கிண்டி : அடைப்பு ஏற்பட்டுள்ள பகுதியில், குழாய் கழிவுநீரை மோட்டார் உதவியுடன் இறைத்து, சாலையில் விடும் நடவடிக்கைக்கு, பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
சென்னையில், கன மழையின்போது, கழிவு நீர் குழாயில் மழைநீரை விடுவதால், சாலை மட்டத்தை விட, தாழ்வான பகுதியில் உள்ள வீடுகளில், கழிவு நீர் பிரச்னை அதிகரிக்கும்.கடந்த சில நாட்களாக, கிண்டி, வேளச்சேரி, தரமணி, ஆதம்பாக்கம் பகுதியில், வீடுகளில் கழிவு நீர் தேங்குவது அதிகரித்தது. இங்கு, 30 ஆண்டுகளுக்குமுன் பதித்த குழாயால், ஆங்காங்கே அடைப்பு, விரிசல் ஏற்பட்டுள்ளன. தற்போதைய மக்கள் தொகைக்கு ஏற்ப, குழாய் அளவு இல்லாததால், மழை காலங்களில் கழிவு நீர் பாதிப்பு அதிகரிக்கிறது.
இதை தடுக்க, அடைப்பு உள்ள பகுதியில், மோட்டார் மூலம் குழாய் கழிவு நீர் இறைக்கப்பட்டு, சாலையில் விடப்படுகிறது. இதற்கு, பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இது குறித்து, பொதுமக்கள் கூறியதாவது:கழிவு நீரை மோட்டார் மூலம் இறைத்து, சாலையில் விடுவது சரியான தடுப்பு நடவடிக்கை இல்லை; இதனால், தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. அடைப்பு உள்ள பகுதியில், கழிவு நீரை லாரியில் இறைத்து வெளியேற்ற வேண்டும். இதற்கு, மாநகராட்சி, குடிநீர் வாரிய அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE