புதுடில்லி:உரிமை மீறல் வழக்கு தொடர்பாக தனக்கு மிரட்டல் கடிதம் அனுப்ப உத்தரவிட்ட மஹாராஷ்டிரா சபாநாயகருக்கு 'நோட்டீஸ்' அனுப்பக் கோரி 'ரிபப்ளிக் டிவி' ஆசிரியர் அர்னப் கோஸ்வாமி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
பாலிவுநுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை தொடர்பான 'டிவி' விவாதத்தில் மஹாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே குறித்து சர்ச்சை கருத்துக்களை கூறியது தொடர்பாக அர்னப் கோஸ்வாமி மீது அம்மாநில சட்டசபையில் உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பதில் அளிக்கும்படி மஹாராஷ்டிரா சட்டசபை சபாநாயகர் நானா படேல் அனுப்பிய கடிதங்களுக்கு அர்னப் பதில் அளிக்கவில்லை.இதையடுத்து அர்னப் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக சட்டசபை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இதை அர்னப் ரிபப்ளிக் டிவியில் வெளியிட்டார். அத்துடன் உரிமை மீறல் நோட்டீசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அதில் சட்டசபை கூட்டத்தில் நடந்த விவாதங்களையும் அர்னப் குறிப்பிட்டிருந்தார்.அந்த மனுவிற்கு பதில் அளிக்கும்படி சட்டசபை செயலர் விலாஸ் அதவாலேவுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.இதையடுத்து அர்னப்பிற்கு சட்டசபை செயலர் விலாஸ் அதவாலே நோட்டீஸ் அனுப்பினார். அதில் 'சட்டசபையில் நடந்ததை சபாநாயகர் அனுமதியின்றி உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தமைக்கு ஏன் உரிமை மீறல் நடவடிக்கை எடுக்கக் கூடாது' என கேட்கப்பட்டிருந்தது.
இதையடுத்து அர்னப் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் நீதிமன்ற அவமதிப்பு தொடர்பாக விலாஸ் அதவாலேவுக்கு நோட்டீஸ் அனுப்பியது.அதற்கு சபாநாயகர் நானா படேல் உத்தரவின்படி அர்னாபுக்கு நோட்டீஸ் அனுப்பியதாக விலாஸ் அதவாலே பதில் அளித்தார்.இதையடுத்து நானா படேலுக்கு நோட்டீஸ் அனுப்பும்படி அர்னப் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.அப்போது 'விலாஸ் அதவாலே அளித்த பதில் அறிக்கையை முழுமையாக படிக்கவில்லை' என தெரிவித்த அமர்வு அர்னப் மனு மீதான விசாரணையை இரு வாரங்களுக்கு தள்ளி வைத்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE