மும்பை:மும்பையில், பண மோசடி வழக்கில் தொடர்புடைய சிவசேனா எம்.எல்.ஏ., பிரதாப் சர்நாயக் வீடுகள் உட்பட அவருக்கு சொந்தமான, 10 இடங்களில், அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
மஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, தேசியவாத காங்., மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைந்து உள்ளது.இம்மாநிலத்தின் ஓவலா- - மைஜ்வாடா தொகுதியின் சிவசேனா, எம்.எல்.ஏ., பிரதாப் சர்நாயக், 56. கட்சி பேச்சாளரான இவர் மீது, தனியார் செக்யூரிட்டி நிறுவனத்திற்கு எதிரான பண மோசடி வழக்கு தொடர்பாக, அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், மும்பை மற்றும் தானேவில் உள்ள பிரதாபின் வீடுகள் உட்பட, அவருக்கு சொந்தமான, 10 இடங்களில், நேற்று அதிகாலை நேரத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் உடனிருந்தனர். இந்த சோதனையில் பல்வேறு ஆவணங்களை கைப்பற்றிய அதிகாரிகள், அவரது மகன் விஹாங்கை, மும்பையில் உள்ள அவர்களுக்கு சொந்தமான வீட்டிற்கு விசாரணைக்காக அழைத்து சென்றனர்.
'ரிபப்ளிக் டிவி' தலைமை செய்தி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி மீது, 2018ல் பதிவு செய்யப் பட்ட தற்கொலைக்கு துாண்டுதல் வழக்கு கிடப்பில் போடப்பட்டது. இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க கோரி கடிதம் எழுதி பரபரப்பை ஏற்படுத்தியவர், எம்.எல்.ஏ., பிரதாப் சர்நாயக். அதைத் தொடர்ந்து கைதான அர்னாப், ஜாமினில் விடுவிக்கப்பட்டார். அதுமட்டுமின்றி, 'மாநிலத்திற்கு தீங்கு விளைவிக்கும் கருத்துகளை சமூக வலைதளங்களில் பதிவிடும், நடிகை கங்கனா ரணாவத் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' என, சட்டசபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றவும் கோரினார்.
அமலாக்கத்துறை நடவடிக்கை குறித்து, சிவசேனா எம்.பி., சஞ்சய் ராவத் கூறும்போது, ''ஒரு அரசியல் கட்சியின் கிளை நிறுவனமாக, அமலாக்கத்துறை செயல்படக்கூடாது. ''மாநில அரசுடன் தொடர்புடைய சிலரை, மன ரீதியாக துன்புறுத்த நினைக்கின்றனர்; இது அவர்களுக்கும் எதிரொலிக்கும்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE