சென்னை:கூட்டு பட்டாவுக்கு பரிந்துரை செய்ய, 2,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய, வி.ஏ.ஓ., மற்றும் மயான பராமரிப்பு ஒப்பந்த நிறுவனத்திடம், 5,000 ரூபாய் லஞ்சம் பெற்ற சுகாதார ஆய்வாளரை, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.
பணியிடை நீக்கம் சென்னை ஈஞ்சம்பாக்கம், அரிச்சந்திரா தெருவில், மாநகராட்சி மயானம் உள்ளது. இதை, ஆர்.ஆர்.டிரேடர்ஸ் என்ற ஒப்பந்த நிறுவனம் பராமரிக்கிறது. இங்கு, இலவசமாக உடல் தகனம் செய்யப்படுகிறது. ஒரு உடல் தகனம் செய்ய, மாநகராட்சி, 1,200 ரூபாய் ஒப்பந்த நிறுவனத்திற்கு வழங்குகிறது.
இந்த மயானத்தில், 233 உடல்களை தகனம் செய்ததற்கான ரசீதை தணிக்கை செய்ய, 196வது வார்டு சுகாதார ஆய்வாளர் விக்னேஷ்வரன், 35, ஆர்.ஆர்., டிரேடர்ஸ் உரிமையாளர் ரஞ்சித்திடம், 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.இது குறித்து, லஞ்ச ஒழிப்புத் துறையிடம், ரஞ்சித் புகார் அளித்தார்.
போலீசார் வழங்கிய ரசாயன பொடி தடவிய 5,000 ரூபாயை, ரஞ்சித், சுகாதார ஆய்வாளர் விக்னேஷ்வரனிடம் கொடுத்தார். அப்போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், விக்னேஷ்வரனை, கையும், களவுமாக பிடித்து, கைது செய்தனர்.
இவர், இரண்டு ஆண்டுகளுக்கு முன், லஞ்சம் பெற்று சுகாதார சான்றிதழ் வழங்கிய சம்பவத்தில், மாநகராட்சியால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர்.
விழுப்புரத்தில்அதேபோல,
விழுப்புரம் மாவட்டம், காந்தலவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன். இவரது மாமனார் தானமாக கொடுத்த நிலத்திற்கு, மனைவி மகாலட்சுமியின் பெயரையும் சேர்த்து, கூட்டு பட்டா பெற, கள்ளக்குறிச்சி மாவட்டம், மடப்பட்டு, வி.ஏ.ஓ., அலுவலகத்தில் விண்ணப்பித்தார். இந்த விண்ணப்பத்தை தாசில்தார் அலுவலகத்திற்கு பரிந்துரை செய்ய, வி.ஏ.ஓ., மகாலட்சுமி, 36, லஞ்சமாக, 4,000 ரூபாய் கேட்டார். பின், பேரம் பேசி, 2,000 ரூபாய் கொடுத்தே ஆக வேண்டும் என்றார்.இதுகுறித்து, சரவணன், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் அளித்தார்.
போலீசாரின் அறிவுரையின்படி, ரசாயன பொடி தடவிய, 2,000 ரூபாயை, மடப்பட்டு வி.ஏ.ஓ., அலுவலகத்தில், மகாலட்சுமியிடம் நேற்று, சரவணனின் மனைவி மகாலட்சுமி கொடுத்தார். அப்போது, மறைந்திருந்த, லஞ்ச ஒழிப்புத்துறை, டி.எஸ்.பி., யுவராஜ் தலைமையிலான போலீசார், வி.ஏ.ஓ., மகாலட்சுமியை கைது செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE