புதுடில்லி: தி.மு.க.,வைச் சேர்ந்த, முன்னாள் மத்திய அமைச்சர், ராஜா உள்ளிட்டோர் மீதான, '2ஜி ஸ்பெக்ட்ரம்' ஊழல் வழக்கின் விசாரணை, டில்லி உயர் நீதிமன்றத்தின் வேறு நீதிபதிக்கு மாறுகிறது.
காங்., தலைமையிலான, ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது, '2ஜி ஸ்பெக்ட்ரம்' ஏலம் விடுவதில் மோசடி நடந்ததாக, சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத்துறை விசாரித்து வருகின்றன. இது தொடர்பாக விசாரித்த, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம், 2017, டிச., 21ல் தீர்ப்பு அளித்தது. வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட, தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா, மறைந்த தி.மு.க., தலைவர் கருணாநிதியின் மகள், கனிமொழி உள்பட அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

இதை எதிர்த்து, சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறை சார்பில், 2018ல், டில்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை, நீதிபதி, பிரிஜேஷ் சேத்தி விசாரித்து வருகிறார்.
வரும், 30ம் தேதியுடன் அவர் பதவி ஓய்வு பெறுகிறார். அதற்குள் வழக்கை விசாரிக்க முடியாது என்பதால், வேறு நீதிபதிக்கு மாற்றும்படி, தலைமை நீதிபதிக்கு, நீதிபதி, பிரிஜேஷ் சேத்தி பரிந்துரை செய்துள்ளார்.
இந்த வழக்கு தற்போது, தினமும் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த பரிந்துரையை அடுத்து, டிச., 1 முதல், வேறு நீதிபதி அல்லது அமர்வு முன், வழக்கின் விசாரணை நடக்க உள்ளது.
இந்நிலையில், 'ஊழல் தடுப்புச் சட்டம், 2018ல் திருத்தப்பட்டது. அதில், இந்த வழக்கில் கூறப்பட்டுள்ள சட்டப் பிரிவுகள் நீக்கப்பட்டுள்ளன. அதனால், தங்கள் மீதான, மேல்முறையீட்டு மனுக்கள் விசாரணைக்கு உகந்ததல்ல' என, ராஜா உள்ளிட்டோர் மனு தாக்கல் செய்திருந்தனர்.
'ஏற்கனவே இருந்த சட்டத்தின்கீழ் வழக்கு நடந்து வருவதால் விசாரணை தொடரும். புதிய சட்டத் திருத்தம், ஏற்கனவே உள்ள வழக்குகளுக்கு பொருந்தாது' என, மனுக்களை தள்ளுபடி செய்தார், நீதிபதி சேத்தி.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE