பொள்ளாச்சி:கிணத்துக்கடவு, பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய பகுதியில், பனியின் ஈரத்தை மட்டுமே நம்பி, 250 ஏக்கரில் பனிக்கடலை விதைப்பு துவங்கியுள்ளது.பொள்ளாச்சி வடக்கு ஒன்றியம், மற்றும் கிணத்துக்கடவு ஒன்றியத்தின் கிழக்கு பகுதி விளை நிலங்கள், வளம் மிக்க களிமண் பூமியாகும்.இந்த மண்ணில் பல்வேறு பயிர் சாகுபடி இருப்பினும், பாசனம் தேவையில்லாத, மானாவாரி நிலத்தில், ஐப்பசி, கார்த்திகை மற்றும் மார்கழி மாத பனியை மட்டுமே நம்பி, பனிக்கடலை சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது.பனிக்கடலை அறுவடை முடிந்ததும், நிலத்தை நன்கு உழுது, சுமார் எட்டு மாத காலம் மாற்றுப்பயிர் ஏதும் சாகுபடி செய்யாமல் விடப்படுகிறது. வடகிழக்கு பருவமழை காலத்தில், பனிக்கடலை விதைப்பு மேற்கொள்ளப்படுகிறது.காட்டம்பட்டிபுதுார் விவசாயி ஜெகநாதன் கூறியதாவது:பனிக்கடலை பயிர் அறுவடைக்கு பின், உழுத நிலம், எட்டு மாத காலத்துக்கு வேறு பயிர் சாகுபடி செய்யப்படுவதில்லை. ஐப்பசியில் வடகிழக்கு பருவமழைக்கு ஈரமான நிலத்தில், ஏக்கருக்கு ஒரு மூட்டை வீதம் டி.ஏ.பி., உரமிட்டு, பனிக்கடலை விதைப்பு மேற்கொள்ளப்படுகிறது.இடையிடையே களைபறிப்பு மட்டும் செய்ய வேண்டும். செடிகள் நன்கு வளர்ந்து பூவெடுக்கும். அந்த நேரத்தில் மழை பெய்யக்கூடாது. பிஞ்சு காயாகி, நான்காவது மாதத்தில், அறுவடை செய்யப்படுகிறது. ஏக்கருக்கு, 600 - 800 கிலோ பனிக்கடலை கிடைக்கும். கிலோ, 50 ரூபாய்க்கு விற்பனையானாலும், 40 ஆயிரம் ரூபாய் வரை ஆதாயம் கிடைக்கும்.காட்டம்பட்டிபுதுார், அடிவெள்ளி, பூசாரிபட்டி, நாகூர், ஜக்கார்பாளையம் பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வரை, கூடுதல் பரப்பளவில் பனிக்கடலை சாகுபடி செய்யப்பட்டது. தற்போது, 200 - 250 ஏக்கரில் மட்டுமே சாகுபடி நடக்கிறது.ஆட்கள் பற்றாக்குறை, பல்வேறு காரணங்களால் பனிக்கடலை சாகுபடி பரப்பு வெகுவாக குறைந்துள்ளது. விளைவிக்கப்படும் பனிக்கடலையை அரசு கொள்முதல், சாகுபடி பரப்பு மேலும் குறையாமல் தடுக்க முடியும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE