உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :
தி.நாராயணன், பா.ஜ., செய்தி தொடர்பாளர், சென்னையிலிருந்து எழுதுகிறார் : மொழி அரசியலை முன்னெடுக்கும், தி.மு.க., தலைவர் ஸ்டாலினுக்கு சில கேள்விகள்...

மத்திய அரசு ஊழியரின் குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்டது, கேந்திர வித்யாலயா பள்ளி. பணி மாற்றம் அடிப்படையில், அவர்களின் குழந்தைகள் எங்கு சென்றாலும், ஒரே சீரான பாடத் திட்டத்தில் பயில வேண்டும் என்பதே, அதன் நோக்கம். இது, உங்களுக்கு தெரியுமா?
ஒரு வகுப்பில், 20 மாணவர்கள் படித்தால் மட்டுமே, கே.வி., பள்ளியில், மூன்றாவது மொழி பயிற்றுவிக்கப்படும் என்ற விதி, தி.மு.க., மாநிலத்திலும், மத்தியிலும் ஆட்சியில் இருந்தபோது இருந்ததே... அப்போது ஏன், அதை எதிர்க்கவில்லை?
மூன்றாவது மொழி பயிற்றுவிக்க, தற்காலிக ஆசிரியர் என்பது, 40 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ள நடைமுறை என்பதை, மறந்து விட்டீரா இல்லை மறைத்து விட்டீரா?
கே.வி., பள்ளி நடைமுறையில் புதிதாக எந்த நிபந்தனையையும் சேர்க்கவில்லை என்ற நிலையில், திடீரென கொந்தளித்து அறிக்கை விடுவது, தேர்தலுக்காக தான் என்பது, உண்மை தானே?

புதிய கல்விக் கொள்கையில், தாய் மொழி வழிக் கல்வி உறுதி என்ற நிலையில், அதை நீங்கள் எதிர்ப்பதற்கு காரணம் என்ன? இங்கு யாரும், தமிழ் படிக்கக் கூடாதா?
தி.மு.க., ஆட்சியில் இருந்த போது, கே.வி., பள்ளி துவங்க, மாநில அரசு நிலம் கொடுத்ததா, இல்லையா?
இனி, இப்பள்ளியில், எந்த மாணவரையும் சேர்ப்பதற்கு, தி.மு.க., - எம்.பி.,க்கள் யாரும் பரிந்துரைக்க மாட்டார்கள் என, உறுதி அளிப்பீரா? மூத்த மொழியாம், எங்கள் தமிழை பயன்படுத்தி, மலிவு அரசியல் செய்ய வேண்டாம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE