புதுச்சேரி:'நிவர்' புயல் காரணமாக, புதுச்சேரியில், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நிவர் புயல் காரணமாக, புதுச்சேரியில் நேற்று முன்தினம் இரவில் இருந்தே மழை பெய்து வருகிறது. கடல் மிகவும் கொந்தளிப்பாக உள்ளது; பலத்த சூறைக்காற்றும் வீசுகிறது. மீனவர்கள் யாரும், கடலுக்குள் செல்லவில்லை. துறைமுகப் பகுதியிலோ அல்லது மிக அருகிலோ, புயல் கரையை கடக்கக் கூடும் என்பதை எச்சரிக்கும் வகையில், புதுச்சேரி துறைமுகத்தில், 7ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு, ஏற்றப்பட்டுள்ளது.
நிவர் புயலை எதிர்கொள்வதற்கு, பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை, புதுச்சேரி அரசு எடுத்து வருகிறது. புதுச்சேரியில், பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது. இரண்டாவது நாளாக இன்றும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதுபோல, அரசு அலுவலகங்களுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி, காரைக்காலில் பஸ் போக்குவரத்து, நேற்று மாலையில் இருந்து நிறுத்தப்பட்டு உள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மீட்பு பணிகளை மேற்கொள்வதற்காக, 135 வீரர்களை கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் வந்துள்ளனர். மேலும், புயல் வீசும்போது பொதுமக்கள் நடமாட்டத்தை தடுப்பதற்காக, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
'பொது இடங்களில் தனியாகவோ, கும்பலாகவோ யாரும் நடமாடக் கூடாது. வீடுகளுக்குள் அனைவரும் இருக்க வேண்டும். மேலும், அனைத்து கடைகள், நிறுவனங்கள் மூடப்பட வேண்டும். 'இந்த உத்தரவு, நேற்று இரவு, 9:00 மணியில் இருந்து, நாளை 26ம் தேதி காலை, 6:00 மணி வரை அமலில் இருக்கும்' என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE