திருப்பூர்:திருப்பூர், அரசு மருத்துவ கல்லுாரியில் டெங்கு காய்ச்சலுக்கு தனிப்பிரிவு ஒதுக்கப்பட்டு, சுகாதார பராமரிப்புக்கு மருத்துவ பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.அவ்வப்போது மழை பெய்து வருவதால், காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு, பலரும் சளி, காய்ச்சல் மற்றும் உடல் வலியால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பு ஒருபுறமிருக்க டெங்கு பாதிப்பும் காணப்படுகிறது. மருத்துவமனைகள் மற்றும் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில், காய்ச்சலுக்காக சிகிச்சைக்கு வருவோர் எண்ணிக்கை, வழக்கத்தை விட அதிகமாகக் காணப்படுகிறது.இதில், திருப்பூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், காய்ச்சலால் பாதிக்கப்படுவோருக்கு தனியாக சிகிச்சை அளிக்கும் வகையில் பிரத்யேக வார்டு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. நோயாளிகளின் பாதுகாப்பு கருதி, கட்டில்கள் தோறும், தனித்தனியாக கொசு வலை அமைக்கப்பட்டுள்ளது. அதேநேரம், காய்ச்சல் நோயாளிகளை, சுகாதாரமான முறையில் பராமரிக்கவும் மருத்துவ பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.மருத்துவ கல்லுாரி 'டீன்' வள்ளி கூறுகையில், ''காய்ச்சல் பாதிப்பு அதிகம் என்பதால், மருத்துவமனை வார்டுகளில், துாய்மை பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. உள்நோயாளிகளாக காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையை குறைக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காய்ச்சல் நோயாளி மட்டுமின்றி அவர்களின் குடும்பத்தார் இடையேயும் நோய் தடுப்பு நட வடிக்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE