பொள்ளாச்சி:ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனக்கோட்டத்தில், 'புலி குட்டீஸ்' என்ற பெயரில், பழங்குடியின மாணவர்களுக்கான மாலை நேர தனிப்பயிற்சி வகுப்புகள் துவங்கப்பட்டு உள்ளன.ஆனைமலை புலிகள் காப்பகம், பொள்ளாச்சி வனக்கோட்டத்தில், பொள்ளாச்சி, வால்பாறை, உலாந்தி, மானாம்பள்ளி வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களில், 17 செட்டில்மென்ட் குடியிருப்புகள் உள்ளன.இங்குள்ள பழங்குடியின மாணவர்கள், பள்ளிகளில் பயின்று வருகின்றனர். பல கி.மீ., துாரம் பயணித்து கல்வி கற்பது தொடர்கிறது. தற்போது, கொரோனா பரவல் கட்டுப்படுத்த பள்ளிகளும் திறக்கப்படாமல் உள்ளது.புதிய திட்டம்இதனால், பழங்குடியின மாணவர்களுக்கு கல்வி கற்பித்தலில் இடையூறு ஏற்படுகிறது. இப்பகுதியில் உள்ள மாணவர்களுக்கு கல்வி அறிவு அளிக்க, வனத்துறையினர், 'புலி குட்டீஸ்' என்ற மாலை நேர தனிப்பயிற்சி வகுப்பு திட்டத்தை துவங்கியுள்ளனர்.பழங்குடியின குடியிருப்பு பகுதிகளில் வகுப்புகள் துவங்கப்பட்டு அனைத்து பாடங்களும் கற்பிக்கப்படும். அதனுடன் மாணவர்களின் பாரம்பரியம் மாறாமல் கலைகள், கலாசாரமும் கற்றுத்தரப்படுகிறது.வேலைவாய்ப்பு'புலி குட்டீஸ்' திட்டத்தில், குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் படித்த இளைஞர்களை கொண்டு பாடம் நடத்த வனத்துறை திட்டமிட்டுள்ளது. இதனால், எளிதில் அவர்களை அணுகி கல்வியை முறையாக கற்றுத்தர முடியும். இதற்காக, வனத்துறை அல்லது சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்குழு சார்பில் சம்பளம் வழங்க வனத்துறை முடிவு செய்துள்ளது.கொரோனா ஊரடங்கு முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டாலும், இந்த திட்டம் தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும்.கைகொடுக்கும்பொள்ளாச்சி வன கோட்டம் துணை இயக்குனர் ஆரோக்கியராஜ் சேவியர் கூறுகையில், ''பழங்குடியின மாணவர்களை கொண்டு, பழங்குடியின மாணவர்களுக்கு, மாலை நேர தனிப்பயிற்சி வகுப்பு துவங்கப்பட்டு உள்ளது. டாப்சிலிப், கூமாட்டி உள்ளிட்ட பகுதியில் பயிற்சி வகுப்பு நடக்கிறது.தொடர்ந்து அனைத்து பழங்குடியின கிராமங்களிலும், இந்த வாரத்துக்குள் பயிற்சி வகுப்பு துவங்கப்படும். பயிற்சி வகுப்புகளுக்கு தேவையான வசதிகளும் மேம்படுத்தி தரப்படும். பழங்குடியின மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுப்பதுடன், கல்வியும் முறையாக கற்றுத்தர இந்த திட்டம் கைகொடுக்கும்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE