கிருஷ்ணகிரி:தி.மு.க.,- எம்.எல்.ஏ., ஜாதி பெயரை கூறி திட்டியதாக, எஸ்.பி.,யிடம், பா.ஜ., வினர் புகார் அளித்தனர்.
கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் அருண்குமார். இவர், அனுமந்தராஜ், அழகேசன் ஆகிய இருவருக்கு தன் நிலத்தை விற்பதாக சொல்லி, 10 லட்சம் ரூபாய் முன் பணம் பெற்று, ஜூன், 19ல் ஒப்பந்த ஆவணம் செய்து கொடுத்துள்ளார்.
பஞ்சாயத்து
ஆனால், நிலத்தை வேறு ஒருவரிடம் அருண்குமார் விற்றுள்ளார். அனுமந்தராஜ், அழகேசனிடம் வாங்கிய பணத்தை திருப்பி தரவில்லை. இவர்கள் மூவரும், ஒரு மாதத்திற்கு முன், கிருஷ்ணகிரி தி.மு.க., - எம்.எல்.ஏ., செங்குட்டுவன் முன்னிலையில், 'பஞ்சாயத்து' பேசினர். அப்போது, பணம் தரமுடியாது என அருண்குமார் சொன்னதால், 'யாரிடம் காட்டுகிறாய் உன் வேலையை, கை, காலை உடைத்து விடுவேன்' என, ஆவேசத்துடன், ஜாதி பெயரை சொல்லி, எம்.எல்.ஏ., செங்குட்டுவன் திட்டியதாக, வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.
இது, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட, பா.ஜ., பட்டியல் அணி தலைவர் ஆனந்தன் தலைமையில், 50க்கும் மேற்பட்டவர்கள் நேற்று, கிருஷ்ணகிரி எஸ்.பி., பண்டிகங்காதரிடம் புகார் அளித்தனர். அதில், 'எம்.எல்.ஏ., செங்குட்டுவன், ஜாதி பெயரால் திட்டியுள்ளார். அவர் பேசியதால், பட்டியலினமக்கள் வேதனை அடைந்துள்ளனர்.
நடவடிக்கை
'அவர் மீது, தேசிய எஸ்.சி., - எஸ்.டி., வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ், நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தெரிவித்துள்ளனர்.எம்.எல்.ஏ., செங்குட்டுவன் கூறியதாவது:முதலில் வெளியான வீடியோவில், நான் பேசும்போது எந்தவிதமான தவறான வார்த்தையும் இருப்பதாக தெரியவில்லை. இரண்டாவது முறையாக, பதிவு செய்யப்பட்டுள்ள வீடியோவில், நான் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை தவறாக பேசியதாக இட்டு கட்டியுள்ளனர். முதலில் வந்த வீடியோவை கிராபிக்ஸ் செய்து, எனக்கு வேண்டாதவர்கள் வெளியிட்டுள்ளனர்.
இந்த வீடியோவை வைத்து, பா.ஜ.,வினர் அரசியல் செய்கின்றனர். நான் எந்த சமுதாயத்தையும் தவறாக பேசவில்லை. அந்த வீடியோ உண்மை இல்லை. இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE