ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டத்தில் கொசு மருந்து வாங்கியதில் ரூ.6 கோடி வரை மோசடி நடந்திருப்பதாக வந்த புகாரை தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுகாதாரத்துறை சார்பில் மாவட்டத்தில் மலேரியா, டெங்கு ஒழிப்பு நடவடிக்கையாக கொசு மருந்து தெளித்தல், கொசு முட்டைகளை அழிக்க குட்டைகள், திறந்த நிலை வீட்டு கிணறுகளில் மருந்து தெளித்தல், கொசுக்களை அழிக்கும் மீன்களை விடுதல், 1.27 லட்சம் வீடுகளுக்கு கொசு வலை வழங்குதல் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
மலேரியா, டெங்கு ஒழிப்பு பணியில் 2018-20 வரை ஆல்பா, சைபர் மெத்தலின் பவுடர், அபேட், பைத்திரியம் உள்ளிட்ட கொசு ஒழிப்பு மருந்துகள் வாங்கப்பட்டுள்ளது. சைபர் மெத்தலின் மட்டும் ஆண்டிற்கு 7000 கிலோ வாங்கப்பட்டதாக கூறப்படுகிறது.ஆனால் இந்த மருந்து தெளிக்கப்படவில்லை என்பதும், கடந்த இரண்டு ஆண்டுகளில் 3000 கிலோ மட்டுமே வாங்கப்பட்டதும் தணிக்கையில் தெரிய வந்துள்ளது.
இது குறித்து ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவுக்கு புகார்கள் சென்றன.அதன் அடிப்படையில் ரூ.6 கோடி வரை கொசு மருந்து பவுடர் உள்ளிட்ட மருந்துகள் வாங்கப்பட்டதில் முறைகேடு நடந்திருக்கலாம், என தெரிவிக்கப்பட்டுள்ளது.சுகாதாரப் பணிகள் முன்னாள் துணை இயக்குனர்கள், மலேரியா அலுவலர் உள்ளிட்டோரிடம் லஞ்ச ஒழிப்பு போலீஸ் டி.எஸ்.பி., உன்னிகிருஷ்ணன் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுகாதாரத்துறை துணை இயக்குனர் செந்தில்குமாரிடம் கேட்ட போது, கொசு மருந்து வாங்கியது தொடர்பான புகாரின் பேரில் ஊழல் தடுப்பு பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். புகார் மீது முகாந்திரம் உள்ளதா என்பதை அவர்கள் கூறிய பிறகே துறை ரீதியான விசாரணை நடத்த முடியும், என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE