வாஷிங்டன்:அமெரிக்க அதிபர் தேர்தல் முடிந்து, 20 நாட்கள் கடந்துள்ள நிலையில், நிர்வாக மாற்றம் தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு, அதிபர் டொனால்டு டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிந்து, ஜனநாயகக் கட்சியின், ஜோ பைடன் அதிபராக வென்றதாக அறிவிக்கப்பட்டது.ஆனாலும், தேர்தல் முடிவுகளை ஏற்க, குடியரசு கட்சியின், அதிபர், டொனால்டு டிரம்ப் தொடர்ந்து மறுத்து வருகிறார். இது தொடர்பாக பல வழக்குகளும் தொடரப்பட்டுள்ளன.
புதிய அதிபர் தேர்வு செய்யப்பட்டதும், நிர்வாக மாற்ற நடவடிக்கைகளில், ஜி.எஸ்.ஏ., எனப்படும் பொது சேவை நிர்வாகம் அமைப்பு ஈடுபட வேண்டும். முதலில், தேர்தல் முடிவு களை, இந்த அமைப்பு உறுதி செய்ய வேண்டும். ஆனால், டிரம்பால் நியமிக்கப்பட்டுள்ள இந்த அமைப்பின் நிர்வாகி எமிலி மர்பி, இதுவரை, முறைப்படி எதையும் அறிவிக்கவில்லை. அதனால், நிர்வாக மாற்றம் தொடர்பான நடவடிக்கைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், நிர்வாக மாற்றம் தொடர்பான நடவடிக்கைகளுக்கு தயாராக இருப்பதாக, பைடன் குழுவுக்கு, எமிலி மர்பி கடிதம் எழுதியுள்ளார்.கடிதத்தில் அவர் கூறியுள்ளதாவது: நிர்வாக மாற்றம் நடவடிக்கைகளை தாமதப்படுத்தும்படி, யாரும் என்னை நிர்ப்பந்தம் செய்ய வில்லை. சட்ட விதிகளுக்கு உட்பட்டே செயல்பட்டு வருகிறோம். நிர்வாக மாற்றம் தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்ய தயாராக உள்ளோம்.இவ்வாறு, கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, சமூக வலை தளங்களில் வெளியிட்டுள்ள செய்தி களில், அதிபர் டிரம்ப் கூறியுள்ளதாவது:நிர்வாக மாற்றம் மேற்கொள்வதற்கு, எமிலி மர்பி அழைப்பு விடுத்துள்ளார். நாட்டின் நலனைக் கருத்தில் வைத்து, இதற்கு ஒப்புதல் அளிக்கிறேன்.நிர்வாக மாற்றம் தொடர்பான நடவடிக்கைகள் உடனடியாக துவங்கும்.அதே நேரத்தில், இந்த தேர்தலில் மிகப் பெரிய மோசடி நடந்துள்ளது. தோல்வியை ஒப்புக் கொள்ள மாட்டேன். என் சட்டப் போராட்டம் தொடரும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
மீண்டும் ஜான் கெர்ரி
முன்னாள் வெளியுறவு அமைச்சரான ஜான் கெர்ரி, மீண்டும் முக்கிய பொறுப்பை ஏற்க உள்ளார். ஜோ பைடன் நிர்வாகத்தின், சுற்றுச்சூழலுக்கான துாதராக, அவர் நியமிக்கப்பட்டு உள்ளார்.பருவ நிலை மாறுபாடு தொடர்பான பாரிஸ் ஒப்பந்தத்தில் அமெரிக்கா இணைவதில் முக்கிய பங்காற்றியவர், கெர்ரி. இந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகும் முடிவை, அதிபர் டொனாடு டிரம்ப் எடுத்திருந்தார்.
தேசிய பாதுகாப்பு கவுன்சிலில் சுற்றுச்சூழலுக்கான துாதராக கெர்ரி பொறுப்பேற்க உள்ளார். இதன் மூலம், பாரில் ஒப்பந்தத்தில், அமெரிக்கா மீண்டும் இணையும் வாய்ப்பு அதிகரித்து உள்ளது. இதற்கிடையே, நிதி அமைச்சராக, மத்திய வங்கியின் முன்னாள் தலைவரான ஜெனட் யெலன் நியமிக்கப்படுவார் என, பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம், நிதி துறைக்கு முதல் பெண் அமைச்சர் கிடைக்க உள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE