கள்ளக்குறிச்சி : 'நிவர்' புயல் தாக்கத்தால் பாதிக்கப்படும் மக்களை மீட்க கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை சார்பில் 6 மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.
வங்கக் கடலில் உருவாகியுள்ள 'நிவர்' புயல் காரணமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு 'ரெட் அலர்ட்' விடப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.தண்ணீர் அதிகளவில் தேங்கும் இடங்களில் வசிப்பவர்களை அருகில் உள்ள அரசு கட்டடங்கள், மண்டபங்களில் தங்க வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
மேலும், புயல் தாக்கத்தால் பாதிக்கப்படும் மக்களை மீட்பதற்காக எஸ்.பி., ஜியாவுல் ஹக் உத்தரவின் பேரில், கள்ளக்குறிச்சி, சின்னசேலம், கல்வராயன்மலை, உளுந்துார்பேட்டை, சங்கராபுரம், திருக்கோவிலுார் ஆகிய 6 போலீஸ் நிலையங்களில் மீட்புக் குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.அந்தந்த போலீஸ் நிலையங்களில் உள்ள சப் இன்ஸ்பெக்டர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள மீட்புக் குழுவில், பேரிடர் மேலாண்மை மீட்பு தொடர்பாக பயிற்சி பெற்ற 10 போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.இவர்களுக்கு ரிப்ளக்டர் உடை, கடப்பாரை, மண்வெட்டி, கொடுவாள், கயிறு, டார்ச் லைட் ஆகிய உபகரணங்களும் மரம் அறுக்கும் மற்றும் பொக்லைன் இயந்திரமும் வழங்கப்பட்டுள்ளது.
வெள்ள பாதிப்பு ஏற்படும் இடமாக கருதப்படும் பகுதிகளில் இக்குழுவினர் தயார் நிலையில் இருப்பார்கள்.குறிப்பாக மழை பாதிப்பினால் கல்வராயன்மலை கிராமங்களில் தண்ணீர் சூழ்ந்து நிற்க வாய்ப்புள்ளது. அப்பகுதி மக்கள் வசிப்பிடம் பாதிக்கப்பட்டால் அவர்களை மீட்டு பத்திரமான இடத்திற்கு கொண்டு செல்வது.காற்றின் வேகத்தால் மரம், மின்கம்பம் விழுந்து வீடு சேதமடைந்தால் குடியிருப்பவர்களை மீட்பது. சாலையில் விழும் மரங்களை உடனடியாக அகற்றி போக்குவரத்தை சீரமைப்பது உட்பட போலீசார் கடைபிடிக்க வேண்டிய பல்வேறு செயல்பாடுகள் குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்ட மக்கள் தங்கள் பகுதியில் புயலால் பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் எஸ்.பி., அலுவலகத்திற்கு 75981 21009 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE