வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் தோல்வியை ஒப்புக்கொள்ள தொடர்ந்து மறுப்பு தெரிவிக்கும் நடப்பு அதிபர் டிரம்ப், ஆட்சி அதிகாரத்தை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடனுக்கு மாற்ற சம்மதித்துள்ளார்.
அமெரிக்காவில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்று, அமெரிக்காவின் 46வது அதிபராக தேர்வானார். ஆனால் நடப்பு அதிபரான டொனால்டு டிரம்ப், ஜனநாயக கட்சியின் வெற்றியை ஒப்புக்கொள்ளாமல் தொடர் குற்றசாட்டுகளை முன் வைத்தார். தேர்தல் முடிவுகளை எதிர்க்கும் சட்ட நடவடிக்கைகளில் டிரம்ப் அணியினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஜோ பைடனுக்கு, முறையாக ஆட்சி அதிகார மாற்றம் செய்வதற்கு டொனால்டு டிரம்ப் சம்மதித்து இருக்கிறார். ஆனாலும், தான் தேர்தலில் தோல்வி அடைந்துவிட்டதாக அவர் இதுவரை முறைப்படி ஒப்புக்கொள்ளவில்லை.

அதிபர் தேர்தல் முடிவுகளை தொடர்ந்து எதிர்ப்பேன் என உறுதியாகக் கூறியுள்ள டிரம்ப், அதிபராக பைடன் பதவியேற்க என்ன செய்ய வேண்டுமோ அவற்றை முறையாகச் செய்ய, ஜெனரல் சர்வீசஸ் அட்மினிஸ்ட்ரேஷன் (GSA) எனும் முக்கியமான அரசு அமைப்பிடம் பரிந்துரைத்து இருக்கிறார். அதிகார மாற்றத்தை முன்னின்று செய்யும் ஜெனரல் சர்வீசஸ் அட்மினிஸ்ட்ரேஷன் அமைப்பு, ஜோ பைடன் தேர்தலில் வெற்றி பெற்றதாகத் தெரிவித்திருந்தது.
இதனைத்தொடர்ந்து, அதிபருக்கான அதிகார மாற்றங்களை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும், அந்த நடவடிக்கைகளை ஜெனெரல் சர்வீசஸ் அட்மினிஸ்ட்ரேஷன் அமைப்பு தொடங்கும் என்றும் டிரம்ப் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். ஜோ பைடன் அணியினர், இந்த அதிகார மாற்றத்தின் தொடக்கத்தை வரவேற்றுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE