ராம்விலாஸ் பாஸ்வானின் மனைவியை ஆதரிக்க, ஐக்கிய ஜனதா தளம் முன்வருவது சந்தேகமே என்பதால், அந்த ராஜ்யசபா சீட்டுக்கான இடைத்தேர்தலில், தன் சொந்த வேட்பாளரையே களமிறக்க, பா.ஜ., தயாராகி வருகிறது.
மத்திய அமைச்சராக இருந்த, லோக் ஜனசக்தி கட்சியின் ராம்விலாஸ் பாஸ்வான் வகித்து வந்த ராஜ்யசபா எம்.பி., பதவி காலம், வரும், 2024, ஏப்ரலில் முடிவடைய இருந்தது.
எதிர்பார்ப்பு
சமீபத்தில் அவர் காலமானதால், அவரது எம்.பி., பதவிக்கான இடம் காலியாக உள்ள நிலையில், அதை நிரப்ப வேண்டிய பணிகள் துவங்கியுள்ளன. இதற்காக, அடுத்த மாதம், 14ல், இடைத்தேர்தலை நடத்த, தலைமைத் தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.தேர்தலுக்கான கால அட்டவணை அறிவிப்பு, நாளை வெளியாகஉள்ள நிலையில், அந்த இடத்தை, யார் கைப்பற்றுவர் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
ராம்விலாஸ் பாஸ்வான் மறைந்த சில நாட்களிலேயே, அவரது ராஜ்யசபா சீட், அவரது மனைவி ரீனா பாஸ்வானுக்குத்தான் என தகவல்கள் வெளியாயின. பா.ஜ.,வும் சம்மதித்து விட்டதாக கூறி, அவரையே நிறுத்த லோக் ஜனசக்தி தயாரானது.பீஹார் சட்டசபை தேர்தல் அனைத்தையுமே தலைகீழாக புரட்டிப் போட்டு விட்டது. தற்போதும், ரீனா பாஸ்வானை நிறுத்தவே, லோக் ஜனசக்தி விரும்புகிறது.
அதற்கான ஒப்புதலை, பா.ஜ.,விடம் இருந்து, சிராக் பாஸ்வான் எதிர்பார்க்கிறார்.மொத்தம், 243 எம்.எல்.ஏ.,க்கள் உள்ள பீஹார் சட்டசபையில், ஒரு ராஜ்யசபா எம்.பி., சீட்டை கைப்பற்ற வேண்டுமெனில், 122 பேர் ஆதரவு தேவை. ஆளும் கூட்டணியின் பலம், 125 பேர் என்றாலும், சிராக் பாஸ்வானிடம் இருப்பது, ஒரே ஒரு எம்.எல்.ஏ., மட்டுமே.பா.ஜ.,வைத் தாண்டி, கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளமும் ஆதரிக்க முன்வந்தால் மட்டுமே, வெற்றியை நினைத்துப் பார்க்கவே முடியும்.
உள்குத்து
கடந்த சட்டசபைத் தேர்தலில், எதிர்க்கட்சிகளை விட, நிதிஷ் குமாரை அதிகம் விமர்சித்தது சிராக் பாஸ்வான்தான்.கூட்டணியை விட்டு வெளியேறி, ஐக்கிய ஜனதாதளத்தை எதிர்த்து, வேட்பாளர்களை நிறுத்தி, அதன் வெற்றி வாய்ப்பை, லோக் ஜனசக்தி கெடுத்தது.இதனால், ரீனா பாஸ்வானை ஆதரிக்க, ஐக்கிய ஜனதா தளம் முன்வருவது சந்தேகமே. இந்த இடத்தில் தான், தனக்காக, பா.ஜ., கை கொடுக்க முன்வருமா என, சிராக் பாஸ்வான் எதிர்பார்க்கிறார். பா.ஜ.,வோ, அமைதி காக்கிறது. ஐக்கிய ஜனதா தளத்திடம், சிராக் பாஸ்வானுக்காக பேச முடியாது. அவ்வாறு பேசினால், பெரும் பிரளயமே ஏற்படலாம்.
காரணம், தேர்தலில், சிராக்கை தனியாக நிற்க வைத்து, உள்குத்து வேலை செய்ததே, பா.ஜ.,தான் என்ற பேச்சு பரவலாக உள்ளது. இந்நிலையில், ராஜ்யசபா சீட்டுக்காக பரிந்து பேசினால், அந்த பேச்சு உண்மைதான் என்றாகிவிடும்.மேலும், பீஹாரில் ஆட்சியமைத்து சில வாரங்களே ஆகிறது. இந்நிலையில், ராஜ்யசபா சீட்டுக்காக, சிராக் பாஸ்வான் ஆதரவு நிலை எடுத்தால், அது ஐக்கிய ஜனதா தளம்- - பா.ஜ., கூட்டணி ஆட்சிக்கே சிக்கல் ஏற்படுத்திவிடலாம்.
மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், 2019ல், லோக்சபாவுக்கு போட்டியிட்டு எம்.பி.,யானதை அடுத்து, அவர் வகித்து வந்தது ராஜ்யசபா இடத்தைத்தான், ராம்விலாஸ் பாஸ்வானுக்கு, பா.ஜ., வழங்கியது.
சொந்த வேட்பாளர்
எனவே,அந்த இடம் தங்களுக்கானது என்றே, பா.ஜ., கருதுகிறது. இந்த கணக்கை வைத்துப் பார்க்கும்போது, ராம்விலாஸ் பாஸ்வான் வகித்து வந்த ராஜ்யசபா எம்.பி., பதவிக்கான இடத்தை கைப்பற்ற, தன் சொந்த வேட்பாளரையே களமிறக்க, பா.ஜ., தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
- நமது டில்லி நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE