சென்னை : சென்னை, புதுச்சேரி உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் நிவர் புயல் மிரட்டி வருகிறது. மக்கள் பாதுகாப்பாக இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வரும் நிலையில் சமூகவலைதளமான டுவிட்டரிலும் அதுப்பற்றி அதிகம் பகிரப்பட்டு வருவதால் நிவர் புயல் டிரெண்டிங் ஆனது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள, ‛நிவர்' புயல், மாமல்லபுரத்துக்கும், புதுச்சேரிக்கும் இடையே, நாளை (நவ., 25) கரையை கடக்கிறது. இதனால், தமிழகம் முழுதும் குறிப்பாக கடலோர மாவட்டங்களில் எச்சரிக்கை நிலை அறிவிக்கப்பட்டு, அரசும், அதிகாரிகளும் தயார் நிலையில் உள்ளனர். பேரிடர் மீட்பு குழுவினர், புயல் கடக்கும் மாவட்டங்களில் முகாமிட்டுள்ளனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலுார், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு இடையிலும், மாவட்டங்களுக்கு உள்ளேயும், இன்று பகல், 1:00 மணி முதல், பஸ் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்படுகிறது. மேலும், புயல் மற்றும் மழையால் பாதிக்கக் கூடிய பகுதிகளில், முன்கூட்டியே, 'கரன்ட் கட்' செய்யவும், முடிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் மக்களை தங்களை தற்காத்து கொள்ள பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும், முடிந்தளவு வீட்டினுள் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்களில் நேற்று முதலே பரவலாக மழை பெய்ய தொடங்கிவிட்டது. புயல் நெருங்கி வர வர மழையின் தீவிரமும் சற்றே அதிகரித்து காணப்படுகிறது. இதனால் சாலையில் பல இடங்கள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. புயல் தொடர்பான விஷயங்கள் சமூகவலைதளமான டுவிட்டரில் அதிகளவு பகிரப்பட்டு வருகின்றன.

பலரும் சென்னையில் இந்த இடங்களில் மழை பெய்கிறது, அந்த இடங்களில் மழை பெய்கிறது. இங்கு சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கவனமாக இருங்கள் என எச்சரித்து போட்டோ, வீடியோ உடன் டுவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர். இன்னும் சிலர் புயல் காலத்தில் ஏதேனும் அவசர அழைப்பு எண் தேவைப்பட்டால் இந்த நம்பருக்கு போன் செய்யுங்கள் என குறிப்பிட்டு வருகின்றனர்.
மேலும் புயல் காலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக என்ன செய்ய வேண்டும், பாதுகாப்பான வழிமுறைகள் என்ன என்பதை விழிப்புணர்வு வீடியோ, போட்டோ மற்றும் தகவல்கள் மூலம் பரிமாறி வருகின்றனர். இதனால் #NivarCyclone, #CycloneAlert, #Chennai, #Chennairain, #puducherry உள்ளிட்ட ஹேஷ்டாக்குகள் டுவிட்டரில் தேசிய அளவில் டிரெண்ட் ஆகி வருகின்றன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE