சென்னை:தமிழகத்தில், நேற்று ஒரே நாளில் மட்டும், ஆபரண தங்கம் விலை அதிரடியாக, சவரனுக்கு, 864 ரூபாய் சரிந்தது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஏற்பட்டுள்ள மாற்றம் உள்ளிட்ட சர்வதேச நிலவரங்களால், உள்நாட்டில், தங்கம் விலை குறைந்து வருகிறது.தமிழகத்தில், நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம், 1 கிராம், 4,748 ரூபாய்க்கும்; சவரன், 37 ஆயிரத்து, 984 ரூபாய்க்கும் விற்பனையாகின. 1 கிராம் வெள்ளி, 66.30 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
நேற்று ஒரே நாளில், தங்கம் கிராமுக்கு, 108 ரூபாய் குறைந்து, 4,640 ரூபாய்க்கும்; சவரனுக்கு, 864 ரூபாய் சரிந்து, 37 ஆயிரத்து, 120 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு, 1.80 ரூபாய் குறைந்து, 64.50 ரூபாய்க்கு விற்பனையானது.
இது குறித்து, சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி கூறியதாவது:கொரோனா தாக்கத்தால், உலகளவில் தொழில் துறை மந்தமாக இருந்தது. தற்போது, அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளில், இரண்டு, மூன்று பெரிய நிறுவனங்கள், கொரோனா பாதிப்பை குணப்படுத்துவதற்கான மருந்துகளை கண்டுபிடித்துள்ளன.இதனால், தொழில் துறை நல்ல நிலைக்கு திரும்பும் என்பதால், பங்கு சந்தைகளில், அந்த துறை சார்ந்த பங்குகள் உயர துவங்கும்.
முதலீட்டாளர்கள், தொழில் துறை சார்ந்த பங்குகளில் முதலீட்டை அதிகரிப்பர். தங்கம் மீதான முதலீடு குறையும்.இதன் விளைவாக, சர்வதேச சந்தையில், தங்கம் விலை குறையும். இதனால் தான், தற்போது, உள்நாட்டில், தங்கம் விலை குறைந்துள்ளது. இன்னும், ஓரளவு குறைந்த பின், தங்கம் விலை மீண்டும் அதிகரிக்கும். இந்த ஆண்டு இறுதியில், தங்கம் விலை புதிய உச்சத்தை எட்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE