சென்னை : ''மெரினா கடற்கரை உள்ளிட்ட கடலோர பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்,'' என, சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் கேட்டுக்கொண்டார்.
வடகிழக்கு பருவமழை மற்றும் வங்கக் கடலில் உருவான, 'நிவர்' புயலால், சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில், பலத்த மழை பெய்து வருகிறது.இதற்காக, மீட்பு பணிகளில் ஈடுபட, சென்னையில், ஆயுதப்படை எஸ்.ஐ.,க்கள் தலைமையில், 12 பேரிடர் மீட்பு குழு, இடர் மீட்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளன.இவர்கள் மழை நீர் வெளியேற்றம், சாலைகளில் மரங்களை அகற்றுதல் உள்ளிட்ட, பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இப்பணிகளை, சென்னை, எழும்பூர் மாண்டியத் சாலையில், போலீஸ் கமிஷனர் நேற்று ஆய்வு செய்தார்.
அப்போது, மழை நீர் அகற்றும் பணியை பார்வையிட்ட அவர், பாதுகாப்பு மற்றும் மீட்பு குழுவினர், மாநகராட்சி மற்றும் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசித்து, துரித நடவடிக்கைகளை முடுக்கிவிட்டார்.பின், அவர் கூறியதாவது:சென்னையில், மழைநீர் அகற்றுதல் உள்ளிட்ட நிவாரண பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பணிகளில், மாநகராட்சி, மின் வாரியம், மெட்ரோ ரயில், வருவாய் உள்ளிட்ட துறை அதிகாரிகளுடன் இணைந்து, போலீசார் செயல்படுகின்றனர்.
புயல் மற்றும் வெள்ளம் மீட்பு பணிகளை ஒருங்கிணைக்க, சென்னை, வேப்பேரியில் உள்ள, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், 24 மணி நேர, சிறப்பு காவல் கட்டுப்பாட்டு அறை திறக்கப் பட்டுள்ளது.மேலும், சென்னை முழுதும், அதிகாரிகள் மற்றும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர். இவர்கள், மீட்பு பணிகளை மேற்கொள்வது, பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்வது, அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்கின்றனர். சீரான போக்குவரத்துக்கும், வழிவகை செய்யப்பட்டு உள்ளது.
ஊரடங்கு காரணமாக, மெரினா கடற்கரை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வது தடை செய்யப்பட்டுள்ளது. கடல் சீற்றம் அதிகரித்து வரும் நிலையில், தடையை மீறி, சிலர் கடற்கரை பகுதிகளுக்கு செல்வதாக தகவல் கிடைத்துள்ளது.இதனால், அப்பகுதிகளில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர். தடை செய்யப்பட்ட பகுதிகளுக்கு, பொது மக்கள் செல்ல வேண்டாம் என, அறிவுறுத்தப்படுகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE