கோவை : ''வேளாண் சட்டங்கள் நன்மை அளிக்கிறது என்பது தெரிந்தும், எதிர்க்கட்சியினர் அரசியல் லாபத்துக்காக எதிர்க்கின்றனர்,'' என, மத்திய அமைச்சர் வெளியுறவு இணையமைச்சர் முரளிதரன் கூறினார்.
கோவை மாவட்ட பா.ஜ., அலுவலக கட்டடத்துக்கான பூமி பூஜை நேற்று நடந்தது. இதில், மத்திய இணை அமைச்சர் முரளிதரன் மற்றும் பா.ஜ., மாநிலத்தலைவர் முருகன் பங்கேற்றனர். அதன் பின், முரளிதரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
மத்திய அரசின் வேளாண் பாதுகாப்பு சட்டம் விவசாயிகளுக்கு எதிரானது அல்ல. இந்த சட்டத்தின் வாயிலாக விவசாயிகள் தங்களது பொருட்களுக்கான விலையை நிர்ணயித்து, நாடு முழுக்க எங்கு வேண்டுமானாலும், யாரிடம் வேண்டுமானாலும் விற்பனை செய்ய முடியும். இச்சட்டத்தை எதிர்த்து காங்கிரஸ் கட்சியினர், அரசியல் லாபத்திற்காக போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
கேரளாவில் இயற்றப்பட்டுள்ள சைபர் சட்டம், கருத்து சுதந்திரத்துக்கு எதிரான கொடூர சட்டம். கேரள தங்கக் கடத்தல் வழக்கில் மத்திய அரசின் தலையீடு ஏதுமில்லாமல் விசாரணை நடந்து வருகிறது.இவ்வாறு, மத்திய இணை அமைச்சர் முரளிதரன் கூறினார். மாநில பொதுச்செயலாளர் செல்வக்குமார், பொருளாளர் சேகர் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

சொந்த கட்டடங்களில் பா.ஜ., அலுவலகம்
பா.ஜ., மாநிலத் தலைவர் முருகன் கூறுகையில், ''தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் பா.ஜ.,வுக்கு சொந்த அலுவலகம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. வாணியம்பாடி, திருப்பூர் உள்ளிட்ட இடங்களில் கட்டுமானப் பணிகள் துவங்கி நடந்து வருகின்றன. இக்கட்டடங்கள் பொங்கல் பண்டிகைக்கு முன், திறக்கப்பட உள்ளன. கோவையில் அடிக்கல் நாட்டப்பட்டுள்ள கட்டடம், ஆறு மாதங்களுக்குள் கட்டி முடிக்கப்பட்டு பா.ஜ., தேசியத் தலைவர் நட்டாவால் திறக்கப்படவுள்ளது,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE