தென் சென்னை புறநகரில், கடந்த சில மாதங்களாக, 'காஸ் ஏஜன்சி' பெயரில், வீடு புகுந்து பணம் பறிக்கும் மோசடி பெண்களின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது.
தென்சென்னை புறநகர் பகுதிகளான ஆலந்துார், ஆதம்பாக்கம், நங்கநல்லுார், உள்ளகரம், மடிப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில், கடந்த சில மாதங்களாக, இரண்டு பெண்கள் உலா வருகின்றனர்.அவர்கள், தங்களை காஸ் ஏஜன்சியினர் எனவும், ஐ.ஓ.சி., தலைமையக பரிந்துரையின்படி, ஆய்விற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக கூறுகின்றனர்.சம்பந்தப்பட்ட வீட்டின், காஸ் இணைப்பு எண், மொபைல் போன் ஆகியவற்றை தெளிவாக கூறி, நம்பிக்கை ஏற்படுத்துகின்றனர்.
பின், 'வீட்டில் உள்ள காஸ் இணைப்பில், ரெகுலேட்டர் குழாய் சரியில்லை, அடுப்பில் பிரச்னை உள்ளது' என, பல புகார்களை கூறி, இணைப்பை துண்டிப்பதாக பயமுறுத்துகின்றனர்.பின், நிறுவனத்தை சமாளிப்பதாக கூறி, 3,000 ரூபாய் முதல், 7,000 ரூபாய் வரை பணத்தை பறித்து செல்கின்றனர்.இதற்கு உதாரணமாக, நேற்று முன்தினம், ஆதம்பாக்கம், குன்றக்குடி நகரைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் - -செண்பகவள்ளி என்ற வயதான தம்பதியிடம், 5,000 ரூபாய் பணம் பறித்து சென்றுள்ளனர்.சம்பந்தப்பட்ட காஸ் ஏஜன்சியிடம் விசாரித்தபோது, அதுபோன்று யாரையும் அனுப்பவில்லை என்பது தெரியவந்தது.
ஏஜன்சி பணி நேரம் தவிர்த்தே, இந்த மோசடி நடக்கிறது. இது குறித்த புகார்களை, காவல் துறையும் கண்டுகொள்வதில்லை.கடந்த, 2013ம் ஆண்டில், இதுபோன்ற மோசடி கும்பல், தங்களின் கைவரிசையை காட்டி நுாற்றுக்கணக்கானோரிடம், பணம் பறித்தது குறிப்பிடத் தக்கது. எனவே, நுகர்வோர், இதுபோன்ற மோசடி பேர்வழிகளை கண்டு ஏமாற வேண்டாம் என, காஸ் ஏஜன்சியினர் எச்சரித்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE