பொது செய்தி

தமிழ்நாடு

வீசப்போகும் 'நிவர்' புயல் அதி தீவிரமாகிறது!

Updated : நவ 25, 2020 | Added : நவ 24, 2020 | கருத்துகள் (10+ 12)
Share
Advertisement
சென்னை : வங்கக் கடலில் உருவாகிய, 'நிவர்' புயல், அதி தீவிரமாக உருவெடுத்து வருகிறது. மணிக்கு, 120 முதல், 145 கி.மீ., வேகத்தில், இன்று(நவ.,25) இரவு, புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இப்புயலால், தமிழகம், புதுச்சேரியில், நேற்று முன்தினம் இரவு முதல், கன மழை பெய்து வருகிறது. அதன் காரணமாக, பஸ், ரயில்கள் போக்குவரத்து முடங்கின. மக்கள் நடமாட்டத்தை தடுக்க, தமிழகம்
Cyclone Nivar, Nivar, நிவர், புயல்

சென்னை : வங்கக் கடலில் உருவாகிய, 'நிவர்' புயல், அதி தீவிரமாக உருவெடுத்து வருகிறது. மணிக்கு, 120 முதல், 145 கி.மீ., வேகத்தில், இன்று(நவ.,25) இரவு, புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இப்புயலால், தமிழகம், புதுச்சேரியில், நேற்று முன்தினம் இரவு முதல், கன மழை பெய்து வருகிறது. அதன் காரணமாக, பஸ், ரயில்கள் போக்குவரத்து முடங்கின. மக்கள் நடமாட்டத்தை தடுக்க, தமிழகம் மற்றும் புதுச்சேரி முழுதும், இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


latest tamil news'நிவர்' புயல் காரணமாக, நேற்று முன்தினம் இரவு முதல், சென்னை உட்பட பல மாவட்டங்களில், கன மழை பெய்து வருகிறது. புயல் மற்றும் மழையால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து, மக்களை காக்க, தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. தாழ்வான பகுதி மற்றும் மழை நீர் தேங்கும் பகுதிகளில் உள்ள மக்களை, நிவாரண முகாம்களில் தங்க வைக்க வேண்டும். அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்.


latest tamil news


Advertisementஉஷார்


தாழ்வான பகுதிகளில் தேங்கும் மழை நீரை, உடனடியாக வெளியேற்ற வேண்டும் என, மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.நேற்று மதியம், தென் மேற்கு வங்கக் கடலில், மூன்று மணி நேரமாக நிலை கொண்டிருந்த, 'நிவர்' புயல், அதி தீவிர புயலாக மாறியுள்ளது.
இன்று இரவு, புதுச்சேரி அருகே, கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புயல் கரையை கடக்கும்போது, 100 முதல், 145 கி.மீ., வேகத்தில் காற்று வீசக்கூடும். இதனால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ள, அனைத்து துறைகளும் உஷார்படுத்தப்பட்டுள்ளன. மாவட்டங்களில், கட்டுப்பாட்டு மையங்கள் திறக்கப்பட்டு, மக்கள் உதவிக்கு, 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம் என்று, அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நேற்று மதியம் முதல், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலுார், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில், அரசு பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.


latest tamil news

தயார்


சென்னையில் இருந்து நேற்று இரவு, தென் மாவட்டங்களுக்கு செல்லவிருந்த பஸ்கள் ரத்து செய்யப்பட்டன. முன்பதிவு செய்திருந்த பயணியருக்கு, பணம் திரும்ப வழங்கப்பட்டது. டெல்டா மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்கள், நேற்று முதல் நிறுத்தப்பட்டன.இன்று, தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்கள் மற்றும் சென்னை புறநகர் ரயில்கள் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் மழையில் சிக்கி பாதிக்கப்படாமல் இருக்க, இன்று மாநிலம் முழுதும், பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.சென்னை, எழிலகத்தில் அமைந்துள்ள, மாநில பேரிடர் மேலாண்மை அலுவலகத்தில், புயல் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, முதல்வர் இ.பி.எஸ்., நேற்று ஆய்வு செய்தார்.


latest tamil newsஅதன்பின், நிருபர்களிடம் முதல்வர் கூறியதாவது: 'நிவர்' புயல், இன்று கரையை கடக்கும் என, இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கடலோர மாவட்டங்களில், அதிக மழை பெய்யும். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, மாவட்ட கலெக்டர்களுக்கு, அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.


latest tamil newsமக்கள், எந்த வகையிலும் பாதிக்கப்படக் கூடாது. 3,846 நிவாரண முகாம்கள், தயாராக உள்ளன. தற்போது, 256 பேர், தங்க வைக்கப்பட்டுள்ளனர்.புயல் வருகிறபோது மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். தேவையின்றி வெளியில் செல்லக் கூடாது. ஏழு மாவட்டங்களில், பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இன்று, அரசு அலுவலகங்களுக்கு, விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசியப் பணியில் ஈடுபடும் பணியாளர்கள், பணிக்கு வருவர். மாநிலம் முழுதும், இன்று பொது விடுமுறை விடப்படுகிறது.அதன்பின், நிலைமைக்கேற்ப நடவடிக்கை எடுக்கப்படும்.


latest tamil newsஅனைத்து நிவாரண முகாம்களிலும், தங்க வைக்கப்படுவோருக்கு, தேவையான வசதிகள் செய்து கொடுக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசு அறிவித்த வழிமுறைகளை, மக்கள் பின்பற்ற வேண்டும். யாரும் அச்சப்படத் தேவையில்லை.


latest tamil news


சென்னை, செம்பரம்பாக்கம் ஏரியில், 21.50 அடி நீர் உள்ளது. முழு கொள்ளளவு, 24 அடி. தண்ணீர், 22 அடி வந்ததும், கூடுதல் தண்ணீரை திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஏரி நிரம்பினால், உபரி நீர் திறக்கப்படும்.


latest tamil newsநீண்ட காலமாக துார் வாரப்படாத ஏரிகள் எல்லாம், குடிமராமத்து திட்டத்தில் துார் வாரப்பட்டுள்ளன. எங்கு பாதிப்பு ஏற்பட்டாலும், மக்களை மீட்க, அரசு தயாராக உள்ளது.புயல் வரும்போது, மக்களுக்கு உதவ, 43 ஆயிரத்து, 450 முதல் நிலை மீட்பாளர்கள்; கால்நடைகளை பாதுகாக்க, 8,871 பேர்; மரங்களை அகற்ற, 9,909 பேர்; பேரிடர் மீட்பு பயிற்சி பெற்ற, 5505 காவலர்கள்; 691 ஊர் காவல் படையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் தயாராக உள்ளனர்.இவ்வாறு, அவர் கூறினார்.


latest tamil news
100 கி.மீ., வேகத்தில் சென்னையில் சூறாவளி!


புயல் கரையை கடக்கும்போது, சென்னையில், 100 கி.மீ., வேகத்துக்கு, சூறாவளி காற்று வீசும் என, சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.புயல் கரையை கடக்கும்போது, நாகை, காரைக்கால், கடலுார், திருவாரூர் மாவட்டங்களில், மணிக்கு, 130 கி.மீ., வேகத்திலும், அதிகபட்சம், 145 கி.மீ., வேகத்திலும் சூறாவளி வீசும்.சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில், மணிக்கு, 90 முதல், 100 கி.மீ., வேகம் வரை சூறாவளி காற்று வீசும்.

அதேபோல், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில், இன்றும் மிக கன மழை தொடரும். சென்னையில் நேற்று முன்தினம் இரவு முதல் மழை பெய்து வருகிறது. நேற்று மாலையில் வானம் மேக மூட்டங்களால் சூழப்பட்டு, விட்டு விட்டு மழை கொட்டியது.நேற்று காலை, 8:30 மணி முதல் மாலை, 4:00 மணி வரையில், சென்னை, நுங்கம்பாக்கத்தில், 10 மற்றும் விமான நிலையத்தில், 7 செ.மீ., மழை பெய்துள்ளது.


latest tamil news

முதல்வருடன் பிரதமர் பேச்சு


'புயலை எதிர்கொள்ள, தேவையான உதவிகள் வழங்கப்படும்' என, முதல்வர் இ.பி.எஸ்.,சிடம், பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்.பிரதமர் நரேந்திர மோடி, நேற்று காலை, டெலிபோனில், முதல்வர் இ.பி.எஸ்.,சுடன் பேசினார்.


latest tamil newsதமிழகத்தில், ‛நிவர்' புயல் சம்பந்தமாக எடுக்கப்பட்டுள்ள, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கேட்டறிந்தார்.மேலும், 'மத்திய அரசு சார்பில், தேவைப்படும் உதவி மற்றும் ஒத்துழைப்பு வழங்கப்படும்' என, உறுதி அளித்துள்ளார்.


145 கி.மீ., சூறாவளி காற்றுடன் இன்று இரவு கரை கடக்கும்நேற்று மாலை, சென்னை வானிலை ஆய்வு மையத்தின், தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிவிப்பு: வங்க கடலில் உருவாகியுள்ள, நிவர் புயல், சென்னைக்கு தென் கிழக்கில், 430 கி.மீ., தொலைவிலும், புதுச்சேரிக்கு தென் கிழக்கில், 380 கி.மீ., தொலைவிலும் மையம் கொண்டு உள்ளது. இந்த புயல், இன்று அதிகாலைக்குள் தீவிர புயலாகவும், இன்று பிற்பகலுக்குள் அதி தீவிர புயலாகவும் வலுவடையும்.

இந்த அதி தீவிர புயலானது, தமிழகம், புதுச்சேரி கடற்பகுதியில், காரைக்காலுக்கும், மாமல்லபுரத்துக்கும் இடையே, புதுச்சேரியை சுற்றியவாறு, இன்று இரவுக்குள் கரையை கடக்கும். புயல் கரையைக் கடக்கும்போது, 120 முதல், 130 கி.மீ., வேகத்தில் காற்று வீசும். சில இடங்களில், 145 கி.மீ., வேகம் வரை, அதன் தாக்கம் இருக்கும்.

புயல் கரையை கடக்கும்போது, தமிழகம், புதுச்சேரி கடலோர மாவட்டங்களில், பரவலமாக மிக கன மழை பெய்யும். கடலுார், கள்ளக்குறிச்சி, புதுச்சேரி, விழுப்புரம், திருவண்ணாமலை, பெரம்பலுார், செங்கல்பட்டு, அரியலுார் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதியில், இன்று மிக அதிக கன மழை பெய்யும்.

நெல்லுார் மற்றும் சித்துாரை சுற்றிய, தெற்கு ஆந்திர மாவட்டங்களிலும் கன மழை பெய்யும். இந்த புயலின் காரணமாக, தமிழகம், ஆந்திரா, புதுச்சேரி பகுதிகளில், கடல் மிகவும் கொந்தளிப்பாக காணப்படும். அலை, 1.5 மீட்டரில் இருந்து, 3 மீட்டர் வரை உயரும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.


ரயில்கள் இன்று ரத்து!


புயலால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க, சென்னை, எழும்பூரில் இருந்து, தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் அனைத்து ரயில்களும், இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.

* எழும்பூரில் இருந்து மதுரைக்கு இயக்கப்படும், வைகை, பாண்டியன், மதுரை எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில்கள், காரைக்குடிக்கு இயக்கப்படும் பல்லவன் சிறப்பு ரயில், இன்று இரு வழியிலும் ரத்து செய்யப்பட்டுள்ளன

* எழும்பூரில் இருந்து செங்கோட்டை, திருநெல்வேலி, துாத்துக்குடி, கன்னியாகுமரி, ராமேஸ்வரம் மற்றும் கேரளா மாநிலம், கொல்லத்துக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில், இன்று இரு வழியிலும் ரத்து செய்யப்பட்டுள்ளன

* எழும்பூரில் இருந்து தஞ்சைக்கு செல்லும் உழவன் எக்ஸ்பிரஸ், கொல்லத்துக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் என, 12 சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளனர். ரத்து செய்யப்பட்ட ரயில்களில், முன்பதிவு செய்திருந்த பயணியருக்கு முழு கட்டணம் வழங்கப்படும்

* சென்னை புறநகர் ரயில்கள் அனைத்தும் கூட, இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.


latest tamil news
கன மழையால் விமான சேவைகள் தாமதம்


சென்னை விமான நிலைய ஓடுபாதைகளில் தண்ணீர் தேங்கியதால், இங்கு தரையிறங்க வேண்டிய ஏழு விமானங்கள், ஒரு மணிநேரம் வரை தாமதமாக தரையிறங்கின. கன மழையால் நேற்று இரவு திருச்சி செல்ல வேண்டிய விமான சேவை ரத்து செய்யப்பட்டது.

'நிவர்' புயல் காரணமாக, சென்னை விமான நிலைய பகுதியில், நேற்று பிற்பகல், 3:30 மணி முதல் நல்ல மழை பெய்தது. இதனால், சென்னை விமான நிலைய ஓடுபாதையில் குளம் போல் தண்ணீர் தேங்கியது. இதில், சென்னையில் இருந்து புறப்படும் விமானங்கள், வழக்கம் போல் புறப்பட்டுச் சென்றன. ஆனால், தரையிறங்க வேண்டிய விமானங்கள், இங்கு தரையிறங்க முடியாமல் வானிலேயே வட்டமடித்தன.

பின் மாலை, 5:30 மணிக்கு மேல் மழை சற்று குறைந்ததும், இந்த விமானங்கள், ஒரு மணிநேரம் வரை தாமதமாக, ஒன்றன் பின் ஒன்றாக, சென்னையில் தரையிறங்கின. நேற்று இரவு, 8:35 மணிக்கு திருச்சிக்கு செல்லவிருந்த, விமான சேவை ரத்து செய்யப்பட்டது.


தமிழகத்தை இதுவரை தாக்கிய புயல்கள்


* 1994 அக்., 31: வங்கக்கடலில் உருவான அதிதீவிர புயல், சென்னை அருகே, 130 கி.மீ., வேகத்தில் கரையைக் கடந்தது. கன மழைக்கு, 60 பேர் பலியாகினர். 2004க்கு முன் புயலுக்கு பெயர் நடைமுறை இல்லை.

* 2008 நவ., 26: 'நிஷா' புயல், நாகபட்டினம் - காரைக்கால் இடையே மணிக்கு, 80 கி.மீ., வேகத்தில் கரையைக் கடந்தது.

* 2010 நவ., 1: 'ஜல்' புயல், சென்னை அருகே மணிக்கு, 55 கி.மீ., வேகத்தில் கரையைக் கடந்தது; பாதிப்பு இல்லை.

* 2011 டிச.,: 'தானே' புயல் புதுச்சேரி - கடலுார் இடையே மணிக்கு, 135 கி.மீ., வேகத்தில் கரையைக் கடந்தது. பயிர்கள், மரங்கள், மின்கம்பங்கள் நாசமாகின

* 2012 அக்., 31: 'நீலம்' புயல் மாமல்லபுரம் அருகே கரையைக் கடந்தது; 85 கி.மீ., வேகத்தில் காற்று வீசியது

* 2016 டிச., 12: 'வர்தா' புயல் அதி தீவிர புயலாக மாறி, சென்னை அருகே கரையைக் கடந்தது. 130 கி.மீ., மேல் காற்று வீசியது; 10 பேர் பலியாகினர்; 10 ஆயிரம் மின் கம்பங்கள்
சேதமடைந்தன

* 2017 நவ., 30: அரபிக்கடலில் உருவான, 'ஒக்கி' புயலால் ஏற்பட்ட கன மழையால், தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் பலத்த சேதம் ஏற்பட்டது

* 2018 நவ., 18: 'கஜா' புயல் வேதாரண்யம் அருகே கரையை கடந்தது. மணிக்கு, 110 கி.மீ., வேகத்தில் காற்று வீசியது. டெல்டா மாவட்டங்களில் பெரிதும் பாதிக்கப்பட்டன

* 2020 நவ., 25: வங்கக்கடலில் உருவாகியுள்ள, 'நிவர்' புயல், காரைக்கால் - மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
புயல் தொடர்பான மேலும் படங்களுக்கு :

https://www.dinamalar.com/photogallery_detail.asp?id=52264&cat=Event

Advertisement
வாசகர் கருத்து (10+ 12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
25-நவ-202022:20:29 IST Report Abuse
ஆரூர் ரங் தண்ணிக்குப் பெயர் பெற்ற பாண்டி தண்ணியிலே😇மெதக்குதோ? .
Rate this:
Cancel
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
25-நவ-202021:34:29 IST Report Abuse
Loganathan Kuttuva கல்பாக்கம் அணுமின்நிலையம் மஹாபலிபுரம் அருகில் உள்ளது அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் மிகவும் முக்கியம் .
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
25-நவ-202020:02:02 IST Report Abuse
Bhaskaran தளபதி அறிவிப்பின்படி அனைத்து ரேஷன் கார்டு காரர்களுக்கும் ஐந்தாயிரம் அரசு கொடுக்கணும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X