லக்னோ : திருமணத்துக்காக மதம் மாற்றம் செய்தால், 10 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கும் அவசர சட்டத்துக்கு, உத்தர பிரதேச அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்துள்ளது. மாநில அமைச்சரவை கூட்டம், நேற்று நடந்தது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, மாநில அமைச்சர் சித்தார்த் நாத் சிங் கூறியதாவது:
திருமணம் செய்வதற்காக, மதம் மாற்றப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. சில இடங்களில் காதலித்து, கட்டாயப்படுத்தி, மதமாற்றம் செய்யப்படுகிறது. இதனால், சட்டம் - ஒழுங்கு பிரச்னையும் ஏற்படுகிறது. இதை தடுக்கும் வகையில், திருமணத்துக்காக மதமாற்றம் செய்வதை குற்றமாக்கும் வகையில், அவசர சட்டம் அமல்படுத்த, அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.

இந்த சட்டத்தின்படி, மதமாற்றம் செய்தால், 1 முதல் ஐந்து ஆண்டு சிறை, 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.இளம் சிறுமியர், எஸ்.சி., - எஸ்.டி., மற்றும் பழங்குடியின பெண்களை மதமாற்றம் செய்து திருமணம் செய்தால், 3 - 10 ஆண்டு சிறை, 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். ஒரு குழுவாக மதமாற்றம் செய்தால், அதில் ஈடுபடும் அமைப்புக்கு, 3 - 10 ஆண்டு சிறை மற்றும் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
அதே நேரத்தில், திருமணத்துக்குப் பிறகு மதம் மாறுவதற்கு அனுமதி அளிக்கப்படும். ஆனால், மாவட்ட கலெக்டரிடம், இரண்டு மாதங்களுக்கு முன்பே விண்ணப்பித்து, அனுமதி பெற வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.
'ஹிந்து பெண்களை காதலித்து, கட்டாயப்படுத்தி மாதம் மாற்றி, திருமணம் செய்யும், 'லவ் ஜிகாத்' சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. 'இதற்கு தடை விதிக்கும் வகையில் அவசர சட்டம் அமல்படுத்தப்படும்' என, பா.ஜ., ஆளும், உத்தர பிரதேசம், ஹரியானா, மத்திய பிரதேச அரசுகள் கூறி வருகின்றன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE