புது டில்லி: 2020-ன் உலகின் செல்வாக்குமிக்க நூறு பெண்கள் பட்டியலை பி.பி.சி., வெளியிட்டுள்ளது. அதில் உத்தரகண்டைச் சேர்ந்த 13 வயது சிறுமியும் இடம்பெற்றுள்ளார்.

ஆண்டுதோறும் செல்வாக்குமிக்க மற்றும் உத்வேகம் அளிக்கும் பெண்களின் பட்டியலை பிபிசி., வெளியிட்டு வருகிறது. இந்தாண்டு கொரோனா ஏற்படுத்திய மோசமான சூழலில் மாற்றத்தை முன்னெடுத்தவர்களை ஹைலைட் செய்துள்ளனர். அதில் உத்தரகண்டைச் சேர்ந்த 13 வயது சிறுமி ரிதிமா பாண்டே இடம்பெற்றுள்ளார். சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றத்திற்காக மேற்கொண்ட பணிகளுக்கு இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இவருடன் மாற்றுத்திறனாளி பாட்மின்டன் வீராங்கனை மானசி ஜோஷி, தமிழகத்தைச் சேர்ந்த கானா பாடகி இசைவாணி, சி.ஏ.ஏ.,வுக்கு எதிரான ஷாஹீன் பாக் போராட்டத்தில் பங்கேற்ற 82 வயது மூதாட்டி பில்கிஸ் பானோ ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.
ஹரித்வாரைச் சேர்ந்த ரிதிமா பாண்டே கடந்த ஆண்டு ஐ.நா.,வின் பருவநிலை உச்சி மாநாட்டில் கிரெட்டா தன்பெர்க் மற்றும் 14 குழந்தைகளுடன் பங்கேற்றார். பருவநிலை மாற்ற பிரச்னை தொடர்பாக அரசாங்கங்கள் நடவடிக்கை எடுப்பதில்லை என புகார் அளித்தார். மேலும் காற்று மாசை பொது சுகாதார அவசரநிலையாக அறிவிக்க பிரதமர் மோடியை வலியுறுத்தி ஒரு ஆன்லைன் பிரசாரத்தை தொடங்கினார். இந்த ஆண்டு செப்டம்பரில், பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், “எதிர்காலத்தில் குழந்தைகளின் வாழ்வில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் அத்தியாவசியமாகிவிடாது” என்பதை உறுதி செய்யும் படி வலியுறுத்தியிருந்தார்.

இப்பட்டியலில் இடம்பெற்றது குறித்து ரிதிமா பாண்டே கூறியதாவது: இந்த அங்கீகாரம் சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றத்திற்கான காரணங்களுக்காக தொடர்ந்து பணியாற்றவும், போராடவும் என்னை மேலும் ஊக்குவிக்கும். அவை இன்று உலகம் எதிர்கொள்ளும் மிக முக்கியமான பிரச்சினைகளாக உள்ளது. மற்ற சிறுமிகளையும் இப்பிரச்னைகளுக்கு எதிராக போராட தூண்டும். இந்தியாவில் இருந்து இன்னும் பல பெண்கள் இந்த பட்டியலில் இடம் பெறுவார்கள் என்று நான் நம்புகிறேன். இவ்வாறு கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE