அடையாறு : புயல் காற்றில் விழும் மரக்கிளைகளை உடனுக்குடன் அகற்ற, அடையாறு மண்டலத்தில் லாரிகள் பற்றாக்குறை உள்ளதால், இதற்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
அடையாறு மண்டலத்தில், செயல்திறன் அளவீட்டு முறையில், குப்பை அகற்றும் பணி நடக்கிறது. இந்த பணியை, 'உர்பசர்-சுமித்' என்ற நிறுவனம் செய்கிறது.வீடுகளில் இருந்து, மக்கும் குப்பை, மக்காத குப்பையை தரம் பிரித்து வாங்கும் பணி, இன்னும் முழுமை பெறவில்லை. குறிப்பாக, குடிசை பகுதிகளில், அனைத்து குப்பையும் ஒரே தொட்டியில் தான் கொட்டப்படுகிறது. இது ஒருபுறமிருக்க, மரக்கிளைகளை அகற்ற, லாரிகள் பற்றாக்குறை உள்ளது. புயல் எதிரொலியால், நேற்று முன்தினம் மற்றும் நேற்று, காற்று பலமாக வீசியது.
இதில், மரங்களின் கிளைகள் ஒடிந்து விழுந்தன. அடையாறு மண்டலத்தில், 80க்கும் மேற்பட்ட இடங்களில், மரக்கிளைகளை அகற்ற வேண்டி இருந்தது. இதற்கு லாரிகள் பற்றாக்குறை ஏற்பட்டதால், வழக்கமான குப்பை ஏற்றும், 'காம்பெக்ட்' லாரியில், மரக்கிளைகள் ஏற்றி அகற்றப்பட்டன.இதனால், வழக்கமான குப்பையை அகற்ற முடியாமல், ஆங்காங்கே தேங்கியது. மேலும், தடிமனான மரக்கிளைகளை, 'காம்பெக்ட்' லாரியில் ஏற்ற முடியாமல் ஊழியர்கள் சிரமப்பட்டனர்.
இன்று, புயல் வேகமாக வீச வாய்ப்புள்ளதால், போக்குவரத்துக்கு இடையூறாக, சாலையில் விழும் மரக்கிளைகளை, உடனுக்குடன் அகற்ற வேண்டி உள்ளது.இதற்கு ஏற்ப, லாரிகள் தயார் நிலையில் வைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE