திருமங்கலம்: திருமங்கலம் அருகே பழிக்கு பழியாக வாலிபரை வெட்டி கொலை செய்து கண்மாயில் வீசிய சம்பவத்தில் 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருமங்கலம் மம்சாபுரத்தைச் சேர்ந்த பால் நிறுவன ஊழியர் மணிகண்டன். ஜூன் மாதம் புங்கங்குளம் அருகே உள்ள தோட்டத்து வீட்டில் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டார்.இந்த வழக்கின் 2வது குற்றவாளியான அட்டாக் என்ற பிரகாஷ் 35, நவ. 19ல் உசிலம்பட்டி நீதிமன்ற விசாரணைக்கு சென்றுவிட்டு இருசக்கரவாகனத்தில் செக்கானுாரணி ரோட்டில் வந்துள்ளார். மேலஉரப்பனுார், கீழஉரப்பனுார் கண்மாய் நடுவே கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டு, மேலஉரப்பனுார் கண்மாய்க்குள் வீசப்பட்டார்.
இந்த கொலைவழக்கில் மணிகண்டனின் உறவினர் மம்சாபுரத்தைச் சேர்ந்த ரமேஷ்பாபு உட்பட 6 க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர்.தலைமறைவாக இருந்த ரமேஷ்பாபு 35, முத்துராஜா 48, சுகுமார் 28, உதயசூரியன் 40, ஆனையூர்இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த அலெக்ஸ்குமார் 35, திடீர் நகர் முத்துக்குமார் 35, ஜெயந்தன் 30 ஆகியோரை கைது செய்து நேற்று திருமங்கலம் குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி பாரதி முன்பு ஆஜர்படுத்தினர். அவர்களை மேலுார் கிளை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். கொலையில் மேலும் தொடர்புள்ள நபர்கள் குறித்து டி.எஸ்.பி., வினோதினி, இன்ஸ்பெக்டர் முத்து, எஸ்.ஐ.,க்கள் ஆனந்த், ராமகிருஷ்ணன் விசாரிக்கின்றனர்.