ்டேஷன் உருப்படும்னு, போலீஸ்காரங்க பேசிக்கிறாங்க,'' என்றபடி, 'டிவி'யை, 'ஆன்' செய்தாள் மித்ரா.'நிவார்' புயல் தொடர்பான செய்தி, ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. அதைக்கவனித்த சித்ரா, ''நம்மூரிலும் கன மழை பெய்யும்னு வானிலை ஆராய்ச்சியாளர்கள் சொல்லியிருக்காங்க; அரசு அலுவலர்கள், எந்நேரமும் 'அலர்ட்'டா இருக்கணும்னு உத்தரவு போட்டிருக்காங்க,'' என்றாள்.

''அப்படித்தான் சொல்லுவாங்க. ஆனா, பாலத்துக்கு கீழ், இடுப்பளவுக்கு தண்ணீ தேங்குனதுக்கு அப்புறம்தான், வேலை செய்றதுக்கே ஆள் வர்றாங்க. மழை தண்ணீ, தானா வடிஞ்சு போறதுக்கு எப்பதான் ஏற்பாடு செய்வாங்களோ,'' என, நொந்து கொண்டாள் மித்ரா.

''கவர்மென்ட் வேலைன்னாலே, அப்படிதான் போலிருக்கு. தெற்கு தாலுகா ஆபீசுக்குள்ள இருக்குற, அனுப்பர்பாளையம் வி.ஏ.ஓ., ஆபீசுல, வாரிசு சான்று கேட்டு விண்ணப்பிச்சா, ரெண்டு மாசம் கழிச்சே, பரிசீலனைக்கே எடுத்துக்கிறாங்களாம். அதுல, ஏகப்பட்ட குறைகளை சொல்லி, நிராகரிச்சிடுறாங்களாம். விண்ணப்பத்தை அடுத்த டேபிளுக்கு அனுப்புறதுக்கே, பிரயத்தனம் செய்ய வேண்டியிருக்குதாம். திருச்சி ரோடு, ஹைவேஸ் காலனியில் இருக்குற, வி.ஏ.ஓ., ஆபீஸ் எந்நேர மும் பூட்டியே கிடக்குதாம்,''

''ஆனா, வி.ஏ.ஓ.,க்களை நம்பி, அவுங்க ஆபீசுக்கு போயி, குறைகளை சொல்லச் சொல்லி, கலெக்டர் உத்தரவு போட்டிருக்காரே,''

''அதுதான், காலக்கொடுமைன்னு சொல்றது,'' என்ற சித்ரா, ''சென்னைக்கு டிரான்ஸ்பராகி போன, போலீஸ் அதிகாரி, வாரந் தவறாமல், விமானத்தில் வந்துட்டு போறாராமே,'' என, வம்புக்கு இழுத்தாள்.

''யெஸ், நீங்க சொல்றது கரெக்ட்டுதான்! உளவுத்துறையில் பணியாற்றிய அந்த அதிகாரி, சென்னைக்கு இட மாறுதலாகி, அஞ்சு வருஷமாச்சு. அவருக்கு ஒதுக்குன வாகனத்தை திருப்பிக் கொடுக்காம, அவரோட மகன், வலம் வந்தாராம். 'ரிட்டையர்மென்ட்' தேதி நெருங்கியதும், வாகனத்தை திரும்பி ஒப்படைச்சிருக்காரு,''

''கொரோனாவால இப்ப, ஓராண்டுக்கு பணி நீட்டிப்பு கிடைச்சிருக்காம். அந்த அதிகாரி, டபுள் டி.ஏ., வாங்குறாராம்; இதுவரைக்கும், 10 லட்சம் ரூபாய் வரை வாங்கியிருக்கிறதா, போலீஸ்காரங்க கணக்கு சொல்றாங்க,''

''அடக்கொடுமையே, ரிட்டையராகுற அதிகாரிகளுக்கு, இப்படி பணி நீட்டிப்பு கொடுத்திட்டே இருந்தா, சீனியாரிட்டியில் காத்திருக்கிறவங்களுக்கு உயர் பதவி கிடைக்காமலேயே போயிடுமே,''என, 'உச்' கொட்டியபடி, சமையலறைக்குள் நுழைந்தாள் சித்ரா.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X