புதுடில்லி : கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்ததும், நாடு முழுதும் உள்ள, ஒரு கோடி மருத்துவ பணியாளர்களுக்கு முதல் கட்டமாக, அதை வழங்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக, பட்டியல் தயாரிக்கும் பணியில், மாநில அரசுகள் ஈடுபட்டுள்ளன.
பரிசோதனை
கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில், பல்வேறு நாடுகள் ஈடுபட்டுள்ளன. நம் நாட்டில், ஐந்து மருத்துவ நிறுவனங்களின் தடுப்பூசிகள், இறுதிக்கட்ட பரிசோதனை யில் உள்ளன.'அடுத்த ஆண்டு மார்ச்சுக்குள், தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்துவிடும்' என, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்ததும், நாடு முழுதும் உள்ள டாக்டர்கள், மருத்துவ மாணவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் உட்பட, ஒரு கோடி பேருக்கு, முதல்கட்டமாக தடுப்பூசி வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான நபர்களை அடையாளம் பார்த்து, பட்டியலை தயார் செய்யும்படி, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரசேத அரசுகளுக்கு, மத்திய சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுதும் உள்ள, 92 சதவீத அரசு மருத்துவ மனைகள் மற்றும் 55 சதவீத தனியார் மருத்துவமனைகளை சேர்ந்தவர்களின் விபரங்கள் ஏற்கனவே சேகரிக்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ளவர்களின் விபரங்கள் சேகரிக்கும் பணி, இன்னும் ஒரு வாரத்தில் முடிவடையும் என்றும் கூறப்படுகிறது.இந்த பணியை முடுக்கி விடும்படி, மாநில அரசுகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக, மத்திய அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இது குறித்து மேலும் அவர் கூறியதாவது:கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்ததும், முதல்கட்டமாக, 30 கோடி பேருக்கு அதை வழங்க, மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.அதில், டாக்டர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட, ஒரு கோடி மருத்துவ பணியாளர்கள் முதல் நிலையில் உள்ளனர்.
பாதுகாப்பு
அதற்கு அடுத்தபடியாக, இரண்டு கோடி மாநகராட்சி ஊழியர்கள், போலீஸ் மற்றும் பாதுகாப்பு படையினருக்கு வழங்கப்படும்.அதன் பின், உடல்நலக் கோளாறுகள் உள்ள, 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும், 'கோமார்பிடைட்டீஸ்' எனப்படும், இரண்டுக்கும் அதிகமான நாள்பட்ட நோய் உள்ள, 50 வயதுக்கு உட்பட்டவர்கள் என, 26 கோடி பேருக்கு வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.
மத்திய அரசுக்கு நீதிமன்றம் 'நோட்டீஸ்'
கொரோனா பரிசோதனைக்கு, 900 ரூபாயில் இருந்து, 2,800 ரூபாய் வரை, ஒவ்வொரு மாநில அரசுகளும், ஒவ்வொரு விதமாக கட்டணம் வசூலிப்பதாகவும், இதை, 400 ரூபாய் என, நாடு முழுதும், ஒரே கட்டணமாக நிர்ணயிக்க வேண்டும் எனக் கோரி, உச்ச நீதிமன்றத்தில், பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.இம்மனு, நேற்று விசாரணைக்கு வந்தது. இது குறித்து, மத்திய அரசு விளக்கம் அளிக்கும்படி, உச்ச நீதிமன்றம் 'நோட்டீஸ்' அனுப்பி உத்தரவிட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE