துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி
புதுடில்லி: மேற்கு டில்லியின், விகாஸ்புரி பகுதியைச் சேர்ந்தவர், அட்டம் சிங், 70. இவர், அப்பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். நேற்று முன் தினம் மாலை, வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த அட்டம் சிங்கை, இரு சக்கர வாகனத்தில் வந்த, அடையாளம் தெரியாத இருவர், துப்பாக்கியால் சுட்டனர். இதில், அட்டம் சிங் உயிரிழந்தார்.
சிவசங்கர் மீண்டும் கைது
கொச்சி: கேரள தங்க கடத்தல் வழக்கில், அம்மாநில முன்னாள் முதன்மை செயலர் சிவசங்கரை, அமலாக்கத்துறையினர் கைது செய்து, சிறையில் அடைத்துள்ளனர். இந்த வழக்கில், சிவசங்கர் ஜாமினுக்காக விண்ணப்பித்து உள்ளார். இந்நிலையில், இது தொடர்பாக சுங்கத்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்த வழக்கில், சுங்கத் துறை அதிகாரிகளும், நேற்று அவரை கைது செய்தனர். சிவசங்கரை, சுங்கத்துறை அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரிக்க, சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட உள்ளது.
டி.ஆர்.பி., வழக்கில் குற்றப்பத்திரிகை
மும்பை: 'டிவி' நிகழ்ச்சிகளின் பார்வையாளர்களை கணக்கிடுவதற்காக, டி.ஆர்.பி., எனப்படும், நடைமுறை பின்பற்றப்படுகிறது. இதில், சில சேனல்கள் மோசடி செய்து, அதிக பார்வையாளர்கள் இருப்பதை போல கணக்கு காட்டுவதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக, 'ரிபப்ளிக் டிவி' வினியோகப் பிரிவு தலைவர் உட்பட, 12 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கை குற்றவியல் புலனாய்வு பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், இவ்வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகையை, மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில், போலீசார் நேற்று தாக்கல் செய்தனர்.
ஒரே குடும்பத்தில் நால்வர் கொலை
லுதியானா: பஞ்சாப் மாநிலம், லுாதியானாவில் உள்ள மயூர் விஹார் காலனியைச் சேர்ந்தவர், ராஜிவ் சூட். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி, மகன், மருமகள் மற்றும், 13 வயது பேரன் ஆகியோர், மர்மமான முறையில், வீட்டில் கொல்லப்பட்டு கிடந்தனர். வீட்டின் அருகே, ராஜிவ் சூடின் கார், பாதி எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE