சென்னை :சென்னையில், முன்னாள் கால்பந்து வீரர் ஒருவர், தன், 100வது பிறந்த நாளை, தன் பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகளுடன் கொண்டாடி மகிழ்ந்தார்.கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலைச் சேர்ந்தவர், மேசியா தாஸ். இவர், 1921ம் ஆண்டு, நவ., 21ம் தேதி பிறந்தார். இவரது தந்தை, நீதியுடியன் சாமுவேல் என்பவரிடம் இருந்து, வர்ம கலைக் கற்றுக் கொண்டார்.
கால்பந்து விளையாட்டில் சிறந்து விளங்கிய இவர், மாநிலம் முழுதும் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று, பரிசுகள் பல வென்றார். 'ஸ்காட் கிறிஸ்டியன்' உயர்நிலைப் பள்ளிக்கும், திருவனந்தபுரம் உயர்நிலைப் பள்ளிக்கும் இடையிலான கால்பந்து போட்டியில், ஆட்ட நாயகன் விருதை வென்று, திருவிதாங்கூர் மன்னரிடம் தங்கப்பதக்கம் பெற்றார்.
ஆங்கிலத்தில் இளநிலை பட்டம் பெற்ற இவர், வேலைக்காக இலங்கை சென்றார். அங்கு, ஒரு தனியார் தோட்டத்தில், தலைமை எழுத்தராக சில ஆண்டுகள்பணியாற்றினார்.பின், கொழும்பின் யூனியன் பிரஸ்சில் பணியாற்றினார். இவர், கிரேஸ் டேனியல் என்பவரை, திருமணம் செய்துக் கொண்டார்.இலங்கையில், 40 ஆண்டுகால வாழ்க்கைக்கு பின், குடும்பத்துடன், 1978ல், சொந்த ஊரான நாகர்கோவிலுக்கு திரும்பினார். அங்கு, சொந்தமாக அச்சகம் துவங்கி, 80 வயது வரை, அச்சக பணிகளை வெற்றிகரமாக மேற்கொண்டார்.
இவரது மனைவி கிரேஸ் டேனியலுக்கு, 81 வயது ஆகிறது. தம்பதிக்கு, கிறிஸ்டோபர், 55, ரோஷினி, 49, ஜாய் ஏஞ்சலின், 48 என, மூன்று பிள்ளைகள் உள்ளனர்.தற்போது, தன் பிள்ளைகள் மற்றும் பேரக்குழந்தைகளுடன் சென்னை, போரூரில் வசித்து வரும், மேசியா தாஸ், கடந்த, 21ம் தேதி, 100ம் வயதை எட்டினார். இதை தன், சந்ததியினருடன் கொண்டாடி மகிழ்ந்தார்.வயதில், 'செஞ்சுரி' அடித்த நிலையிலும், அவரது நினைவு மற்றும் பேச்சாற்றல், இன்றும் இளைஞரை போன்று தெளிவாக உள்ளது.
மூச்சு பயிற்சியே காரணம்!
இது குறித்து, 100 வயது இளைஞர் மேசியா தாஸ் கூறியதாவது:எனக்கு, 100 வயது ஆனாலும், இளமையாக தான் உணர்கிறேன். தினமும், அதிகாலையில் எழுந்து, கை, கால்களை வீசி உடற்பயிற்சி மேற்கொள்வேன். பின், மூச்சு பயிற்சி செய்வேன். அதன்பின், 20 நிமிடம் நடைபயிற்சி.
இரவில், படுக்க போகும் முன், மூச்சு பயிற்சி செய்வேன். குறிப்பிட்ட நேரத்தில், தவறாமல் உணவு எடுத்துக் கொள்வேன். இந்த வயதிலும், எது சாப்பிட்டாலும், செரிமானமாகிறது.நம் வேலைகளை, எந்த உடல் பிரச்னை இருந்தாலும், நாமே செய்ய வேண்டும். ஒருநாள் விட்டு விட்டால், முடியாமை, நம் தலையில் ஏறி விடும்.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE