பழநி: ''வேல் யாத்திரை தமிழக அரசியலில் திருப்பு முனையை ஏற்படுத்தும்'' என பழநியில் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன் பேசினார்.
கோவையில் இருந்து வந்த வேல் யாத்திரரைக்கு திண்டுக்கல் மாவட்டம் பழநியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. யாத்திரையில் வந்தவர்கள் மலைக்கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தனர். கோவில் செயல் அலுவலர் கிராந்திகுமார் பாடி வரவேற்றார்.பின்னர் மூன்றாம் படைவீடான திருஆவினன்குடி கோயிலில் தரிசித்தனர். பொது கூட்டத்தில் அமைச்சர் முரளிதரன் பேசியதாவது: ''தமிழ் ஒரு வரலாற்று மொழி. அதனால் உலகில் எங்கு சென்றாலும் பிரதமர் மோடி தமிழையும், திருக்குறளையும் மேற்கோள் காட்டி பேசுகிறார்.

தமிழ் கடவுள் முருகனையும், கந்தசஷ்டி கவசத்தையும் இழிவுபடுத்திய கருப்பர் கூட்டத்திற்கு துணையாக இருக்கும் தி.மு.க.,வை வரும் தேர்தலில் தமிழக மக்கள் துாக்கி எறியவேண்டும். தேசியத்தையும், தெய்வீகத்தையும் இழிவுபடுத்துபவர்களுக்கு தமிழகத்தில் இடம் இல்லை. இந்த வேல்யாத்திரை தமிழக அரசியல் வரலாற்றில் திருப்பு முனையாக இருக்கும். கேரளாவில் சபரிமலையை இழிவுபடுத்திய கட்சியில் ஒருவர்கூட எம்.பி.,தேர்தலில் வெற்றி பெறவில்லை. அதுபோல் தமிழகத்திலும் நடக்க வேண்டும். தமிழக பாரம்பரிய, ஹிந்து கலாசாரத்தை போற்றுகிற கட்சியான பா.ஜ.,வை தேர்தலில் ஆதரித்தால் தமிழர் காலாசாரம் பாதுகாக்கப்படும்'' என்றார்.

கனவாகவே இருக்கும்
மாநில தலைவர் முருகன் பேசியதாவது:கருப்பர் கூட்டம் எனும் கயவர் கூட்டத்திற்கு பாடம் கற்பிக்கவும், பிரதமர் மோடியின் திட்டத்தை மக்களுக்கு கொண்டு செல்லவும், கொரோனா கால முன்கள பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கவும் இந்த யாத்திரை நடக்கிறது. கருப்பர் கூட்டத்தையும், கயவர் கூட்டத்தையும் காவிக் கூட்டம் விரட்டும். தி.மு.க.,வினர் காணும் கனவு, கனவாகவே இருக்கும். 2011ம் ஆண்டுக்கு முன்பு மின்சாரம் இல்லாமல் தவிக்க வைத்த தி.மு.க.,வினர் இன்று விடியலை நோக்கி என கிளம்பியுள்ளனர். உ.பி.,யில் ஒரு பெண்ணுக்கு ஏற்பட்ட பிரச்னை குறித்து பேசிய கனிமொழி, தற்போதைய எம்.எல்.ஏ., பூங்கோதை தி.மு.க.,வினரின் காலில் விழுந்தது பற்றி பேசவே இல்லை.

2ஜி வழக்கு தினமும் நீதிமன்றத்தில் நடப்பதை மக்களிடம் மறைக்கவே தி.மு.க., திசை திருப்பும் செயலில் ஈடுபடுகிறது. ஆங்கில புத்தாண்டு, கிறிஸ்துமஸ், ரம்ஜான் விழாக்களுக்கு விடுமுறை அளிப்பது போல தைப்பூசத்திற்கும் அரசு விடுமுறை அளிக்க வேண்டும். பழநியை தனிமாவட்டமாக அறிவிக்க வேண்டும். பழநி வழியாக அதிக ரயில்களை விடவேண்டும் என்று மத்திய அரசிடம் கோரிக்கை வைப்போம்'' என்றார்.
இதையடுத்து யாத்திரை புறப்பட்ட முருகன், துணைத்தலைவர்கள் நரேந்திரன், அண்ணாமலை, பொதுச்செயலாளர்கள் ஸ்ரீனிவாசன், கருப்பு முருகானந்தம், மாவட்ட தலைவர் கனகராஜ், பொதுசெயலாளர் செந்தில்குமார் உட்பட அனைவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE