திருவனந்தபுரம் : சமூக வலை தளம் உட்பட அனைத்து செய்தி ஊடகங்களிலும், தனிநபரை இழிவுபடுத்தும், தவறான செய்திகளை வெளியிட்டால், சிறை தண்டனையுடன் அபராதம் விதிக்கும் சட்டத் திருத்தத்தை நிறுத்தி வைப்பதாக, கேரள முதல்வர், பினராயி விஜயன்
அறிவித்தார்.

கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி கூட்டணி அரசு அமைந்துள்ளது.
சட்டத் திருத்தம்
இங்கு, கேரள போலீஸ் சட்டத்தில் திருத்தம் செய்யும் மசோதாவுக்கு, கவர்னர், ஆரிப் முகமது கான் சமீபத்தில் ஒப்புதல் அளித்தார். அதன்படி, இந்த சட்டத் திருத்தம் அமலுக்கு வந்துள்ளது. புதிய சட்டத் திருத்தத்தின்படி, சமூக வலை தளம் உட்பட எந்த ஊடகத்திலும், தனிநபரை இழிவுபடுத்தும், பொய்யான, தவறான கருத்துக்களை வெளியிடுவது குற்றமாகும்.

இந்தக் குற்றத்தில் ஈடுபடுவோருக்கு, மூன்று ஆண்டுகள் சிறை அல்லது 10 ஆயிரம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும். போலீசுக்கு அதிக அதிகாரம் கொடுக்கும் இந்த சட்டத் திருத்தத்துக்கு, எதிர்க்கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. போராட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன.'இந்தச் சட்டத்தை தவறாக பயன்படுத்த மாட்டோம்' என, பினராயி விஜயன் கூறியிருந்தார்.

ஆலோசனை
ஆனால் போராட்டங்கள் தொடர்கின்றன. இதையடுத்து, முதல்வர், பினராயி விஜயன், நேற்று கூறியாவது:அவதுாறு, பொய் செய்திகள் பரவுவதை தடுக்கவே இந்த சட்டத் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், இது தொடர்பாக, சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சிலர், புதிய
ஆலோசனைகளை வழங்கி உள்ளனர். ஜனநாயகத்தை காக்கும் வகையில், இந்தப் பிரச்னை தொடர்பாக, சட்டசபையில் விவாதித்து முடிவு எடுக்கப்படும். அதுவரை, அமல்படுத்தப்படாது. இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE