கோவை:கோவை மாநகராட்சியில், துாய்மை பணிக்கு சமீபத்தில் வேலைக்கு எடுத்த பட்டதாரிகளை, வரி வசூலராக நியமித்ததற்கு, அலுவலர்கள் மத்தியில் புகைச்சல் உருவாகியுள்ளது.
கோவை மாநகராட்சியில், 549 துாய்மை பணியாளர் பணியிடம் காலியாக இருந்தது. பட்டதாரிகள் உட்பட, 7,300 பேர் விண்ணப்பித்தனர்; நேர்காணலில், 5,200 பேர் பங்கேற்றனர். இட ஒதுக்கீடு அடிப்படையில், விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, 326 பேருக்கு வேலை வழங்கப்பட்டது.இதில், வேலைக்குச் சேர்ந்த பட்டதாரிகள் பலரும், துாய்மை பணிக்குச் செல்லாமல், அலுவலக வேலையே ஒதுக்க வேண்டுமென, 'அடம்' பிடிக்கின்றனர். அவர்களுக்கு பணி ஒதுக்க முடியாமல், அதிகாரிகள் திணறுகின்றனர்.
'கொரோனா' கட்டுப்பாட்டு மைய வேலை ஒதுக்கினாலும், இரவு 'ஷிப்ட்' ஒதுக்கக் கூடாதென முரண்டு பிடிக்கின்றனர். ஆளுங்கட்சி செல்வாக்கை பயன்படுத்தி, வேலைக்கு வந்தவர்கள், தங்களுக்கு குப்பை அள்ளும் பணியும் ஒதுக்கக்கூடாது; இரவு பணியும் ஒதுக்கக் கூடாது என, நெருக்கடி கொடுக்கின்றனர். இவர்களில் ஏராளமானோர் வேலை செய்யாமலேயே, சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கின்றனர்.
இச்சூழலில், மாநகராட்சி வடக்கு மண்டலத்தில், மூன்று துாய்மை பணியாளர்களுக்கு வரி வசூலர் பணியும், ஒருவருக்கு ஆறு வார்டுகளில் புதிய குடிநீர் இணைப்பு வழங்குவது தொடர்பான பணியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இது, அலுவலர்கள் மத்தியில் புகைச்சலையும், மனகசப்பையும் ஏற்படுத்தியுள்ளது.ஏனெனில், மாநகராட்சி அலுவலகங்களில் இளநிலை உதவியாளர்களாக பலர் பணிபுரிகின்றனர்; பதிவுரு எழுத்தர்கள் இருக்கின்றனர்.
நிரந்தர துாய்மை பணியாளர்களில் பலர், பட்டம் படித்து, சீனியாரிட்டி அடிப்படையில், மாற்றுப்பணிக்கு காத்திருக்கின்றனர்.அவர்களுக்கு பணி ஒதுக்கீடு வழங்காமல், புதிதாக வேலைக்குச் சேர்ந்தவர்கள் மற்றும் ஓராண்டு கூட அனுபவம் இல்லாதவர்களுக்கு, மிக முக்கிய பணியான, வரி வசூலர் பொறுப்பு வழங்கியிருப்பது, நெருடலை ஏற்படுத்தியிருக்கிறது.மாநகராட்சி அலுவலர்கள் கூறுகையில், 'இளநிலை உதவியாளராக இருந்தால் மட்டுமே, வரி வசூலராக நியமிக்க முடியும். தவிர்க்க முடியாத பட்சத்தில், பதிவுரு எழுத்தர் நியமிக்கப்படுவர்.
பணம் கையாளும் பணி என்பதால், ஒவ்வொருவரிடமும் முன்னரே, ஒரு லட்சம் ரூபாய் வரை, 'டிபாசிட்' பெறுவது வழக்கம்.அந்நடைமுறையை தற்போது பின்பற்றுவதில்லை. இச்சூழலில், ஓராண்டு கூட பணி நிறைவு செய்யாத, புதிதாக துாய்மை பணிக்கு வேலைக்கு எடுத்தவர்களுக்கு, வரி வசூலர் பொறுப்பு கொடுத்திருப்பது தவறான நடைமுறை. பணம் கையாடல் பிரச்னை ஏற்பட்டால், சிக்கலான சூழல் உருவாகும்' என்றனர்.
ஓராண்டு கூட பணி நிறைவு செய்யாத, புதிதாக துாய்மை பணிக்கு வேலைக்கு எடுத்தவர்களுக்கு, வரி வசூலர் பொறுப்பு கொடுத்திருப்பது தவறான நடைமுறை. பணம் கையாடல் பிரச்னை ஏற்பட்டால், சிக்கலான சூழல் உருவாகும்.நிரந்தர துாய்மை பணியாளர்களில் பலர், பட்டம் படித்து, சீனியாரிட்டி அடிப்படையில், மாற்றுப்பணிக்கு காத்திருக்கின்றனர். அவர்களுக்கு பணி வழங்காமல், புதிதாக வேலைக்குச் சேர்ந்தவர்கள் மற்றும் ஓராண்டு கூட அனுபவம் இல்லாதவர்களுக்கு, வரி வசூலர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE